திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வரும்செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கேரள சட்டப்பேரவை தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேரவைத் தலைவர் பி ஸ்ரீராமகிருஷ்ணனையும் அவரது அலுவலகத்தையும் இணைக்கும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு உண்மைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் உண்மை இல்லை என்று அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக பல் வேறு ஏஜென்சிகள் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் பின்னணியில் இத்தகைய செய்தி இப்போது வெளிவருகிறது. பேரவைத் தலைவரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விஷயங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள் ளன. பெரும்பாலான பயணங்கள், வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தொடர்ச்சியான அழைப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பேரவைத் தலைவரின் சகோதரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் குடும்பத் தோடு பயணம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக சந்தேகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் மறைக்க எதுவும் இல்லை. இது தொடர்பான அனைத்தும் ஏற்கனவே பேரவைத் தலைவரின் முகநூல் பக்கத்தில்வெளியிடப்பட்டுள்ளன. தேவைப்பட் டால் அந்த விவரங்கள் அலுவலகத் தில் கிடைக்கும். பயணம் தொடர்புடைய தூதரகத்திற்கும் அவை தெரிவிக்கப்படுகிறது. தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒருபோதும் அவருடன் வெளிநாடு செல்லவோ, அவரை சந்திக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த செய்தி முற்றிலும் தவறு.எங்காவது தவறான செய்தி உருவாக்கப்படுகிறது. பின்னர், எல்லோரும் அதை எடுத்துக் கொள்ளும் ஒருவழியாக இது கருதப்படுகிறது. அரசமைப்பு நிறுவனத்தை அரசியல் விவாதங்கள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கு இழுப்பது சரியானதல்ல. அலுவல் அடிப்படையிலான பயணத்திற் காக அனைத்து சட்ட முறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அலுவல் நோக்கங்களுக்கான பயணச் செலவுகள் மட்டுமே அரசாங்கத்தால் செய்யப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகளால் அழைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு அவர்கள் இந்த பயணத்தை வழிநடத்துகிறார்கள். இதில் எவ்வித தெளிவற்ற தன்மையும் இல்லை.பேரவைத் தலைவர் அலுவலகம் இத்தகைய ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை உரிய விளக்கத்துடன் புறக்கணிப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.