states

img

நீதி பறிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கதை - நர்மதா தேவி

குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது, கடந்த 2002ஆம் ஆண்டில், ‘கோத்ரா ரயிலில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டார்கள்’ எனக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் இஸ்லாமியர்களை வேட்டையாடின. இந்த இனப் படுகொலையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக பல்வேறு வழக்குகள் தொடுத்து, மிக நீண்ட நீதிப் போராட்டங்களை நடத்தினார்கள். இன்றைக்கும் நடத்தி வருகிறார்கள். அந்த வழக்கின் தீர்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை நாம் நன்கறிவோம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கின் சமீபத்திய தீர்ப்பை நாம் அறிவோம். ‘அகமதாபாத் குல்பர்க் காலனியில் தனது கணவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குஜராத் அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது’ என்று அவர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் உலகின் மிக மோசமான ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய டீஸ்டா செதல்வாத், காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் உள்ளிட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது குஜராத் அரசாங்கம். இப்படி 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதோடு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நிலையாக மென்மேலும் அவர்களை துன்புறுத்தி வருகின்றன பாஜகவின் மாநில, ஒன்றிய நிர்வாக அமைப்புகள். என்றாலும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மிகச் சிலருக்கு நீதியும் கிடைத்தது. அதில் ஒருவர் பில்கிஸ் பானு.

பானுவின் துயரக் கதை

பில்கிஸ் பானு என்ற அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு அப்போது 21 வயது. 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது 3 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு கோத்ரா பகுதிக்கு அருகில் வசித்துவந்த தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் நடத்திய வன்முறை காரணமாக, பானுவும் அவரது உறவினர்களும் வீடுகளில் இருந்து வெளியேறி, பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்து, தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினார்கள். ஒரு கட்டத்தில் வன்முறையாளர்களிடம் அவர்கள் சிக்கிக்கொண்டபோது, பானுவின் 14 உறவினர்களை காவி வெறியர்கள் கொன்று குவித்தார்கள். ஷைலேஷ்பாய் பட் என்பவன் பானுவின் 3 வயது குழந்தையின் தலையை தரையில் பாறையில் அடித்தே கொன்றான். அதன்பிறகு அந்த சங்பரிவார மிருகங்கள் பானுவை குரூரமாக வன்புணர்வு செய்து, சாகும் அளவிற்கு அவரைத் தாக்கிவிட்டு, சாகட்டும் என அவரைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றார்கள். ஆனால், பானு உயிர் மிஞ்சியிருந்தது. எப்படியோ தப்பிப் பிழைத்தார். கொல்லப்பட்ட அவருடைய உறவினர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத வகையில்  தலைகள் கொய்யப்பட்டு முண்டங்களாக்கப்பட்டு சிதைக்கப்பட்டன. இந்த அடையாளச் சிதைப்பில் காவல்துறைக்கும் பங்கிருந்தது. இந்த அளவிற்குத் தனக்குக் கொடுமை இழைத்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனைபெற்றுத் தரப் போராடினார் பானு.  குஜராத்தில் இருந்து வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணைக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்தது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

அப்பாடா! பில்கிஸ் பானுவிற்கு ஒரு வழியாக நியாயம் கிடைத்தது என்று நாம் கருதலாமா? 75ஆம் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடந்த வேளையில், அந்த நீதி பறிக்கப்பட்டுவிட்டது. ஆறிவரும் புண்ணை மீண்டும் கத்தியால் கிழித்து ரணமாக்குவது போன்ற காரியமாக, பில்கிஸ் பானு மீது இத்தகைய அதீத வன்முறையை நிகழ்த்திய அந்த 11 கொடிய கயவர்களை, ‘நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கிறோம்’ என்ற பெயரில் குஜராத் பாஜக அரசாங்கம் ஆகஸ்ட் 15 அன்று விடுவித்தது. சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி சிறைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் அவர்களுடைய தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சுதந்திரத் தினத்தை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான விதிகளை ஒன்றிய அரசாங்கம் கடந்த ஜூன் 10 அன்று வெளியிட்டது. அதில், மிகத்தெளிவாக ‘பாலியல் வன்புணர்வு, போக்சோ, வரதட்சணைக் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படக்கூடாது’ என்று தெரிவித்துள்ளது. இதன் உள்ளார்ந்த பொருள் பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அவை குற்றங்களிலேயே கொடூரமான குற்றம் என்பதே. ஆனால், ஒன்றிய அரசின் விதிகளையும் மீறி, குஜராத் பாஜக அரசாங்கம் பில்கிஸ் பானு வழக்கின் 11 குற்றவாளிகளை 75 ஆவது சுதந்திர தினத்தன்று விடுவித்தது. சிறையைவிட்டு அவர்கள் வெளிவந்து வாயிற்கதவின் முன்னால் வரிசையாக நிற்கிறார்கள். 3 வயதுக் குழந்தையை பாறையில் அடித்துக்கொன்ற அந்தப் படுபாதகன் ஷைலேஷ்பாய் பட்டும் நிற்கிறான். ஏதோ சுதந்திரப் போராட்டத் தியாகிகளை வரவேற்பது போல, விஸ்வ இந்து பரிஷத் குண்டர்களும், குற்றவாளிகளின் ஆதரவாளர்களும் அந்த கொடூரர்களுக்கு மாலைபோட்டு இனிப்பு கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்களின் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். இந்தக் காட்சி நமது மனதை ரணமாக்குகிறது. நாகரீக சமூகத்தில்தானா நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. காஷ்மீர் கத்துவாவில் கோவில் வளாகத்தில் பலநாட்கள் அடைத்துவைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த 8 வயது இஸ்லாமிய சிறுமி நமது கண்முன்னே தோன்றி மறைகிறாள். இனி இந்த நாட்டில் கத்துவா சிறுமிக்கெல்லாம் நியாயம் கிடைக்குமா என்ற வலிமிக்க கேள்வி நம்மை வதைக்கிறது.

