states

img

சமூக ஊடகங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான போலியான பொதுக்கருத்தை உருவாக்க பாஜக முயன்றது - புத்ததேவ் ஹால்டர்

தலைமையற்ற இயக்கங்களில் ‘தலைவர்’ என்ற வகையில் சமூக ஊடகங்கள் இன்று மிகுந்த முக்கியத்துவம்
பெற்றுள்ளன. முன்பெல்லாம் பொதுக்கருத்தை உருவாக்கிட செய்தித்தாள்கள் அல்லது கட்சியின்
ஊதுகுழல்களாக இருந்த பத்திரிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தங்களுக்கு தொடர்புடைய
பிரச்சினைகள் குறித்த செய்திகளையும், தகவல்களையும் பெறுவதற்கு சமூக ஊடக தளங்களை இன்று மக்கள்
பயன்படுத்தி வருகின்றனர். இணையவழி மூலமாக களத்தில் செயல்படுவதற்கான பார்வையாளர்களை
அணிதிரட்டுவதற்கு சமூக ஊடகதளங்கள் உதவி வருகின்றன.
அரசியல் விவாதங்களுக்கான முக்கியமான இடமாக சமூக ஊடக தளங்களும் மாறியிருக்கின்ற அதே
நேரத்தில், நயவஞ்சகமாக பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், அச்சத்தைப் பரப்பவும்,
மாற்றுக்கருத்துகள் மீது தாக்குதலை நடத்தவும் சர்வாதிகார ஆட்சிகளுக்கான எளிய கருவியாகவும் அவை
மாறியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட
பின்னர் என்ன நடந்தது என்பது இங்கே குறிப்பிட்டுக் காட்டக் கூடியதாக இருக்கிறது.
2019 டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தம் (சிஏஏ), இந்தியா முழுவதும்
கோபத்தையும், போராட்டங்களையும் தூண்டி விட்டது. மாணவர்கள், உரிமைக்கான ஆர்வலர்கள் உட்பட
பல்லாயிரக்கணக்கானவர்கள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்ற அமைதியான போராட்டங்களில்
பங்கேற்றனர். சில நாட்களிலேயே, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம்,

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர்கள் தங்களுடைய மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைச்
செயல்படுத்த மறுத்தனர். ‘நான் உயிருடன் இருக்கும் வரை, குடியுரிமை சட்டத் திருத்தம் வங்காளத்தில்
செயல்படுத்தப்படாது. நாட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டியதில்லை. வங்காளத்தில் எந்த
தடுப்புக்காவல் மையமும் இருக்காது’ என்றார் மேற்குவங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கான உத்திகள்
நாடு தழுவிய போராட்டங்களும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளும் பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தைப் பின்வாங்க வைத்தன. அவர்களால் கொடுக்கப்பட்ட
அழுத்தத்தின் காரணமாக, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஆதரவை
உருவாக்குவதற்காக சமூக ஊடகப் பிரச்சாரம், மிஸ்டு கால் பிரச்சாரம், நாடு தழுவிய ஜன் ஜக்ரான் அபியான்
உள்ளிட்ட பல இணையவழி மற்றும் நேரடிப் பிரச்சாரங்களைத் தொடங்குவது என்று பாஜக அரசாங்கம்
முடிவு செய்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான ஆதரவை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 'மிஸ்டு கால்
பிரச்சாரத்தின்' ஒருபகுதியாக 'பாலியல் உறுதிமொழி', 'வேலை வாய்ப்புகள்', 'இலவச மொபைல் தரவு',
'நெட்ஃபிக்ஸ் இணைப்புகள்' போன்ற கவர்ந்திழுக்கும் அறிவிப்புகளைக் கொண்டு வரப்பட்டன. அதற்கு
முன்பாக, சத்குரு என்று பலராலும் அழைக்கப்படுகின்ற ஜக்கி வாசுதேவின் வீடியோ விளம்பரத்தை பாஜக
முன்னிறுத்தத் தொடங்கியது.
அந்த வீடியோ கூட்டம் ஒன்றில் குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி கேள்வி எழுப்பிய இளம் பெண் ஒருவரிடம்
சத்குரு உரையாற்றுவதைக் காட்டியது. ‘அந்தச் சட்டத்தை நான் முழுமையாகப் படிக்கவில்லை. அதுகுறித்து
செய்தித்தாள்களிலிருந்து மட்டுமே எனக்குத் தெரியும்’ என்று தன்னுடைய கருத்தை அவர் பகிர்ந்து கொள்ளத்
தொடங்குகிறார் என்றாலும், 21 நிமிடத்திற்கு தனது நீண்ட பதிலை அளிக்கிறார்.

