புதுதில்லி, அக்.1- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் விநியோகத்தைத் தனியாரிடம் தாரைவார்த்திட யூனியன் பிரதேச நிர்வாகமும், ஒன்றிய அரசாங்கமும் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக மின்சாரத்துறை ஊழியர்களும், பொறியாளர்களும் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதற்கு சிஐடியு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளது. தனியார்மய நடவடிக்கைகளை பிரதேச நிர்வாகமும், ஒன்றிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியுவின் சார்பில் பொதுச்செயலாளர் தபன்சென் ஓர்அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசாங்கமும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகமும் மின் விநியோகம் மற்றும் விற்பனையைத் தனியாரிடம் தாரைவார்த்திட சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மின்சாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் பொறியாளர்களும் செப்டம்பர் 28ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு சிஐடியு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வேலைநிறுத்தத்திற்கு புதுச்சேரி மின்சாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறைகூவல் விடுத்து வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் சண்டிகாரில் பின்வாங்கியது
ஒன்றிய அரசாங்கம் மின்சாரம் தொடர்பான அனைத்துத் துறைகளையும் குறிப்பாக யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சாரத்துறைகளை தனியாரிடம் தாரை வார்த்திட நீண்ட காலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முதலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மின் விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க முயற்சிகளை மேற்கொண்டது. அங்கே மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் ஒன்றுபட்ட இயக்கங்களின் மூலமாக அது பலத்த அடி வாங்கியது. ஜம்மு-காஷ்மீரில் செய்ததைப் போலவே உள்துறை அமைச்சகம் மீண்டும் அதேபோன்ற நடவடிக்கையை சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் மேற்கொண்டது. அங்கும் சண்டிகார் யூனியன் பிரதேச மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் இத்தகைய மக்கள் விரோத தனியார்மயத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, தனியார்மய முடிவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விரோத தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் வீறுடன் எழுந்து போராடியபோதிலும் அதுகுறித்து, கிஞ்சிற்றும் கவலைப்படாது இப்போது புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகமும் 2022 செப்டம்பர் 27 முதல் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கை எடுத்திருக்கிறது. மின்சார விநியோகம் மற்றும் சில்லரை விற்பனையை முழுமையாக நூறு விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது.
பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் ஆதரவு
இதற்கெதிராக புதுச்சேரி மின்சாரத்துறை ஊழியர்களும் பொறியாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் பொதுத்துறை மூலம் மின் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும் வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிஐடியு, போராடும் புதுச்சேரி மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஆதரவாக தன் உறுதியான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்ளும் அதே சமயத்தில், ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கமும் குறிப்பாக சிஐடியு-வுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் வீராவேசத்துடன் போராடிக் கொண்டிருக்கும் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறது. மின்சார விநியோகத்தையும், விற்பனையையும் தனியாரிடம் தாரைவார்த்திட ஒன்றிய அரசாங்கமும், புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ந.நி.