புதுதில்லி, நவ. 13 - “ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற் காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்கு சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, அர சியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “சாமானியர் ஒருவர் வீடு கட்டுவதென்பது, அவருடைய பல ஆண்டுகள் கடின உழைப்பு, கனவு மற்றும் லட்சியத்தின் வெளிப்பாடு; மேலும், வீடு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-இன் படி, வாழும் உரிமையின் ஒரு பகுதியாகும்; அவ்வாறிருக்கை யில், அரசு நிர்வாகம் தன்னிச்சையாக ஒருவரின் குடியிருப்பை அகற்ற அதிகாரமில்லை என்றும் நீதி பதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகி யோர் அடங்கிய அமர்வு அதிரடியாக கூறியுள்ளது
சங்-பரிவாரின் சதித்திட்டம்
இஸ்லாமியர் பகுதிக்குள் புகுந்து வேண்டு மென்றே மதவெறியைத் தூண்டுவது, அப்போது மோதல் ஏற்பட்டால், அதையே காரணமாக வைத்து, அவர்கள் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைப்பது, சம்பந்தமே இல்லாமல் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்குவது என்ற மோசமான நடவடிக்கையை உ.பி. பாஜக அரசு மேற்கொண்டு வந்தது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், வீடு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்தது; நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யவில்லை; அதனாலேயே வீடுகளை இடித்தோம் என்றும் அது கூறி வந்தது. உ.பி. முதல் குஜராத் வரை உ.பி. சாமியார் முதல்வரான ஆதித்யநாத் அறிமுகப்படுத்திய இந்த புல்டோசர் தாக்குதலை, மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா என பாஜக ஆளும் வேறு பல மாநிலங்களும் கையில் எடுத்தன. இந்தப் பின்னணியில், தில்லியில் கடந்த 2022 ஏப்ரல் 16 அன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் பெயரில் கலவரத்தை அரங்கேற்றிய பாஜகவினர், அடுத்தநாளே ஜஹாங்கீர்புரி பகுதிக்கு புல்டோசர்களை அனுப்பி வைத்தனர்.
பிருந்தா காரத் போராட்டம்
ஆனால், சரியான நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நடத்திய துணிச்சல் மிகு போராட்டத் தாலும் ஜஹாங்கீர்புரி இஸ்லா மியர்களின் வீடுகள் பாதுகாக்கப்பட்டன. எனினும், எதிர்காலத்திலும் இதுபோன்ற புல்டோ சர் அத்துமீறல் தொடரக்கூடாது; அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டி ருந்தார். அதுபோலவே பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கண்டித்த உச்சநீதிமன்றம்
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ‘புல்டோசர் நீதி’ முறையை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக சாடியது. புல்டோசர் மூலம் குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் அரசின் செயலை அவர்கள்கடுமையாக விமர்சித்தனர். “சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சு றுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்ட விதிமுறைகளை மீறினார் என்பதற் காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீட்டை இடிக்க முடி யாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்ப தற்கு எந்த அடிப்படையும் இல்லை” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்ட மாக கூறியிருந்தனர். மதிக்காத பாஜக மாநிலங்கள் எனினும், ம.பி., உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் இடிப்பு நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அதற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாத் அமர்வானது, “குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவ ரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்” என்று கடந்த செப்டம்பர் மாதத் துவக்கத்தில் கேள்வி எழுப்பி யிருந்தது. இந்நிலையில் தான், இந்த வழக்கில் புதனன்று இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது
அரசு நிர்வாகம், நீதிபதியாக முடியாது
“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவ ராகவோ அல்லது குற்றவாளி யாகவோ இருப்பதே, அவரது வீட்டை இடிப்பதற்கு காரணமாக இருக்க முடியாது. குற்றம் சாட்டப் பட்டவர் அல்லது குற்றவாளிக்கு எதிராக அரசு தன்னிச்சையாக நட வடிக்கை எடுக்க முடியாது. ஒரு நிர்வாகி ஒரு நீதிபதியைப் போல் செயல்பட்டு, சட்டத்தின் செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால் அது சட்டத்தின் விதியை மீறுவதாகும். சட்டத்தின் ஆட்சியே முக்கியம் சட்டத்தின் ஆட்சியும், குடிமக்க ளுக்கான உரிமைகளும் நிர்வாகத் தின் தன்னிச்சையான நடவடிக்கை களுக்கு எதிரானது. அத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. சட்ட மீறல்கள் சட்டவிரோதத்தை ஊக்குவிக்கும். அரசியலமைப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். சில ஆக்கிரமிப்புகள் இருந்தா லும், இடிப்பது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு என்பதற்கு போதுமான காரணங்களை அதிகாரிகள் காட்ட வேண்டும். குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை வீடற்ற வர்களாக ஆக்கக் கூடாது அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங் களில் அங்கீகாரம் இல்லாத கட்ட மைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விதிமீறல் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பாக 10 வழி காட்டுதல்களையும் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாத் அமர்வு வழங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: புல்டோசரைக் கொண்டு நீதி வழங்கு கிறோம் என்ற பெயரில் ஆட்சியாளர் கள் எந்தவொரு கட்டடத்தையும் இடிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது. “இத்தகைய மட்டுமீறிய மற்றும் தான் தோன்றித்தனமான செய்கைகளுக்கு நம் அரசமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்றும், ஆட்சியாளர்களின் இத்தகைய அதீத நடவடிக்கைகள் சட்டத்தின் கடும் கரம்கொண்டு (with the heavy hand of the law) கையாளப்பட வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு ஆர்எஸ்எஸ் - பாஜக வினரின் புல்டோசர் அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. தில்லி, ஜஹாங்கீர்புரியில் ஆட்சியாளர்கள் சிறுபான்மை முஸ்லிம்களின் வீடுகளை யும், அவர்களின் வாழ்வாதார இடங்களை யும் புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்கிய சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் கட்சியினர் அதனை எதிர்த்து நின்று முறியடித்தனர். இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பான வழக்கிலும், பிருந்தா காரத் ஒரு மனுதாரர் ஆவார். மேலும், இவ்வாறு புல்டோசர் கொண்டு கட்டடங்களை இடிப்பதற்குக் காரணமாக இருந்த உத்தரப்பிரதேச மாநில பாஜக முத லமைச்சர் மற்றும் ஹரியானா, உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் மற்றும் தில்லி துணை நிலை ஆளுநர் உட்பட சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக வும், சட்டவிரோதமாகவும் இடிக்கப் பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் அனைத் திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறத்தேவையில்லை. இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டியவர்களாக அரசியல் தலைமையில் உச்சத்தி லிருப்பவர்களிலிருந்து அடிமட்டத்தில் இருப்பவர்கள் வரையிலும், அதிகார வர்க்கத்தினர் உட்பட அனைவரும் சேர்க்கப் பட வேண்டும் என்று கோருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புல்டோசர் நடவடிக்கை சட்டவிரோத மானது மற்றும் தவறானது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு முன்பே வந்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அப்படி வந்திருந்தால் பாஜக தலைமையிலான மாநிலங்கள் முழுவதும் பல வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதை தடுத்திருக்க முடியும். இது ஏழைகள், குறிப்பாக சிறுபான்மை சமூகங்களை பாஜக குறிவைத்து வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கும், எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோருக்கும் இந்த தீர்ப்பு வந்ததன் மூலம் நீதி கிடைத்துள்ளது.”
- பிருந்தா காரத்