states

அரசியல் சாசனமும் முக்கிய கருதுகோள் ஆன தேர்தல் போர்க்களம்!

தேர்தலில் வெற்றி பெறுவது யார்  என்ற கேள்வியை விட அரசியல் சாசனத்தை பற்றியே ஒவ்வொரு இந்திய வாக்காளரும் கவலைப்படுவது என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போ தைய தேர்தலில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக வெளிப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கரின்  அரசியல் வழியில்!

இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படம்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உபி ஆக்ரா வில் உள்ள சக்கிபட் பகுதியில் வைக்கப் பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியாக ஒரு காலத்தில் விளங்கிய ஜாதவ  இளைஞர்கள் இம்முறை தங்கள் அரசியல் தேர்வை மாற்றி உள்ள னர். 2019இல் இவர்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். இம்முறை அவர்கள் வாக்கு பாஜகவிற்கு அல்ல. ஏனெனில் பாஜக அரசியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். நமக்கு என்றென்றும் பாதுகாப்பு அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புதான். அதை பாஜக மாற்ற முயல்வதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

தேர்தல் ஆதிக்கத்தில் சொல்லாட்சி!

தேர்தல் ஆரம்ப கட்டத்தின் போது 400 இடங்கள் எங்கள் இலக்கு என்று பாஜக அறிவித்தது.அரசியல் சட்டத்தை மாற்ற பாஜகவிற்கு இது அதிகாரம் அளிக்கும் என கருதி எதிர்க்கட்சித் தலைவர்கள் அதற்கு எதிராக ஒன்று திரண்டனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஎஸ்பி-யின் பாரம்பரிய வாக்காளர்கள் கூட இம்முறை அரசியல் அமைப்பை காப்பாற்றுவதற்கு “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என ட்விட்டரில் குறிப்பிட்டார். ராகுல் காந்தியும் அரசியல் சாசனத்தின் ஒரு பிரதியை பிரச்சாரத்தின் போது கையில் எடுத்து சென்றார்.அரசியல் அமைப்பை காப்பாற்றுவதற்கான போர் என எதிர்க்கட்சிகள் அறிவித்தது தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் அமைப்பு கோட்பாடுகளுக்கும் சாதாரணச் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அரசியல் அமைப்பு கோட்பாடுகள் ஒவ்வொரு குடிமகனும் கீழ்படிய வேண்டிய உயர்நிலை ஆகும். சாதாரணச் சட்டங்கள் சமூகத்தை ஆளும் விதிகள். இவை அரசியல் அமைப்பு விதிகளால்  வழி நடத்தப்படுகின்றன. யாரை  திருமணம் செய்து கொள்ளலாம், என்ன உணவு உண்ணலாம் என்பது சாதாரணச் சட்டங்களுக்கு எடுத்துக்காட்டு. இந்த சட்டங்கள் மறுவரையறை செய்யப்படலாம். மேல்முறையீடு இதற்கு உண்டு. ஆனால் அரசியல் அமைப்பு மதிப்புகள் பாரபட்சமான சட்டத்தை சவால் செய்வதற்கான அடிப்படை உரிமைகளை வழங்குகின்றன. இந்த வேறுபாட்டை நாம் உணர வேண்டும். - வரலாற்று ஆசிரியர் ரோஹித் தேவ் எழுதிய மக்களுக்கான அரசியல் சாசனம்: சுதந்திர இந்தியாவின் வரலாறு முழு வதும் அடிப்படை உரிமைகளை பெறு வதற்கு சாதாரண குடிமக்கள் எவ்வாறு அர சியல் அமைப்பு கோட்பாடுகளை சுற்றி  அணி திரண்டு வருகின்றனர் என்பதை பற்றி இவருடைய நூல் ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறது. சமூக மற்றும் பொரு ளாதார இழப்பை சவாலுக்கு உட்படுத்துவதும் சமத்துவத்தை பாதுகாப்பதும் இந்திய அரசியல் சாசனத்தின் வலுவான அடித்தளமாக விளங்குகிறது.

முன்னாள் தலைமை  நீதிபதி ஓய்.வி.சந்திரசூட்

மினர்வா மில் என்ற வழக்கில் இந்தியா வின் முன்னாள் தலைமை நீதிபதி ஓய். வி. சந்திரச்சூட்  குறிப்பிடுகிறார்: சிந்தனை, அதன் வெளிப்பாடு, நம்பிக்கை, அதன் வெளிப்பாடு, வழிபாடு ஆகியவை பற்றிய சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையை அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்குகிறது. பொருளாதார அந்தஸ்து, சமமான வாய்ப்பு மற்றும் தனிநபரின் கண்ணியம் எவ்வளவு விலை கொடுத்தேனும் பாது காக்கப்பட வேண்டும். இந்த ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரங்களில் சட்டத்தை விட அரசியல் அமைப்பு மேலானது என்பதால் இன்று அது வெகுஜன போராட்டங்கள் மூலமாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ளது. இந்துராஷ்டிரா  என்றால் பாகுபாடு! பாசி சமூகத்தைச் சார்ந்த இளம் பாஜக  ஆதரவாளர் இதை மேலும் தெளிவுபடுத்து கிறார்: மோடியை ஆதரிக்கலாம். ஆனால் அவருடைய கனவான இந்துராஷ்டிரம் எனக்கு வேண்டாம்.ஏனென்றால் அது பாகு பாடுகள் நிறைந்தது. மாறாக, நம் அரசியல் அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது இடஒதுக்கீட்டை அளித்து நம்மை பாதுகாக்கிறது. எனவே, அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வடஇந்தியாவில் ஒரு இடைச்செருகல்!

