புதுதில்லி, ஜூலை 16 - ஐஐடியில் பயின்று வந்த ஆயுஷ் ஆஷ்னா என்ற மாணவி வியாழன் அன்று தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து அறிவிப்பு செய்த கல்வி நிர்வாகம் அவர் தலித் என்பதை மறைத்தது தற்போது சந்தேகத்தை எழுப்பி யுள்ளது. மாணவி சாதி ரீதியான பாகுபாட்டை எதிர்கொண்டதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெற வில்லை என காவல் துறை தரப்பில் கூறப் பட்டுள்ளது.எனினும் ஐஐடிகளில் சாதி, மத பாகுபாடுகள் காரணமாக மாணவர்கள் மீது பல்வேறு வகையான ஒடுக்கு முறைகள் தொடுக்கப்படுகிறது என்பதற்கு ரோகித் வெமுலா முதல் தர்ஷன் சோலங்கி வரை ஏராளமான மரணங்கள் எடுத்துக்காட்டு களாக உள்ளன.
நீதி வேண்டும்
இந்த மரணத்திற்கு சாதிப் பாகுபாடு காரணம் அல்ல என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?. இந்த வழக்கில் நியாயமான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது போன்ற மரணங்களை தடுக்க தில்லி ஐஐடி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதையும் பார்க்க விரும்புகிறோம். ஆயுஷ் அனுபவித்த, ஒடுக்குமுறையை அனுபவிக்கும் பட்டியல் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு நீதி வழங்குவதை உறுதிசெய்யவும்,கல்வி வளா கத்திற்குள் பிற்படுத்தப்பட்ட சமூக மாண வர்கள் பாதுகாப்பாக உணருவதற்கும் எஸ்சி/எஸ்டி பிரிவு என்ன செய்ய போகிறது என மாணவர் சங்கங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.
வழிகாட்டிகள் பெறாத நிலை
ஐஐடிகளில் புதிதாக சேரும் மாணவர் களுக்கு வழிகாட்டுவதற்கும், புதிய வாழ்க்கைச் சூழலுக்கு மாறுவதற்காக அவர்களுக்கு உதவவும் அவர்களின் தயக்கங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மூத்த மாணவர்களை வழிகாட்டி களாக நியமிக்கக் கூடிய வழக்கம் ஒன்று உள்ளது. ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இத்த கைய வழிகாட்டிகளைப் பெறாத வகையில் நியமன முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியல் பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் முறை யாக நிரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனநல ஆலோசனை?
மன அழுத்தத்தின் காரணமாகத் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டார் என காரணம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சாதிய ரீதியிலான துன்புறுத்தலால் உருவாகும் மன உளைச்சல்களில் இருந்து வெளியேற என்ன வழி உள்ளது? மாண வர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற மனநல ஆலோசனை வழங்க நிபுணர்களைக் கொண்ட அமைப்பு உள்ளதா? எங்களுக்கு அது தெரியாது.ஏதேனும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளின் போது மட்டுமே நாங்கள் அவர்களை காணமுடியும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தரவரிசை கேட்கும் ஒடுக்குமுறை
மேலும் மாணவர்களிடம் நேரடியாக சாதி குறித்துப் பேசாமல் அவர்களின் தரவரிசை யை கேட்பதில் இருந்து அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறை துவங்குகிறது எனவும், இதன் மூலம் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களின் மத்தியில் அவர்கள் தகுதி யற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை ஆழமாக உருவாக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர். நிறுவனமயப் படுத்தப்பட்ட இந்த கொலைகளுக்கு பின்னே சாதி ரீதியாக மத ரீதியாக பல்வேறு அழுத்தங்களும் ஒடுக்கு முறைகளும் உள்ளன என்பதை பாத்திமா லத்தீப் மற்றும் தர்சன் சோலங்கி உள்ளிட்டோ ரின் கடிதங்கள் மூலம் அறிய முடியும். தற்கொலைகள் சாதாரண நிகழ்வுகள் அல்ல. ஆனால் ஐஐடி நிர்வாகங்கள் அதை எளிமையாக கடந்து சென்று விடுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க மறுக்கின்றன என ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆய்சே கோஷ் தெரிவித்துள்ளார்.