states

img

உணவும் மருந்தும் அனைவருக்கும் கிடைக்கும் ஆதிவாசி, அதிதி தொழிலாளர்கள் பற்றி கூடுதல் கவனம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி....

திருவனந்தபுரம்:
பட்டினிக்கு சாத்தியமுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்து, உணவோ சிகிச்சையோ கிடைக்காத எவரும் கேரளத்தில் இல்லை என்கிறநிலையை உறுதிப்படுத்துமாறு கேரள முதல்வர்பினராயி விஜயன் உள்ளாட்சி அமைப்புகளை அறிவுறுத்தியுள்ளார். செய்ய வேண்டியதை விரைந்து செய்வதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் கேரளத்தில் மே 8 முதல் மே 16 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர்பினராயி விஜயன் சனியன்று மாலை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பட்டினி இல்லாமல் அனைவருக்கும் உணவு உறுதி செய்யப்பட வேண்டும். உணவு தேவைப்படுவோரின் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்க வேண்டும். பிச்சை எடுப்போரும், தெருக்களில் வசிப்போரும் உள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனகீய ஓட்டல் இருக்கும் இடத்தில்அதன் மூலம் உணவு வழங்கப்படும். சமுதாயசமையலறை இல்லாத இடத்தில் உடனடியாக தொடங்க வேண்டும். குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

விருந்தினர் (வெளிமாநில) தொழிலாளர்களிடையே நோய் பரவும் ஆபத்து அதிகம். அங்குசிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். கோவிட் பரிசோதனையைத் தவிர்க்க யாரையும் அனுமதிக்க கூடாது. கோவிட் இல்லை என்பது உறுதியான நபர்களை உடனடியாக மாற்றி மற்றவர்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர்கள் கட்டுமானத் தளத்தில் தங்க வைக்கப்பட வேண்டும்.அல்லது அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். இதை அவர்களுக்கு வேலைவழங்குவோர் செய்ய வேண்டும். தொழிலாளர் துறை இதை மேற்பார்வையிடும். அவர்களுக்கு உணவு கிடைப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்துத் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் தவிர, மற்ற வாகனங்களையும் பயன்படுத்த முடியும். ஒரு பஞ்சாயத்தில் ஐந்து வாகனங்களும், நகராட்சியில் பத்து வாகனங்களும் இருக்க வேண்டும். வார்டு மட்டக் குழுக்களிடம் குறைந்தது ஐந்து ஆக்சிமீட்டர் கருவிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாயத்து - நகராட்சி மட்டத்தில் ஒரு முக்கிய குழு இருக்க வேண்டும். பஞ்சாயத்து - நகராட்சித் தலைவர் தலைமையிலான குழுவில் செயலாளர், சுகாதாரக் குழுவின் தலைவர்,ஹவுஸ் ஸ்டேஷன் அதிகாரி அல்லது காவல் நிலையத்தின் பிரதிநிதி, துறை மாஜிஸ்திரேட் மற்றும் மருத்துவ அதிகாரி இடம்பெற்றிருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் நபர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று முதல்வர் கூறினார்.

பஞ்சாயத்து அளவில் அழைப்பு மையம்
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கோவிட் அழைப்பு மையங்களை அமைத்து உடனடியாகநடவடிக்கைகளைத் தொடங்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இந்த அழைப்பு மையங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களிடம் உள்ளது என்றும் அவர் கூறினார். கோவிட் பரவுவது தொடர்பான எந்தவொரு முறைகேடு குறித்தும் வார்டு மட்டக் குழு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வர் கூறினார். வார்டு மட்ட குழு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வீட்டில் இருப்போர், கோவிட் உள்ளிட்ட எந்தவொரு வியாதிக்கும் இ-சஞ்ஜீவனி மூலம் டெலிமெடிசின் சேவைகளைப் பெறலாம். அனைவரும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக இந்த சேவையை முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகள், ஐசியூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்படுத்துவது குறித்த விவரங்களை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு முறை மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதில் அரசு ஏதேனும் குறைபாடுகளைக் கண்டால், கேரள தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

;