குஜராத் அரசாங்கம் எந்த அடிப்படையில் விடுவித்தது?

தண்டைக்குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் பக்வான்தாஸ் ஷா என்பவர், ‘15 ஆண்டுகளை நான் சிறையில் கழித்துவிட்டேன். குஜராத் அரசாங்கம் என்னை,  ‘தண்டனைக்காலம் முடியும் முன்னர் சிறைக்கைதிகளை விடுவிக்கும் குஜராத் மாநில விதிகள் - 1992’ அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மகாராஷ்டிரத்தில் வழக்கு முடிக்கப்பட்டதால் இந்த மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் நீதிமன்றம். மனுதாரர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். கடந்த மே மாதம் 31ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குற்றம் குஜராத்தில் நடந்ததால், வழக்கு முடிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் விடுவிப்பு விதிகளுக்கு உட்பட்டு மனுதாரரை விடுவிக்க வேண்டியதில்லை; குஜராத்  மாநில விதிகளுக்கு உட்பட்டே விடுவிக்கலாம்; மனுதாரர் கோருகிறபடி, வழக்கின் தீர்ப்பு 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதால், அன்றைக்கு குஜராத்தில் அமலில் இருந்த 1992 விதிப்படி, தண்டனைக்காலம் முடியும் முன்பு விடுவிக்கும் விதிகள் அடிப்படையில் குஜராத் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்குள் விடுவிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றது. குஜராத் மாநிலத்தின் “தண்டனைக் காலத்துக்கு முன்பாக விடுவிக்கும் 2014 புதிய விதிகள்” என்பவை, நிர்பயா வழக்குக்குப் பிறகான வர்மா கமிஷன் பரிந்துரைகள், போக்சோ உள்ளிட்ட சட்டவிதிகளைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதன்படி வன்புணர்வு குற்றவாளிகள் உள்ளிட்ட தீவிர குற்றம்புரிந்து தண்டனை பெற்றவர்களை விடுவிக்க முடியாது. பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி  ஷா, கணக்கில் கொள்ளச் சொல்லும் குஜராத் மாநிலத்தின் பழைய 1992 விதிகள், ‘விடுவிக்கக்கூடாத குற்றவாளிகள்’ என குற்றவாளிகளை வரையறுக்கவில்லை. அதனாலேயே,  தண்டனைக் குற்றவாளி ஷா, 1992 விதிகள் அடிப்படையில் குஜராத் அரசாங்கத்தை நிர்பந்திக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றமும் 1992 பழைய விதிப்படி குஜராத் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றது. இதைப் பயன்படுத்தி குஜராத் அரசாங்கமும், மத்தியில் ஆளும் பாஜகவும், உலகையே உலுக்கிய ஒரு கொடூரமான குற்றத்தைப் புரிந்த குற்றவாளிகளை விடுவித்துள்ளன. இதன் மூலம் இந்திய நாட்டை அநாகரிக காலத்திற்கு திருப்பியுள்ளன. சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் நடத்திய விசாரணையின் தண்டனைக் குற்றவாளிகளை விடுவிக்க ஒன்றிய அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த 11 பேரை விடுவிக்கலாம் எனப் பரிந்துரைத்த அதிகாரப்பூர்வ கமிட்டியில் இரண்டு குஜராத் பாஜக எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், ‘கோத்ரா ரயிலில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டார்கள்’ என சாட்சி சொன்ன பாஜக கவுன்சிலர் முல்சந்தானியும் இருந்தார் என்பது உபதகவல்கள். அவர்களில் ஒரு எம்எல்ஏ, “அவர்கள் எல்லோரும் பிராமண ஒழுக்க சீலர்கள். அதனால் அவர்களை விடுவிக்கலாம்” என்கிறார்.

‘இஸ்லாமியர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை; அவர்களை நாடற்றவர்களாக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்கள் மீது எந்த அளவிற்கும் மனிதநேயமற்ற வன்முறையை செலுத்தலாம்’ என முடிவெடுத்துள்ள பாஜகவின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். கலவரங்களில் பாதிக்கப்படும் ‘இஸ்லாமியர்களுக்கு தற்காலிக நீதி கிடைத்தாலும் அது நிரந்தரமல்ல என்பதற்கு பில்கிஸ் பானு வழக்கு ஓர் உதாரணம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில், ‘நாரி சக்தி’ (பெண் சக்தி), ‘பேட்டி பச்சாவ்’(பெண் குழந்தையை பாதுகாப்போம்) என்பதெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்குப் பொருந்தாது. இஸ்லாமியப் பெண்களை கலவரங்களில் சிதைத்து, வன்புணர்வு செய்து கொல்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும் என்ற நிலையை பாஜக அப்பட்டமாக ஏற்படுத்தியுள்ளது.  இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறி அரசியலுக்கு முடிவுகட்டி மதச்சார்பின்மை போற்றும் நாடாக இந்தியாவை மாற்ற சபதமேற்போம்! நாகரீக சமூகமாக இந்தியாவை மீட்டெடுக்க இணைவோம்!


 

;