states

மௌனம் ஏன் மோடி அவர்களே! - சுபோத் வர்மா

வேலை வாய்ப்புகள் பற்றி அரசின் அறிவிப்புகள் கூட குறைந்து விட்டன  நம் செவிகளில் இது பற்றி எதுவுமே விழாத மௌனத்தை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கிறது. காது கிழிய பேசும் தலைவர்கள் வெறும் சடங்கு ரீதியாக செய்யும் சத்தியங்கள், அறிவிப்புகள் கூட அறவே இல்லை. ஏதோ இந்தியாவில் வேலை நெருக்கடியே (Job Crisis) இல்லை என்ற எண்ணத்தை இந்த கனத்த அமைதி ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால், வேலையின்மை விகிதம், குறிப்பாக இளைஞர் மத்தியில் மேலும் தீவிரம் அடைந்திருப்பது குடும்பங்களை நிலை குலைய செய்துள்ளது. ஆகஸ்ட் 2022 இல் 8 சதவீதத்தை கடந்து 8.3 சதவீதம் என்ற ஓராண்டின் உச்சத்தை தொட்டுள்ளது. நகர வேலையின்மை 9.6 சதவீதம். இது இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் (CMIE) கணக்கு.

பேரிடர் துவங்குவதற்கு முன்பே ( 2019 - 20) வேலையின்மையின் மாத சராசரி 7 அல்லது 8 சதவீதம் வரை இருந்தது. ஒவ்வோராண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வந்த ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததற்கு மக்கள் தந்து கொண்டு இருக்கிற பெரும் விலை இது.  வேலையில் இருப்பவர் எண்ணிக்கை 40 கோடிக்கு கீழேயே உழன்று கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட், 2022 இல் இது 39.5கோடி. அதற்கு முந்தைய ஜூலை 2022 மாத அளவான 39.7 கோடிகளை விட இது குறைவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 2021 இல், இரண்டாம் கோவிட் அலையில் இந்தியா சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது கூட வேலையில் இருந்தவர் எண்ணிக்கை 39.8 கோடி .  2017 - 22 காலத்தில் இந்திய தொழிலாளர் படையில் இளைஞர் பங்கேற்பு 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக வீழ்ந்துள்ளது. 40 - 59 வயதுக்கு உட்பட்டவர் விகிதம் 42 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் பொருள் என்ன? இந்திய தொழிலாளர் படை புதிய வரவால் இளமை ஆகவில்லை. நரை கூடி கிழப் பருவம் எய்தியுள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் மூத்த தலைமுறையை விட கல்வித் தகுதி மிக்கவர்களாக இருக்கின்றனர். பணிப் பாதுகாப்பு இல்லாத, குறை ஊதிய வேலைகளை இவர்கள் விரும்பாமல் காத்து இருக்கிற நிலையில் குடும்ப வருமானத்தை சார்ந்தே இருப்பார்கள். இதனால் கூடுதல் சுமையை குடும்பங்கள் சுமக்கின்றன.  கண்ணியமான வேலைகளுக்காக திறன் மேம்பாடு, உயர் கல்விக்கு பலர் செல்லும் கட்டாயம் ஏற்படுவதால் “வேலை செய்யத் தகுதியான வயதில்” (Working age population) மாணவர்களாக உள்ளவர்கள் விகிதம் 2017 - 22 காலத்தில் 15 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கல்விக் கடன் உள்ளிட்ட பொருளாதார சுமைகளை குடும்பங்கள் மீது ஏற்படுத்தியுள்ளன.  ஆகவே பேரிடர் கால தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தாவிக் குதித்து மீள்கிறது என்ற வாதம், வேலை உருவாக்கத்தைப் பொறுத்தவரை கிழிந்து தொங்குகிறது. அரசின் பெரும் தோல்வி ஆகும் இது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி  செப் 05 - 11, 2022-ல் வெளியான கட்டுரையின் சுருக்கம்: 

க.சுவாமிநாதன்

;