திருவனந்தபுரம்:
மருந்து உற்பத்தி துறையில் கேரளத்தில் உள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமான கேரள மாநில மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ரூ. 14.2 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
மார்ச் இறுதிக்குள் லாபம் ரூ. 15 கோடியைத் தாண்டும் என்பதால், இது அந்த நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிறுவனத்தின் உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக ரூ. 100 கோடியைத் தாண்டி- ஜனவரி இறுதி வரையிலான உற்பத்தி மதிப்பு ரூ. 109 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ.118 கோடிக்கான விற்று வரவையும் ஈட்டியுள்ளது. 2019-20க்கான லாபம் ரூ. 7.13 கோடியாக இருந்தது. இது நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசாங்கம் ஆட்சியை விட்டுப் போகும்போது, 2015-16 ஆம் ஆண்டில் கேஎஸ்டிபி நிறுவனம் ரூ. 4.98 கோடி நஷ்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வகைப்படுத்தல், நவீனமயமாக்கல் ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளன. கொரோனா காலத்தில், கேஎஸ்டிபி நிறுவனம், சானிட்டைசர் உற்பத்தியையும் தொடங்கியது. இதுவரை 20 லட்சம் லிட்டர் சானிட்டைசரை உற்பத்தி செய்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான மருந்து தயாரிப்பில் இறங்கியது. குறைந்த விலையில் ஊசி மருந்துகளை வழங்க புதியஆலையை நிறுவியது. புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பதற்கான புற்றுநோயியல் பூங்காவின் கட்டுமானப் பணிகளும் புதிதாக தொடங்கப்பட்டுஉள்ளன. விரைவில் வெளிநாடுகளுக்கான மருந்துஏற்றுமதியையும் கேஎஸ்டிபி நிறுவனம் தொடங்க உள்ளது.