இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்
கோடியக்கரை, செப். 26- நாகப்பட்டினம் அருகே உள்ள செரு தூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் திங்களன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ் ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப் பட்டனர். செவ்வாயன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கட லில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் (10-க்கும் மேற்பட்டோர்), 5 மீனவர்களை யும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட் களை கொள்ளையடித்துச் சென்றுள்ள னர். 2 நாட்களுக்கு முன்பும் இதேபோல் தாக்குதல் நடந்தது குறிப்பிடத் தக்கது.
உ.பி.யில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம், சிறுபான் மையினர், தலித் மக்கள் மீதான வன்முறை நாளுக்குநாள் அதி கரித்து வரும் நிலையில், மக்கள வைத் தேர்தலை ஒட்டி வன்முறை சம்பவம் மிக மோசமான அளவில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள குராரா கிரா மத்தில் கடந்த செப்., 17 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரி யார் பிறந்தநாள் விழா கூட்டத் தில் சுமார் 150 பேர் கூடியுள்ளனர். விழாவை ஏற்பாடு செய்த அப் பகுதி தலித் தலைவர்களான அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவதேஷ் மற் றும் அசோக் வித்யார்த்தி ஆகியோ ரின் பேச்சை அனைவரும் இறுதி வரை கவனமாகக் கேட்டுள்ள னர். மேலும் நிகழ்ச்சியில் குழந்தை களுக்கு சாக்லேட், டைரி, பேனா வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்திலி ருந்த சிலர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள னர். வீடியோவை கண்டு பதற்றத் தில் உறைந்த பாஜக, அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவதேஷ் மற்றும் அசோக் வித்யார்த்தி ஆகியோரின் மீது பிரிவு 295, பிரிவு 153ஏ கீழ் ஹமிர்பூர் போலீசார் மூலம் வழக் குப்பதிவு செய்துள்ளது.
தங்கம் பறிமுதல்
கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத் திற்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவ தாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதனடிப்படையில் சுங் கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சோதனையில் கேப்சூல் வடி விலும், தாள் வடிவிலும் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த 6 பயணிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப் புள்ள 5.4 கிலோ தங்கம் பறிமுதல் செய் யப்பட்டுள்ள நிலையில், 6 பேரும் கைது செய்யப்பட்டு, விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.
12 பேர் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்
பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்க ளில் கடந்த 24 மணி நேரத்தில் மட் டும் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த னர். கயா மற்றும் அர்வால் மாவட்டங்க ளில் தலா மூன்று பேரும், தர்பங்காவில் இருவர், அவுரங்காபாத், சமஸ்திபூர், சுபால் மற்றும் ஜமுய் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதில் கயா பகுதியில் சங்கம் குமாரி (13), ரதிம் குமாரி (10) என்ற 2 இளம் சிறுமி கள் படவுரா கிராம கால்வாயில் மூழ்க, சிறுமிகளை காப்பாற்ற முயன்ற ரஹிம் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தார். அர் வாலில் இரண்டு இரட்டை சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொறியியல் மாணவர்களுக்கு புதிய படிப்புகள் அறிமுகம்
சென்னை, செப்.26- பொறியியல் கல்லூரி மாணவர்க ளின் எதிர்கால தொழில் தேவைக ளுக்கு தயார்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வளர்ந்து வரும் படிப்புகள் அடுத்த பருவத் தேர்வில் இருந்து அறிமுகப் படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் சுமார் 320 இணைப்பு கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு படிக்கும் சிவில் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 6 மற்றும் 7-வது பருவத் தேர்வு ஏதேனும் இரண்டை தேர்வு படிப்புகள் படிக்க வேண்டும். வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் நிறுவனங்க ளில் இடம்பெற்ற தொழில் வல்லு னர்கள் நான் முதல்வர் திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் உள்ள மாணவர்க ளுக்கு இந்த படிப்புகளை எடுத்து செல் வார்கள் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.
தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை,செப்.26- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தில்லியில் நடைபெற்ற நாடாளு மன்ற சிறப்புக் கூட்டத்தொடர், சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கான சிறப்பு நிகழ்ச்சி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் திங்கட்கிழமை நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் என்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் திருமாவளவன் பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. உடனடியாக திருமாவளவன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதய நோய்குறித்து விழிப்புணர்வு வீடியோ போட்டி
சென்னை,செப்.26- இந்த ஆண்டின் ‘உலக இதய தினம்’ நிகழ்வின் அனுசரிப்பின் ஒரு அங்கமாக, சென்னை பிரசாந்த் மருத்துவமனை, ‘இளம் இதயங்களை பாதுகாப்போம்” என்ற பெயரில் பரப்புரை திட்டத்தை தொடங்க உள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் இதில் பங்கேற்று டிஜிட்டல் வீடியோ போட்டியில் கலந்துகொள்ளுமாறு அது அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 4, 2023-ம் தேதி வரை இப்போட்டியில் பங்கேற்கலாம். #Save Young Hearts என்பதை பயன்படுத்தி மற்றும் பிரசாந்த் மருத்துவமனை – ஐ டேகிங் செய்து “மாரடைப்பு. இதய செயல்பாடு நிறுத்தம் நிகழாமல் தடுப்பது மற்றும் இதய நலத்தை ஊக்குவிப்பது” என்ற கருத்தாக்கம் மீது ஒரு நிமிட சிறிய வீடியோ / ரீல் – ஐ தங்களது சொந்த இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்தி போஸ்ட் செய்யலாம். முதல் இரண்டு வெற்றியாளர்கள் ரொக்க விலைத் தொகையான ரூ. 1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் பெறுவார் கள். சமீப காலமாக, இளவயதினர் மற்றும் நடுத்தர வயதுள்ள நபர்கள் மத்தியில் இதய பிரச்சனைகளும், மார டைப்புகளும் அதிகரித்து பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்திருக்கிறது.எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி நடத்தப்படு கிறது.
தங்கம் விலை குறைந்தது
சென்னை, செப்.26- தங்கம் விலை கடந்த சில நாட்களா கவே ஏற்ற இறக்கமாக காணப்படு கிறது.செவ்வாயன்று (செப்.26) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் 1 கிராம் குறைந்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது.
சீமான் வழக்கு: விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.26- தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜய லட்சுமி வரும் வெள்ளிக்கிழமை (செப்.29) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது: அமைச்சர் துரைமுருகன்
சென்னை, செப்.26- காவிரி விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடக மாநிலத்தின் ‘முழு அடைப்பு’ போராட்ட அறிவிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்களுடைய மாநிலத்தில் முழு அடைப்பு நடத்துவது குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது”என்றார். தொடர்ந்து பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தான், கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்றில் நீதித்துறை என்ன சொல்கிறதோ, அதை சட்டமன்றமும், நிர்வாகமும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவார்கள் எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு செப்.13 முதல் 15 நாட்க ளுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது புதன்கிழமை (செப்.27) இந்த கெடு முடிகிறது. இதனிடையே கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றாலும், நமக்கு தரவேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் நமக்கு 11,000 கன அடி தண்ணீர் வரவேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
யூ டியூபர் வாசனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
சென்னை, செப்.26- சாலை விபத்தில் சிக்கி சிறையில் உள்ள யூ டியூபர் வாச னுக்கு இரண்டாம் முறையாக நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற வாசன், அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது வாகனம் கட்டுப்பாட்டை மீறி விபத்தில் சிக்கியது. இதில் காய மடைந்த வாசனை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதனைத் தொடர்ந்து, வாசன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறை யினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு வந்தபோது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி செம்மல் மீண்டும் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் விபத்து நடந்த அந்த இருசக்கர வாகனம் வெளிநாட்டு வாகனமா, அல்லது உள்ளூர் வாகனமா? என ஆர்.டி.ஓ அறிக்கை தாக்கல் செய்த பின்பு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.