states

img

ஜே.பி. நட்டாவுக்கு கல்லறை அமைத்தது பாஜகவினர்தான்

ஹைதராபாத், அக். 21 - தெலுங்கானா மாநிலத்திலுள்ள கல்லறை ஒன்றில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் படத்தை வைத்து, அதற்கு மலர் மாலைகள் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், முனுகோட் சட்டப்பேரவை தொகுதியில் நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அடுத்தாண்டு இம்மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுவதால், ஆளும் டிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.   இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 2016-ஆம் ஆண்டு ஒன்றிய  அமைச்சராக இருந்தபோது, முனுகோட் தொகுதியில் உள்ள மரிகுடாவில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சௌட்டுப்பல்லில் புளோரைடு ஆராய்ச்சி மையம், புளூரைடு பாதித்தவர்களுக்கு சிறப்பு உதவி வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.  

இந்நிலையிலேயே, ஜே.பி. நட்டா அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கல்லறைக்குப் போய்விட்டன என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஜே.பி. நாட்டாவுக்கு கல்லறை அமைத்து, அவருடைய புகைப்படம் அடங்கிய பேனரை சிலர் வைத்து, மலர் மாலைகளை அணிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரே காரணம் என்றும் பாஜக-வினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அரசியலில் ஒரு குழப்பமான, அவமானகரமான புதிய கீழ்மையைக் குறிக்கிறது என்று கூறிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஸ்மிருதி இரானி ஆகியோர் விமர்சித்துள்ளனர். ஆனால், ஜே.பி. நட்டாவுக்கு கல்லறை வைத்த விவகாரமானது, பாஜக-வினரே அரங்கேற்றிய சதிச்செயலாக இருக்கலாம். ஏனெனில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று நல்கொண்டா எம்.எல்.ஏ பூபால் ரெட்டி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் வானம் தோண்டும் பணிகள் கூட நடைபெறாத நிலையில், 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக கூறி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

;