மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு நிறுத்தி வைப்பு
கடும் எதிர்ப்பு எதிரொலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து அம்மாநில அரசு அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் வரும் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையினான மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று கடந்த வாரம் பட்னாவிஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. தேசிய கல்விக்கொள்கை மூலம் 3 ஆவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என பேசி வந்த பாஜக இந்தியை திணிக்கவும் அது மிக மோசமான எதிர்வினைகளை உருவாக்கியது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தினர். இந்த கடும் எதிர்ப்பை அடுத்து பட்னாவிஸ் அரசு, இந்தித் திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிரா மொழி ஆலோசனைக் குழு என்ற குழுவை அமைத்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது. இந்த குழுவும் மராத்திய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தான் மராத்தி கட்டாயம். இந்தி மொழி கட்டாயமல்ல என்று முதல்வர் பட்னாவிஸ் மழுப்பலாக விளக்கம் கொடுத்துள்ளார். எனினும் இந்தித் திணிப்பு நடைமுறையை மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு முழுமையாக கைவிடுமா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.