சென்னை, அக். 9 - சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் போராட்டத் திடலில் இருந்த பந்தல்களையும் காவல் துறையினர் இரவோடு இரவாக பிரித்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
ஆட்கொணர்வு மனு!
தொழிலாளர்கள் தங்களின் தொழிற்சங்க உரிமைக்காக போராடுவது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சிஐடியு, தொழிலாளர்களை விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சி.டி. பாலாஜி, அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, அவசர முறையீட்டு மனுவாக, இந்த ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
சட்டப்படியே போராட்டம்!
“சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ஒடுக்க நினைக்கின்றனர்” என்றும்; உயர் நீதிமன்ற உத்தரவின்படியே 500 மீட்டர் தூரத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும், எனவே, தொழிலாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கூறியிருந்தார். சொந்த ஜாமீனில் விடுதலை! அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாமோதரன், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை என்றும் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தியபோது கைது செய்ய மாஜிஸ்திரேட் மறுத்து விட்டதாகவும் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். தற்போது யாரும் சட்டவிரோதக் காவலில் இல்லை என்றும் தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் இதே பதிலை தெரிவித்தார்.
போராட்டம் நடத்தத் தடையில்லை!
அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், “ஏற்கனவே இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சாம்சங் ஆலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை” என்றும் “அதன்படியே தற்போது போராட்டம் நடைபெறுகிறது” என்றும் குறிப்பிட்டார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை” என்று கூறி ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.