பெரிய அளவில் தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொண்டிருப்பவரும், தனது பேச்சின் மூலம்
லட்சக்கணக்கானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டவருமான சத்குரு அந்த
வீடியோவை தனது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பதிவிட்டார். சட்டத்தை தான் முழுமையாகப்
படிக்கவில்லை என்று சொன்ன போதிலும், சடத் திருத்தத்தை எதிர்ப்பதற்கு முன்பாக மாணவர்கள் அதனை
நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்ல அவர் தயங்கவில்லை. இறுதியாக தனது உரையை முடிக்கும்
போது, ‘…பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்பறிவற்ற இளைஞர்கள் கூச்சலிடுகிறார்கள்’ என்று கூறி சத்குரு
சிரித்தார்.
2019 டிசம்பர் 30 அன்று, ‘குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான அம்சங்கள் மற்றும் பல அம்சங்கள்
குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவின் விளக்கத்தைக் கேளுங்கள். வரலாற்றுச் சூழலை விளக்குகின்ற அவர்
நம்முடைய சகோதரத்துவக் கலாச்சாரத்தை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். தங்கள் சொந்த நலனுக்காக
தவறான தகவல்களை அளித்து வருகின்ற குழுக்களை அவர் சுட்டிக் காட்டுகிறார். (#இந்தியா சப்போர்ட்ஸ்
சி.ஏ.ஏ) #IndiaSupportsCAA’ என்று மோடி ட்வீட் செய்திருந்தார். #IndiaSupportsCAA என்ற பிரச்சாரத்தை
ஆரம்பித்து வைத்த மோடி சத்குருவின் வீடியோவிற்கான யூடியூப் இணைப்பையும் சேர்த்து
வெளியிட்டிருந்தார்.
அதே நாளிலேயே சத்குரு நடத்தி வருகின்ற ஈஷா அறக்கட்டளை ட்விட்டர் கருத்துக் கணிப்பு ஒன்றையும்
வெளியிட்டது, அதில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் தேசிய பதிவு போன்றவற்றை எதிர்த்து
நடைபெறுகின்ற போராட்டங்கள் நியாயமானவை என்று பயனர்கள் கருதுகிறார்களா என்று கேட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவரது வீடியோவிற்கான இணைப்பும் அளிக்கப்பட்டிருந்தது. 11,439 ட்விட்டர்
பயனர்கள் அந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றதாக கிடைக்கக்கூடிய தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் தேசிய பதிவிற்கான எதிர்ப்பு போராட்டங்கள் நியாயமானவை
என்று 63% பேர் பதிவிட்ட பிறகு, அதே நாளில் அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுக்கும் வந்தது.
மிகவும் சர்ச்சைக்குரிய, துருவமுனைப்படுத்துகின்ற குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தான் பேசுகின்ற
போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடி வருகிறவர்களை நியாயமற்ற முறையில்

