states

அனைத்து தீவிரவாத வன்முறைகளுக்கு எதிராக கேரள அரசு உறுதியான நடவடிக்கை ஜே.பி.நட்டாவுக்கு சிபிஎம் பதிலடி

புதுதில்லி, செப்.27- அனைத்துத் தீவிரவாத இயக்கங்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, கேரளம் பயங்கரவாதத்தின் ஆபத்தான மையமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இத்தகைய பொய்க் குற்றச்சாட்டு மூலமாக அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினராலும், பிஎப்ஐ எனப்படும் பாபுலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினராலும்  கொலைகள்;  பழிக்குப்பழி கொலைகள் எனத் தொடர்ந்து நடைபெற்றுவருவதை மூடி மறைக்க முடியாது. இந்த ஆண்டில் மட்டும் இவ்விரு அமைப்புகளாலும் ஆலப்புழை மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு அறிவுரை கூறுங்கள்   மாநிலத்தில் மதநல்லிணக்கத்தை  சீர்குலைப்பதற்காகவும், மதவெறித் தீயை விசிறிவிடுவதற்காகவும் இத்தகைய முயற்சிகள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு பாஜக தலைவர் அறிவுரை கூறுவது நல்லது. அனைத்துத் தீவிரவாத இயக்கங்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. கேரள மக்கள் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடிப்பதில் முன்மாதிரியாகத் திகழ்பவர்கள். தீவிரவாதிகளின் எவ்விதமான வன்முறையையும் அவர்கள் சகித்துக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

;