states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி!

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் காலமானார். பிரிட்டிஷ் வரலாற்றில் அதிக காலம் (70 ஆண்டுகள்) ராணியாக இருந்த பெருமைக்கு உரியவரான இரண்டாம் எலிச பெத்தின் மறைவுக்கு இந்தியா செப்டம்பர் 11 அன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும்; தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி ஞாயிறன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தேர்தல் துணை ஆணையரான ஹிர்தேஷ்குமார்!

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஹிர்தேஷ்குமார் இந்திய தேர்தல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1999-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வான இவரை துணை ஆணையராக நியமிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்ந்து படிப்ப தற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு  என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே ஐஐடி-க்களில்  சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ.  அட்வான்ஸ்டு  தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற  இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

பழங்குடியினரை படுகொலை செய்ய பாஜக சதி?

ராய்ப்பூர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, “நமது பழங்குடி யின சகோதரர்கள் 71 பேர் இங்கு கொல்லப்பட்டனர். ஆனால் பூபேஷ் பாகேல் ஜி கேரளா வில் ராகுல் காந்தியுடன் கைதட்டி கொண்டிருந்தார்” என்று கூறியிருந்தார். இதற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சத்தீஸ்கரில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஒருவேளை பழங்குடியினரை படுகொலை செய்யும் திட்டம் அவர்கள்  மனதில் இருக்கலாம். சதி செய்வதில் அவர்களுக்கு இணை இல்லை. அவர் (நட்டா) அப்படி ஒரு சம்பவம் நடக்க சதி செய்கிறார் என கருதலாம்” என்று பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

தில்லி ஆத் ஆத்மி அரசுக்கு அடுத்த குடைச்சல்!

தில்லி ஆம் ஆத்மி அரசு மதுபான பார்கள் உரிமம் வழங்கியதில் ஊழல் செய்ததாக ஏற்கெனவே  சிபிஐ மூலம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு  1000 தாழ்தளப் பேருந்துகள் வாங்கியதிலும் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ விசார ணையை தொடங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் பரிந்துரையை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா  ஒப்புதல் அளித்துள்ளார்.

ஷிண்டே - உத்தவ் ஆதரவாளர்கள் மோதல்!

மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்த பாஜக, இடையில் புகுந்து அதிகாரம் செலுத்தி வருகிறது. இதனிடையே, மும்பையில் ஞாயிறன்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு அதிகாலையில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியுள்ளது. அதிகாலை 12.30 மணிக்கு இரு பிரிவினரும் ஒருவொருக்கொருவர் பலமாக தாக்கிக் கொண்டுள்ளன.

தெலுங்கானா முதல்வர் புதிய கட்சி துவங்குகிறார்?

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உரு வாக்குவதற்கான முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் இறங்கியுள்ளார். ஏற்கெனவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  தலைவராக இருக்கும் சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக புதிய கட்சியை துவங்குவார் என்றும், ‘பாரத் ராஷ்டிர சமிதி’, ‘உஜ்வால் பாரத கட்சி’ மற்றும் ‘புதிய பாரத கட்சி’ ஆகிய பெயர்கள் பரிசீலனையின் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தசரா தினத்தன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடக்கும்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை என சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார். செப். 20-இல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் வளர்ந்தால் அரசு வேலை எங்கே?

“ஒப்பந்த வேலை முறை மிகப்பெரிய சுரண்டல். பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தால், மாநிலங்களும், ஒன்றிய அரசுகளும் அரசு வேலைகளை ஏன் குறைக்கின்றன? அனைத்து  மாநில அரசுகளும் தங்களது தற்காலிக ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்துமாறு கேட்டுக்  கொள்கிறேன். எங்கள் அரசாங்கங்கள் எங்கு அமைந்தாலும் நாங்கள் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவோம் என நான் உறுதியளிக்கிறேன்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த ஜூலை 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம்  தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு 3 வார இடை வெளிக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலை யில், “ஒ. பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினராக இல்லாத போது சாவியை ஒப்படைக்க  உரிமை கோர முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு தனி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) கோயில் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை விட குஜராத்தில் மின்கட்டணம் அதிகம்!

“தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளன. வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட மிக குறைந்த மின் கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன” என்று  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் கோயிலில் தடைபட்ட பக்தர்கள் தரிசனம்!

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வண்டலூர் பகுதியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தாமரை மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்தார். நிர்மலா சீதாராமன் வருகையையொட்டி, கோயிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியாவில் எரிபொருள் விலை குறைவுதானாம்..

“பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் எரிபொருள் பணவீக்கம் சுமார் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12 சதவிகிதம் குறைந்துள்ளது” என்று ஒன்றயி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

குஜராத் தொழிற்சாலையில் தீ : 4 பேர் பலி

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமையன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.