குறிவைத்து, பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மீது ‘படிப்பறிவற்ற இளைஞர்கள்’ என்ற
முத்திரையைக் குத்தி பேசலாம் என்று சத்குருவை நம்பவைத்த சூழ்நிலைகள் என்னவாக இருக்கும்​​ என்ற
கேள்வி அனைவராலும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகவே இருக்கிறது.
#IndiaSupportsCAA பிரச்சாரத்திற்கான பணம்
சத்குருவின் அதே வீடியோவை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, ‘குடியுரிமை
சட்டத் திருத்தம் குறித்த பொய்கள், பாதி உண்மைகளை நம்புவதை நிறுத்துங்கள். @SadhguruJVji
தந்திருக்கும் மிகச் சிறப்பான விளக்கம் இங்கே இருக்கிறது. நமக்கு குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன் தேவை
என்பதற்கான வரலாற்று முன்னோக்கைப் பெற இதைப் பார்க்குமாறு அனைவரிடமும், குறிப்பாக
இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#IndiaSupportsCAA’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோ முதன்முதலாக 2019 டிசம்பர் 28 அன்று சத்குருவின் ஆங்கில யூடியூப் சேனலில்
வெளியிடப்பட்டது. தனது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் டிசம்பர் 29 காலை
அந்த வீடியோவை சத்குரு வெளியிட்டார். சத்குருவின் வீடியோவை 2019 டிசம்பர் 30 முதல் பாஜக
விளம்பரப்படுத்தத் தொடங்கியது. முதலாவது விளம்பரப்படுத்தப்பட்ட வீடியோவை பத்து லட்சத்துக்கும்
அதிகமான ஃபேஸ்புக் பயனர்கள் பார்த்திருந்தனர்.
அதே வீடியோவுடன் மேலும் மூன்று விளம்பரங்களை பாஜகவின் ஃபேஸ்புக் பக்கம் அறிமுகப்படுத்தியது.
ஆனால் அது ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டிருந்தது. அந்த ஃபேஸ்புக் விளம்பரங்கள் 2019 டிசம்பர் 30
முதல் 2020 ஜனவரி 23 வரை செயல்பாட்டில் இருந்தன. அந்த பக்கத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம்
தொடர்பாக விடுக்கப்பட்ட மிஸ்டு கால் பிரச்சாரம் குறித்த மேலும் இரண்டு விளம்பரங்களும்
அறிமுகப்படுத்தப்பட்டு, 2020 ஜனவரி 7 முதல் 2020 ஜனவரி 23 வரை அவை செயல்பாட்டில் இருந்தன.
2019 டிசம்பர் 30 முதல் 2020 ஜனவரி 23 வரை, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் ஒரு
கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட இந்த ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக அந்தப் பக்கம் ரூ.15 - 17
லட்சத்தை செலவிட்டிருந்தது. பாஜக உள்ளே நுழைய முயற்சிக்கிற எல்லை மாநிலமான மேற்குவங்கத்தில்
அந்த வீடியோவிற்கான அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னிடம் இருக்கின்ற அனைத்து ஆற்றலையும்
பாஜக அங்கே பயன்படுத்த உள்ளது.

பாஜகவின் பிரதான ஃபேஸ்புக் பக்கம் மட்டுமல்ல, குஜராத் எம்.எல்.ஏ.வாக இருக்கின்ற ஜீத்து வகானி
போன்ற பாஜக தலைவர்களும் #IndiaSupportsCAA பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.90,000 முதல் ரூ.1
லட்சம் வரை செலுத்தியுள்ளனர். ஃபேஸ்புக்கில் வழக்கமான விளம்பர வெளியீட்டாளராக இருந்து வருகின்ற
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ஆர்.கே.சின்ஹாவும்
#IndiaSupportsCAA பிரச்சாரத்திற்காக அதிக அளவிலான பணத்தைச் செலுத்தியுள்ளார்.

