திருப்பூர், அக்.1– “அறிவியலாய் சிந்திப்போம், பின்னலாய் இணைவோம்” என்ற முழக்கத்துடன் திருப்பூரில் தீக்கதிர் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாகப் பங்கேற்றனர். அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீக்கதிர் நாளிதழ் சார்பில் ஞாயிறன்று திருப்பூர், காலேஜ் ரோடு, ஓடக்காடு ஹவுசிங் யூனிட் அருகில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கொடியசைத்து ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதையடுத்து பெண்கள் பிரிவுக்கான மாரத்தான் ஓட்டத்தைத் துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் கொடிசயைத்துத் தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று ஓடினர். காலேஜ் ரோட்டில் சிக்கண்ணா கல்லூரி, கொங்கணகிரி, அணைப்பாளையம் வழியாக கணியாம்பூண்டி பிரிவு வரை சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பி ஹவுசிங் யூனிட் வரை மொத்தம் 8 கிலோமீட்டர் தூரம் இந்த மாரத்தான் நடைபெற்றது. முன்னதாக, பெயர் பதிவு செய்து பங்கேற்ற அனைவருக்கும் டி சர்ட், பதிவெண் வழங்கப்பட்டது. பங்கேற்றோர் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்களுக்குப் பரிசு
இதில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த எல்.சக்திவேல் முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றார். கோபியைச் சேர்ந்த எம்.மாதவன் இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் பெற்றனர். அதேபோல் பெண்கள் பிரிவில் அன்னூரைச் சேர்ந்த எஸ்.சௌமியா முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கோவையைச் சேர்ந்த எம்.ஷப்னா ஷரீன் இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், கோபியைச் சேர்ந்த கே.ஜெயமாலினி மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் தொகை பெற்றனர். இத்துடன் அரியலூர் எஸ்.ஹரிதாஸ், பொள்ளாச்சி எம்.சபரீஸ்வரன், ஈரோடு எஸ்.மகேஷ், கருவலூர் எஸ்.வினோத்குமார், தேனி எஸ்.வாலகுருநாதன் ஆகிய ஐந்து பேர் ஆடவர் பிரிவிலும், பல்லடம் ஆர்.காவியா, திருப்பூர் தாரணி திவ்யா, கோபி எம்.யசோதா, கருவலூர் எஸ்.துளசிமணி, திருப்பூர் ஏ.ரவுசன்குமாரி ஆகிய ஐந்து பேர் பெண்கள் பிரிவிலும் தலா ரூ.1000 வீதம் ஆறுதல் பரிசு பெற்றனர். இந்த மாரத்தானில் பங்கேற்ற, இடது கை இல்லாத மாற்றுத் திறனாளியான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வனுக்கு சிறப்பு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், பலரும் வாழ்வதற்காக வேலை தேடி திருப்பூருக்கு வருவார்கள். அதுபோல் இந்த மாரத்தான் போட்டியிலும் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூருக்கு வீரர், வீராங்கனைகள் வந்திருக்கின்றனர். அவர்களை அரவணைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறது இந்த திருப்பூர். வெற்றி பெற்றோர் மட்டுமல்ல, இதில் பங்கேற்ற அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் என்று, வாழ்த்தினார்.
மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினர். தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாளர் கே.காமராஜ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், தீக்கதிர் எண்மபதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், கிட்ஸ் கிளப் பள்ளி குழுமச் சேர்மன் மோகன் கார்த்திக், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் ச.நந்தகோபால், சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினர். பரிசளிப்பு விழாவின் தொடர்ச்சியாக டிஜே நடனம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். மாரத்தான் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் தொண்டர்கள் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் சிறப்பாகப் பணியாற்றினர். நிறைவில், ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மு.திருப்பதி நன்றி கூறினார்.