அரசியல் அமைப்பிற்கும் அரசியல் அணி திரட்டலுக்கும் இடையே உள்ள தொடர்பு வட இந்தியாவில் ஜனநாயக அரசியல் பாதையை வடிவமைத்துள்ளது. பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவ கோரிக்கைகள் 1990 இல் உருவானபோது அதன் வரலாற்றுக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் இழப்பீட்டு விதிகளாக இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது. சாதி   இந்து கூட்டணியுடன் (இந்துத்வா) பெரும்பான்மைவாதத்தையும் புகுத்தி அரசியல் தேரோட்டத்தை மோடி பரி வாரங்கள் திசைமாற்றி விட்டுள்ளன. சாதி  அடிப்படையிலான அணி திரட்டலின் தர்க்கம் பின்வாங்கியது போல தோன்றியது. இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் 103ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை பாஜக அரசாங்கம் அனுமதித்தது எதிர்க்கட்சிகளையும் இது வாயடைத்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் பாஜகவின் தந்திரம்!

2024 தேர்தலில் அரசியல் அமைப்பின் இலக்கணம், உரிமைகள் ஆகியவற்றை இட ஒதுக்கீட்டின் மீள் எழுச்சியாக,மண்டல் அரசியலுக்கு திரும்புவதாக நாம் கருதி விடக்கூடாது. வேறு ஒரு தந்திரமும் இதில் உள்ளது. பாஜகவின் சாதியை மீறிய அரசியல் அணி திரட்டல் என்பதுதான் அது. இந்த நாடு நிறுவப்பட அடிப்படையாக இருந்த அரசியல் சட்டத்தையே மாற்றுவது என்பதுதான் இந்த சொல்லாடலின் பின்  உள்ள சதி. சாதிகள் மற்றும் சமூகங்களு டைய சமத்துவத்தை கொண்டு வர உறுதி யளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் பாஜக வினால் தகர்க்கப்படும் என்று உத்தரப்பிர தேசத்தில் உள்ள வாக்காளர்கள் புரிந்து கொண்டனர். பாஜகவிற்கு எதிரான அதிருப்தி யை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல் அமைப்பின் மீதான கவலைகள் ஜனநாய கம் அரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது அரசாங்கத்தின் சட்டப்பூர்வ ஜனநாயகத்தின் மாண்புகளை நீர்த்துப் போகச் செய்து விடும்.

முரண்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி!

இந்தியாவின் சமகால அரசியலை வடிவமைத்துள்ள ஆழமான முரண்பாடுகள் அரசியலமைப்பு குறித்த பிரச்சாரங்களில் பிரதிபலிக்கின்றன. தலித் வாக்காளர்கள் அரசியல் அமைப்பு, உரிமைகள் குறித்து கவலை கொள்கிறார்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடிய போது மத சமத்துவத்தை உயர்த்தும் அரசியலமைப்பு கொள்கை பாது காக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் குரல் தனித்து ஒலித்தது.

மோடியின் பிளவுவாத பிரச்சாரம்!
பிரதமரின்  விஷம் கலந்த தீவிர பிளவுவாத பிரச்சாரம் என்பது சாதியக் கூட்டணிகள் மற்றும் அரசியல் அமைப்பை மையமாக வைத்து தோன்றியதற்கான  எதிர்வினையாகும். இதற்கு பின்னால் உள்ள வகுப்புவாத ஆபத்தை வாக்கா ளர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனாலும் சாதி அடிப்படையில் ஆன பாகுபாடு, இடஒதுக்கீடு ஆகியவை அவர்களின் முதன்மையான கவலை. 2024 தேர்தல் உண்மையில் அரசியல் அமைப்பை காப்பதற்கான ஒரு போர். உரிமைகள்,சமத்துவம் பற்றிய உறுதியான அரசியலின் சாத்தியக்கூறுகளை இது நமக்கு எடுத்துரைக்கிறது. அதேபோல அரசியல் அமைப்பை காக்கும் போராட்டத்தில் முறியடிக்க வேண்டிய ஆபத்துகள் பற்றியும் சரியாக எச்சரிக்கிறது.

- யாமினி ஐயர், 
நீலாஞ்சன் சர்க்கார் 
அறிஞர்கள். பொதுக் கொள்கை 
ஆராய்ச்சி மையம்.
நன்றி : தி இந்து 29/5/24
தமிழில்: கடலூர் சுகுமாரன்


 

 

;