states

img

மத்திய அரசே தடுப்பூசி வாங்கித் தர வேண்டும்... கூட்டாக கோரிக்கை விடுக்க முன் வாருங்கள்.... பாஜக அல்லாத முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்.....

திருவனந்தபுரம்:
தடுப்பூசி நேரடியாக மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு இலவசமாக மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கூட்டாகக் கோருமாறு பாஜக அல்லாதமுதலமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கோவிட்டின் இரண்டாவது அலையை நாடு கடந்து செல்லும்போது, மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான தனது பொறுப்பை கைவிடுவது என்கிற மோசமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் தடுப்பூசி எங்கு கிடைக்கும் என தாங்களாகவே கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. இருப்பினும், தடுப்பூசி மிகவும் குறைந்த அளவுகளில் மட்டுமே கிடைக்கிறது. மறுபுறம், வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி கிடைக்க மாநில அரசுகளுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட தயங்குகின்றன. எனவே, அனைத்து மாநிலங்களின் தடுப்பூசி தேவைகளையும் கருத்தில் கொண்டு உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமருக்கு கேரளம் கடிதம் அனுப்பி யிருந்தது.

இரண்டாவது அலைக்குப் பிறகு மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். அப்படியானால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக, உலகளாவிய தடுப்பூசி மூலம் பரம்பரை நோய் எதிர்ப்புசக்தியை வளர்ப்பது முக்கியம். எனவே,தடுப்பூசி பொது நலனுக்காக உலகளவில் கிடைக்க வேண்டும். பணம் இல்லாத காரணத்தால் யாருக்கும் தடுப்பூசி மறுக்க முடியாது. தடுப்பூசியை பெறுவதற்கான முழுப் பொறுப்பு மாநிலங்களின் மீது சுமத்தப்பட்டால், மாநிலங்களின் பொருளாதார நிலை மோசமடையும். இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். அதற்கு சவால் விடுப்பது நமது கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் - ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதற்கெல்லாம் மேலாக, பரம்பரை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியில் தடைகளை உருவாக்கிவிட முடியும்.

பரம்பரை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டுமானால் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் தடுப்பூசி போடவேண்டும். நாட்டில் 3.1 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. மறுபுறம், தடுப்பூசி கிடைப்பதன் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர்கள் முயற்சிக்கின்றனர். தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பலபொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமைச் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் பொதுத் துறையில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதைத் தடுக்காது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கட்டாய உரிமம் உள்ளிட்ட சாத்தியங்களை மத்திய அரசு ஆராய வேண்டும்.

தடுப்பூசி கிடைக்கச் செய்வதற்கான முழுப் பொறுப்பும் மாநில அரசுகளுக்கு உள்ளதாக கூறும் அறிக்கைகள், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு சவால் விடுப்பதாகும். இந்த கட்டத்தில், மாநிலங்கள் கூட்டாக தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து, தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு நேரடியாக வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இது செலவைக் குறைக்கும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;