பாஜக தலைவர்கள், மாநில பாஜக பிரிவுகள், பாஜக ஆதரவாளர்கள் நடத்தி வருகின்ற பிற ரசிகர் பக்கங்கள்
மற்றும் சில அரசு சார்பு ஊடக நிறுவனங்கள் உட்பட 99 ஃபேஸ்புக் பக்கங்கள் 2019 டிசம்பர் 16 முதல் 2020
மார்ச் 9 வரையிலும் குடியுரிமை சடத் திருத்தத்திற்கு ஆதரவாக மொத்தம் 220 ஃபேஸ்புக் விளம்பரங்களை
வெளியிட்டுள்ளன.

பாஜக #IndiaSupportsCAA விளம்பரங்களை வெளியிட்டதன் விளைவாக, அந்த ஆதரவு பிரச்சாரம்
ஏராளமான இடுகைகளையும், தொடர்புகளையும் உருவாக்கியது. 2019 டிசம்பர் 11 முதல் 2020 பிப்ரவரி 9
வரையிலான மொத்த பதிவுகள் 11,348 ஆகவும், தொடர்புகளின் எண்ணிக்கை 1,04,69,748 ஆகவும்
இருந்தன. ஃபேஸ்புக்கில் பணம் செலுத்தி வெளியிடப்பட்ட #IndiaSupportsCAA பிரச்சாரத்தின் போது,
​​அதாவது 2019 டிசம்பர் 30 முதல் 2020 ஜனவரி 23 வரையிலான காலத்தில் மொத்த இடுகைகளின்
எண்ணிக்கை 10,175 ஆகவும், மொத்த தொடர்புகளின் எண்ணிக்கை 87,78,476 ஆகவும் இருந்தன. ஆக
பாஜக நடத்திய #IndiaSupportsCAA பிரச்சாரத்திற்கு முன்பாக 19 நாட்கள், பிரச்சாரத்திற்குப் பிறகு 17
நாட்கள் என்று 36 நாட்களில் மொத்த பதிவுகள் 1,173, தொடர்புகள் 16,91,272 என்ற அளவில் மிகக்
குறைவாகவே இருந்திருக்கின்றன. குறிப்பிட்ட செய்தியை இணையத்திற்குள் பிரபலம் அடைய வைப்பதற்கு
பணம் செலவிடப்படுவதை இது தெளிவாக நிரூபிக்கிறது.

#IndiaSupportsCAA தோல்வியுற்ற பிரச்சாரமாகவே இருந்தது
பணம் செலுத்தி பாஜக ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சாரத்தின் போது,
#IndiaSupportsCAAஉடன் இருந்த தினசரி சராசரி ஃபேஸ்புக் இடுகைகளின் எண்ணிக்கை 356 ஆகவும், அந்த
இடுகைகளுடன் இணைக்கப்பட்ட சராசரி தொடர்புகள் 3,02,092 ஆகவும் இருந்தன.

