states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ராய்காட் நிலச்சரிவு : பலி 20 ஆனது

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திற்கு உட்பட்ட இர்சல்வாடி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘மணிப்பூர் சம்பவம் இந்தியாவிற்கு எதிரானது

“ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி மணிப்பூரில் அரங்கேறிய சம்பவம் இந்தியாவுக்கு எதிரானது. மணிப்பூரில் பாஜக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்” என, மணிப்பூர் பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்ற சம்பவம் குறித்து  சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

மணிப்பூர்-அமைதி காக்க முடியாது: மிசோரம் முதல்வர் 

“அமைதியாக இருப்பது ஒரு விருப்பமல்ல. “மணிப்பூரில் நடக்கும் கொடூர வன்முறைகள் அண்டை மாநிலத்தை மட்டும் பாதிக்கவில்லை, நாடு முழுவதும் நிலைமைகள் மோசமாகிவிட்டதைக் காட்டுகிறது. மணிப்பூர் வன்முறை குறித்து அமைதி காக்க முடியாது, முழு பிராந்தியத்திற்கும் நிரந்தர தீர்வு தேவை. ஒன்றிய, மாநில அரசுகள்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘மணிப்பூர் படுகொலைகளை மோடி முழுமையாக ஆதரிக்கிறார்’

“பாஜக மணிப்பூர் மாநிலத்தை சீரழிக்கிறது. மணிப்பூரில் பாஜக இழைக்கும் இந்த அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மணிப்பூரில் நடக்கும் படுகொலை களுக்கு பிரதமர் மோடி உடந்தையாக உள்ளார். குறிப்பாக அவர் மணிப்பூரில் நடந்த படுகொலைகளை முழுமையாக ஆதரிக்கிறார்” என  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாய் குற்றச்சாட்டினார்.

விமானசேவையை தொடங்க கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு அனுமதி

இடைக்கால நிதியுதவி மற்றும் விமான அட்டவணையின் ஒப்புதலின் அடிப்படையில் கோ பர்ஸ்ட் (Go First) நிறுவனம் விமான சேவையை மீண்டும் தொடங்கலாம் என்று  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான அட்ட வணையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் விமான நிறுவனம் டிக்கெட் விற்பனையைத் தொடங்க முடியும். பொருந்தக்கூடிய அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்கு வதை உறுதிசெய்யவும், செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள விமானத்தின் தொடர்ச்சியான விமானத் தகுதியை உறுதிப்படுத்தவும் வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு வஸ்திரங்கள் அனுப்பி வைப்பு

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 22  (இன்று) நடைபெறுவதையொட்டி, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள்,  மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல சீர்வரிசை  பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருவிழாக்கள் நடத்துவதில் பக்தி இல்லை: உயர்நீதிமன்றம்

அமைதிக்காக மக்கள் கோவிலுக்கு செல்லும் நிலையில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிர்ஷ்டம் எனவும் கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தியில்லை என வும் யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் விழாக்கள் நடத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

நாகாலாந்திலும் உடைந்தது தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் துணை முதல்வர் பதவியை பெற்ற அஜித் பவார் தலைமையிலான அணியில் சேர நாகாலாந்தில் உள்ள 7 என்சிபி எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சரத் பவார் அணி கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஜூலை 24ல் பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள்

பிளஸ்2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் ஜூலை 24 அன்று பிற்பகல் முதல் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற  இணையதளத்தில்  தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த  தேதியை பதிவு செய்து பதி விறக்கம் செய்து கொள்ள லாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலு வலகத்திற்கு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45  மணி வரை நேரில் சென்று  உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

கூடங்குளம் போராட்டம் : 18 பேருக்கு 7 ஆண்டு சிறை

வள்ளியூர், ஜூலை 21- கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை எதிர்த்து 2011-இல் பொதுமக்கள் திரளாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடர்பாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தாலும், 295 வழக்குகள் மட்டுமே தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. எஞ்சிய வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், வள்ளியூர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் இருந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் மற்றும் புஷ்பராயன், சேசுராஜன் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதாகவும் வள்ளியூர் நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களில் ராணி என்பவர் இறந்துவிட்டதால் மற்ற 18 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பர்சத் தீர்ப்பு வழங்கினார்.

கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே?

‘‘மேடைகளில் பேசு பவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதி விடுவோர் உள்ளிட்டோர் பொதுவான முறையில் பெண்களைக் குறித்துப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக, தானாக முன் வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம், மணிப் பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்கு தல் மீது எடுத்த நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாமலும் இருந்தது ஏன்? தேசிய மக ளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, பெண்கள் பாது காப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் (குஷ்பு) எங்கே போனார்? பாஜக விலும் மகளிர் பிரிவு இருக்கி றது. அதன் தேசிய தலைவ ராக இருக்கக் கூடியவர் (வானதி சீனிவாசன்) என்ன செய்து கொண்டிருந்தார்?’ என சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை ஆள பாஜகவுக்கு தகுதி உண்டா?

“மணிப்பூரில் கடந்த 80 நாட்களாக மக்கள் வேட் டையாடப்பட்டும் ஒன்றிய  அரசும் மாநில அரசும் பாரா முகத்துடன் இருந்துள்ளது. மனித உரிமைகளில் நாட்டம் கொண்ட மக்கள் இந்த ஆட்சி யை அனுமதிக்கலாமா? நாக ரிகம் - ஜனநாயகம் - மதச்சார் பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச்சீட்டால் பாடம் கற்பிப்பீர். மணிப்பூர் நிகழ்வுகளுக்கு பிறகும் நாட்டை ஆள பாஜகவுக்கு தகுதி உண்டா?” என்று திரா விடர் கழக தலைவர் கி.வீர மணி கேள்வி எழுப்பியுள் ளார்.

மணிப்பூர் சம்பவம் எதிரொலி:  மெரினாவில்  போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஜூலை 21- மணிப்பூரில் பழங்குடி இனத்தை சேர்ந்த 2 இளம் பெண்களை நிர்வாண மாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் வியாழக் கிழமை (ஜூலை 20) இரவு காந்தி சிலை அருகே திடீரென மே 17  இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக மெரினா காவல்துறையினர் சட்டவிரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத் தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங் கரை விளக்கம் வரையில் காவல் துறையினர் ரோந்து சுற்றி வருகிறார் கள்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஜூலை 21- கடந்த சில நாட்களாக ஏற்றத்து டன் காணப்பட்ட தங்கம் விலை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) சற்று குறைந்துள்ளது.  வியாழனன்று( ஜூலை 20) ஒரு  சவரன் தங்கம் ரூ.44,880-க்கு விற்கப் பட்டது. அதில் ரூ.320 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையானது. ஒரு  கிராம் தங்கம் ரூ.5,570-க்கு விற்பனை  செய்யப்பட்டது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராமுக்கு 40  பைசா குறைந்து ரூ.82-க்கு விற்பனை  செய்தனர்.

உலகச் செய்திகள்

கென்யாவில் விலையுயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. காவல்துறையின் அடக்குமுறையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில், போராடும் மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியில் விட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு ஆணையிட்டுள்ளது. 

கனடாவில் உள்ள சரக்குப் போக்குவரத்து மற்றும் கிடங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளனர். ஜூலை 22 அன்று தொடங்கவிருந்த 72 மணி நேர வேலை நிறுத்தம் வேறொரு நாளில் அறிவிக்கப்படும் என்று தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைநகர் பெர்லினின் தெற்குப்பகுதியில் தென்பட்ட பெண் சிங்கத்தை ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு ஜெர்மனி காவல்துறை தேடி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் அதைப் பார்த்ததாக மக்கள் கூறியதால், அனைத்துத் துறையினருக்கும் எச்சரிக்கை விடப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.