பெங்களூரூ, டிச.5- கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மாநிலத்தில் மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர உள்ளது. இதற்கு எதிராக பெலகாவியில் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மாநில அரசால் முன்மொழியப்பட்ட மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக இந்தச் சட்டம் உருவாக்கப்படுவதாக அச்சம் தெரிவித்தார். மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்தாத நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் பெலகாவி, ஹஜூப்ளி, பேலூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள 32 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. மத மாற்ற தடைச் சட்டம் நிறைவேறிய பிறகு என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்றார். ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை மேற்கோள் காட்டிய, ஆர்ச் பிஷப், பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூலிஹட்டி சேகர், ஹோசதுர்கா தாலுக்காவில் சட்டவிரோத மதமாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டினார். அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி சட்டவிரோத மதமாற்றம் எதுவும் நடக்கவிலை எனத் தெரிவித்துவிட்டனர்.
மாநில அரசு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு மசோதாவை அறிமுகப்படுத்தக் கூடாது என்றார். முன்மொழியப்பட்ட மசோதாவை எதிர்த்து, புனித பிரான்சிஸ் சேவியர் பேராலய வளாகத்தில், மனித உரிமைகளுக்கான அனைத்து கர்நாடக ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (AKUCFH) ஏற்பாடு செய்திருந்த அமைதிக் கூட்டத்தில் பேராயர் செய்தியாளர்களிடம் பேசினார். ஆயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கிய அமைதிக் கூட்டத்தை நடத்தத் திட்டம் இருப்பதாகக் கூறிய அவர் கொரோனா நெறிமுறைகள் காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது; கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டத் தொடர் நடைபெறும் போது பெலகாவியில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார். காங்கிரஸ் மேலவை உறுப்பினர் இவான் டிசோசா கூறுகையில், மாநில அரசு, சில குழுக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெரும்பான்மையான இந்துக்கள் மசோதாவை ஆதரிக்கவில்லை என்றார். மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள ஆர்ச்பிஷப், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்பதற்கு போதுமான ஆவணங்கள் உள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கும். கட்டாய மதமாற்றம் என்பது மிகைப்படுத்தப்பட்டதாகும். பாஜக தலைவர்கள் பலர் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்தவர்கள், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கிறிஸ்தவ மருத்துவமனைகளைக்கு செல்கின்றனர். அவர்களில் யாரையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.