states

img

வகுப்புவாதத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஜகவின் திட்டங்கள் விவசாயிகளிடம் செல்லாது: பினராயி....

திருவனந்தபுரம்:
மக்களை இனவாதமாக அணிதிரட்டுவதில் முனைவர் பட்டம் பெற்ற பாஜகவின் சதிகள் விவசாயிகளிடம் விலைபோகாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து எல்டிஎப் சார்பில் திருவனந்தபுரம் தியாகிகள் மண்டபத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முதல்வர் பினராயி விஜயன் புதனன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் பரவி வரும் விவசாயிகளின் போராட்டத்தை சூழ்ச்சியால் நசுக்க முடியும் என்று பாஜக அரசு கருதிவிடக்கூடாது. இந்த கிளர்ச்சியை அடக்க முடியும் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த இயக்கத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அனைவரும் ஒன்று திரண்டு வருகிறார்கள் என்பதுதான்.புதிய மத்திய வேளாண் சட்டங்கள் கேரளாவுக்கு பொருந்துமா என்று பலர் கேட்கிறார்கள். நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்தால், அது கேரளாவையும் பாதிக்கும். விவசாய செலவுகள் அதிகரித்து வருகின்றன, விவசாயம் லாபகரமாக மாறவில்லை - இதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை. பொது விநியோகத் துறையை சீரழிக்கும். பாஜக அரசு விவசாயிகளின் நலன்களை அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே முன்னிறுத்துகிறது.

இந்தியா இதுவரை கண்டிராத வலிமையான விவசாய போராட்டம் இதுவாகும். விவசாயிகள் எழுப்பிய முழக்கங்கள் நாட்டின் பொதுத் தேவைகள். மத்திய அரசு விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அளிக்காமல் செயல்படுகிறது. உணவளிக்கும் விவசாயிகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய அங்கீகாரமும் ஆதரவும் அளிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயம் குறித்த சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தப்போவதாக அறிவித்தவர்கள் இவர்கள். ஆனால், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோதே கைவிடப்பட்டது என்துதான் உண்மை நிலை. விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் கூறினார்.

திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தை மற்ற மாவட்டங்களுக்கும் எல்டிஎப் விரிவுபடுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

;