2020 ஜனவரி 23 அன்று இந்தப் பிரச்சாரத்திற்கான கட்டணத்தை பாஜக நிறுத்தி விட்ட போதிலும்,
தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் 2020 மார்ச் 9 வரை #IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக்குடன்
விளம்பரங்களுக்கான பணம் செலுத்துவதைத் தொடர்ந்து வந்தனர். அந்த நேரத்தில்,
#IndiaSupportsCAAஉடன் இருந்த தினசரி சராசரி ஃபேஸ்புக் இடுகைகளின் எண்ணிக்கை வெறுமனே 26
ஆகவும், தொடர்புகளின் சராசரி எண்ணிக்கை 25,994 ஆகவும் மட்டுமே இருந்தன.
2020 மார்ச் இறுதியில் கோவிட்-19 பொதுமுடக்கம் தொடங்கும் வரையிலும், குடியுரிமை சட்டத் திருத்தம்,
குடிமக்கள் தேசிய பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவாகவும் எதிராகவும்
விவாதங்கள், பேரணிகள், கூட்டங்கள் போன்றவை தொடர்ந்து கொண்டே இருந்தன. இருப்பினும்,
#IndiaSupportsCAA பிரச்சாரத்திற்குப் பிறகு, தங்கள் ஃபேஸ்புக் தளங்களில் குடியுரிமை சட்டத்
திருத்தத்திற்கு ஆதரவான பதிவுகளை பலர் வெளியிடவில்லை. 2020 மார்ச் 10 முதல் டிசம்பர் 11 வரை,
#IndiaSupportsCAA பிரச்சாரத்துடன் இணைக்கப்பட்டதாக மொத்தம் 61 பொது இடுகைகள் மற்றும் 39,747
தொடர்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு நேர்மாறாக, 2019 டிசம்பர் 31 அன்று, பாஜக தனது
திட்டமிட்ட #IndiaSupportsCAA பிரச்சாரத்தை மிகப்பெரிய நிதி ஆதாரங்களுடன் தொடங்கிய நாளுக்கு
அடுத்த நாளில், ட்விட்டரில் #IndiaSupportsCAA இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது.
எனவே, #IndiaSupportsCAA பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட காலத்திற்கு தங்கள் பணியைத்
தொடரவில்லை, சிறிது காலத்திலேயே அந்தப் பிரச்சாரத்தை அவர்கள் புறக்கணித்தனர் அல்லது
நிராகரித்தனர் என்பவை இணையவழி பார்வையாளர்களுடைய நடத்தை மூலம் தெளிவாகத் தெரிகிறது.
செயற்கையாக தூக்கி நிறுத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான பிரச்சாரம் தன்னைத்தானே

தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான
பிரச்சாரங்கள் அதிக இயல்புடன் நீடித்து இருந்தன.
சமூக ஊடகங்களின் உண்மையான ஆற்றலைச் சுரண்டுவது
இத்தகைய கடுமையான #IndiaSupportsCAA பிரச்சாரம் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து அரசாங்கத்திடம்
உள்ள நிலைப்பாட்டை நிரூபிக்கிறது. ஏராளமான குடிமக்கள் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள்
பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரானவர்களாகவும், குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள்
பதிவேடு எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவளித்தவர்களாக இருந்த போதும், வலதுசாரி அரசியல்வாதிகள்
குடிமக்களிடம் இருந்த முக்கியமான கவலைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், பணத்தின் உதவியுடன்
மக்களின் கருத்தை மாற்ற முயன்றனர். தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், மாற்றுக் கருத்துக்களைக்
குறிவைப்பதற்கும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு அவர்கள் நிதியுதவி அளித்தனர். ஆனால்,
இவ்வாறு பணம் அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட செயற்கையான பிரச்சாரத்தின் மூலமாக, வலதுசாரி அணிகள்
போதுமான ஆதரவைப் பெறத் தவறி விட்டன. ஒருவேளை அடுத்த முறை அவை மிகவும் வெற்றிகரமாக
செயல்படவும் கூடும்.
பணம் கொண்டிருக்கும் ஆற்றலும், சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்ற செல்வாக்கும் ஜனநாயக
விழுமியங்களை நசுக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை சமூகத்தில்
பிளவுகளை உருவாக்கும் திறனையும் கொண்டவையாக இருக்கின்றன.

நமக்கு முன்னால் இப்போது இருக்கின்ற சவால் நேற்று இருந்ததை விட மிகப் பெரியதாக இருக்கிறது. அந்தச்
சவால், சமூக ஊடகங்களின் புதிய யதார்த்தத்தையும், பிளவுபடுத்தும், சகிப்புத்தன்மையற்ற, தேர்தல்
முடிவுகளைக்கூட வடிவமைக்கக்கூடிய தவறான கருத்துக்களைப் பரப்புவதற்கான அதன் ஆற்றலையும்

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் எதிர்கொண்டு வரும் சவாலாக உள்ளது. அதை
அளவிடுவதும்கூட நிச்சயமாக ஒரு சவாலாகத்தான் உள்ளது.

நன்றி: https://thewire.in/politics/how-bjp-tried-manipulate-public-opinion-social-media-favour-caa

தமிழில்: தா.சந்திரகுரு

;