states

img

அர்ச்சுனா விருது பூப்பந்தாட்ட வீரர்களுக்கு 37 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற அமைச்சரின் பதில் அதிர்ச்சி தருகிறது- சு. வெங்கடேசன் எம்.பி

அர்ச்சுனா விருது பூப்பந்தாட்ட வீரர்களுக்கு  37 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற அமைச்சரின் பதில் அதிர்ச்சி தருகிறது என சு. வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.சு.வெங்கடேசன் எம் பி மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 313 க்கு) ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்  அனுராக் சிங் தாகூர் பதில் அளித்துள்ளார்.

அர்ச்சுனா விருதுக்கான விளையாட்டுகளின் பட்டியலில் பூப்பந்து உண்டா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்துள்ளார். இதுவரை அர்ச்சுனா விருது பெற்றவர்களின் பட்டியலை, வழங்கிய ஆண்டையும் குறிப்பிட்டு வழங்கியுள்ளார். 1) ஜே.பிச்சையா (1970), 2) ஜெயராமா ஶ்ரீநிவாஸ் (1972), 3) ஏ. கரீம் (1973), 4) எல்.ஏ. இக்பால் (1975), 5) ஏ. சாம் கிறிஸ்து தாஸ் (1976), 6) டி. இராஜாராமன் (1984).

இந்த விவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. 1961 இல் அர்ச்சுனா விருது தர ஆரம்பித்ததில் இருந்து 916 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மட்டுமே பூப்பந்து வீரர்கள். கடைசியாய் அந்த விருது பூப்பந்து வீரருக்கு வழங்கப்பட்ட ஆண்டு 1984. முப்பத்து ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பூப்பந்து வீரருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.

பூப்பந்து இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், பூடான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. இத்தகைய விளையாட்டு அர்ச்சுனா விருது பரிசீலனையில் புறக்கணிக்கப்படுவதாக பூப்பந்து வீரர்கள் மத்தியில் அழுத்தமான ஆதங்கம் உள்ளது. மேற்கூறிய விவரங்கள் அந்த ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. ஆகவே ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை உரிய மட்டத்தில் ஆய்வு செய்து பூப்பந்து விளையாட்டிற்கு நீதி வழங்க வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

;