states

பாலைவனத்தில் நெல் விவசாயம் : சாதனை படைக்கும் சீன விஞ்ஞானிகள்

பெய்ஜிங், ஜூன் 2 - சீன விஞ்ஞானிகள் 75 நாட்களில் அறுவடை செய்யும் வகையிலான நெல் வகையை  பாலைவனத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.    சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள  ஜின்ஜியாங் உய்குர் பகுதி பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலைவன பசுமை இல்லங்களில் முதன்முறையாக  வேகமான வளரக்கூடிய நெல் வகையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர். இந்த நெல்வகை வெறும் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதன் பின்னணியில் அந்நாட்டின்   நகர்ப்புற வேளாண்மை நிறுவனம் (IUA), சீன வேளாண் அறிவியல் கழகம் ஆகியவை ஒன்றிணைத்து உணவுதானியங்களை ஆண்டு  முழுவதும் வேகமாக உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங் களை உருவாக்கி வருகின்றன. நகர்ப்புற வேளாண்மை நிறுவன தலைமை விஞ்ஞானி யாங்  கிச்சாங் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு சுமார் ஐந்து வருட  ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.  இந்த தொழில் நுட்பத்திற்காக இக்குழுவானது பாலைவனப் பகுதிகளில் உள்ள சூரிய ஆற்றலை பயன்படுத்தியுள்ளது.  பாரம் பரிய முறையில் தரையை உழுது பயிரிடாமல் மர அலமாரி வடிவி லான பல அடுக்கு செங்குத்து அலமாரிகளில் மண்ணற்ற முறை யில் இந்த நெல்வகையை சாகுபடி செய்கின்றனர். மற்றும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான அளவு சூரிய ஒளிக்காக பாலைவனத்தில் விழும் அதிக சூரிய வெப்பத்தை செயற்கை  ஒளி  மூலக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஒளி விளக்குகள் சரியான  வெப்பநிலை, நீர், காற்று மற்றும் உரம் கொடுக்கப்பட்ட நெல் நாற்றுகளுக்கு  நல்ல வளர்ச்சி தன்மையை வழங்குகிறது. நெல் நடவு முதல் அறுவடை வரை 75 நாட்கள் ஆகிறது. பாரம்பரியமாக வயல்களில் பயிரிடப்படும் நெல்லுடன் ஒப்பிடும் போது இந்த தொழில்நுட்பமானது நெல்லின்  வளர்ச்சி கால சுழற்சி யை சுமார் 40 சதவீதம் வரை குறைக்கிறது என்று  வேளாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் குழுவின் விஞ்ஞானி வாங் சென் பேசும் போது இந்த ஆராய்ச்சிக்கு  உள்ளூர் நெல்லை பயன்படுத்தினோம். நாற்று வளர 15 நாட்கள் ஆனது. பிறகு 2024  பிப்ரவரி மாதம் மண்ணில்லா சாகுபடி தொட்டிகளில் இந்த நெல் நாற்றுகளை நடவு செய்தோம். முழு உற்பத்தி சுழற்சிக்கு 60 நாட்கள் ஆனது  என தெரிவித்துள்ளார். நல்ல உற்பத்திக்கு தேவையான வசதிகள் கொண்ட பசுமை  இல்லத்தை அமைக்க மின்சாரம் உள்ளிட்ட சில ஆற்றல் வளங்கள் மிக மிக அவசியம். அதற்காக ஆராய்ச்சி நிறுவனமோ அல்லது அரசாங்கமோ மிக அதிகளவிலான செலவுகளை செய்ய வேண்டும். இத்தகைய சூழலில் சீனா அரசு பசுமை இல்லத்தை அமைக்க  பாலைவனத்தை தேர்வு செய்து மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களை சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்து முறையாக தகுந்த நிலையிலான பசுமை இல்லத்தை வடிவமைத்துள்ளது. இது  செலவுகளை குறைத்து உற்பத்தியை பெருக்கும் வகையிலான சிறப்பான திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மேலும் பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து  வரும் உணவுப்பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இத்தகைய ஆராய்ச்சிகள் மிக முக்கியமான தேவையாக உள்ள சூழலில் சீனா கம்யூனிஸ்ட் அரசு முன் மாதிரியாக விளங்கி வருகிறது. இவ்வாறு சில முக்கியமான பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வ மான தீர்வுகளை கொடுப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புகளை ஊக்குவிப்பது மிக அவசியமானது எனவே தான் சீனா கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டின் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கூட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்காக 10 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. நெல் மட்டுமின்றி இந்த பாலைவன பசுமை இல்லங்களில்  சோயாபீன்ஸ், சோளம் மற்றும் கோதுமை போன்ற பிரதான உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்றவற்றை  குறைந்த காலத்தில் அதிகமாக உற்பத்தி  செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் இந்த ஆராய்ச்சி குழு ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.