கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 10-க்கும் அதிகமானோரிடம் உண்மை கண்டறியும் பாலிகிராஃப் கருவி சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நிதி முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 4 பேருக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி முறைகேடு மற்றும் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை செய்து வருகிறது.