science

img

அறிவியல் கதிர்

ஸ்மார்ட் கை பேசியும்  ஸ்மார்ட் பேண்டேஜும்
காயங்களுக்கு வெவ்வேறு மருந்துகளைக் குறிப்பிட்ட அளவு செலுத்தும் கைப் பட்டை(bandage)  ஒன்றை அமெரிக்க உயிர் மருத்துவ பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளார்கள். இதனுடன் கைபேசி அளவான மேடை இன்று வடமில்லாமல் (wireless) இணைக்கப்பட்டுள்ளது. அதனை இயக்குவதன் மூலம் கை பட்டையிலுள்ள குறு ஊசிகள் குறிப்பிட்ட மருந்தை குறிப்பிட்ட அளவில் செலுத்துமாம். வலி குறைவு. பேண்டேஜை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை போன்ற பலன்கள் இதில் உள்ளனவாம்.

தொன்மையானது; ஆனால் புதுமையானது

சென்ற வாரம் ஆழ் கடல் ஆய்வில் ஜெல்லி மீன்கள் பயன்படுவது குறித்து பார்த்தோம். அவைகள் 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றியது. என்றும் ஆனால் அவற்றின் உடல் கூறுகளில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை என்றும் அந்த ஆய்வாளர்களில் ஒருவரான சூ(Xu) கூறுகிறார். ஜெல்லி மீன்கள் குறித்து மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம். ஜெல்லி மீன் எனபது மீன் இனம் அல்ல. அது உயிரின வரிசையில் மிகக் கீழ் நிலையில் உள்ள ஒரு இனம். ஆனால் டையனோசர்களுக்கும் முந்தியது. அவைகளுக்கு இதயம், நுரையீரல் மூளை ஆகிய உறுப்புகள் இல்லை. அவைகளின் தோல் மிக மெல்லியது. அதன் மூலம் ஆக்சிஜனை உட்கொள்கிறது. ஆகவே நுரையீரல் தேவையில்லை. அவற்றின் உடலில் ரத்தம் இல்லை. எனவே இதயம் தேவையில்லை. தன்னை சுற்றி நடக்கும் மாற்றங்களை தோலின் அடியில் பரவிக் கிடக்கும் நரம்புப் பின்னல்கள் மூலம் உணர்கிறது. எனவே சிக்கலான சிந்தனைகளை உணரும் மூளை தேவையில்லை. ஜெல்லி மீன்கள் பெரும்பாலும் வட்ட வடிவமான மணி போன்ற தோற்றமுடையவை. அதிலிருந்து உணர் கொம்புகள் (tentacles) தொங்குகின்றன. கிரேக்க புராணத்தில் சாபத்தினால் தலை முடிகள் பாம்பாக மாறிய கொடிய பெண்ணின் பெயர் மெடுசா. அதைப் போல ஜெல்லி மீன்கள் இருப்பதால் அவை மெடுசா என்றும் அழைக்கப்படுகின்றன. 1991இல் அறிவியலாளர்கள் நுண் புவிஈர்ப்பு விசை ஜெல்லி மீன்களை எவ்வாறு பாதிக்கின்றது என்று ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அவற்றை எடுத்து சென்றனர். அவை அங்கு பெருகின. அங்கு பிறந்தவை பூமிக்கு வந்ததும் பூமியின் புவி ஈர்ப்பு விசையை சமாளிக்க தெரியாமல் தடுமாறினவாம். சில ஜெல்லி மீன்களுக்கு மிக நீண்ட உணர் கொம்புகள் இருந்தாலும் அவை அதில் சிக்கிக்கொள்வதோ அல்லது அதனால் கொட்டப்படுவதோ (sting) இல்லை. ஏனென்றால் அந்த உணர் கொம்புகள் வழவழப்பானவை. மேலும் அவை மற்ற வகை ஜெல்லி மீன்களை மட்டுமே கொட்டுகின்றன.  சிங்கப் பிடரி ஜெல்லி மீன் (lion’s mane jellyfish) உலகின் மிகப் பெரிய ஜெல்லி மீன்கள். அவற்றின் உணர் கொம்புகள் சில சமயம் 27 மீட்டர் வரை இருக்கும். அதாவது உலகிலேயே மிகப் பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலத்தை விட பெரியது. ஜெல்லி மீன்கள் 300,000வரை ஒரு கூட்டமாக சேர்ந்திருக்கும். இதற்கு ‘புளூம்’ (bloom), ‘ஸ்வார்ம்’(swarm), ‘ஸ்மாக்’  (smack) என்றழைக்கிறார்கள். ஜெல்லி மீன்களின் உடலில் பெரும்பகுதி நீரினால் ஆனது. எனவே அது கரையில் ஒதுங்கினால் அதிலிருக்கும் தண்ணீர் ஆவியாகி அவை கிட்டத்தட்ட மறைந்து போய்விடலாம். ஜெல்லி மீன்கள் மற்ற வகை ஜெல்லி மீன்களுக்கு இரையாகின்றன. துனா, சுறா, வாளை மீன்கள், சாலமன், கடல் ஆமைகள் போன்றவையும் ஜெல்லி மீன்களை விரும்புகின்றன.

மீட்டும் விரல் நான் உனக்கு 
டாக்மர் டர்னர் என்ற 53 வயதுப் பெண்மணிக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடக்கும்போது வயலின் வாசிப்பதை தொலைக்காட்சியிலும் காணொலிகளிலும் பார்த்திருப்போம். அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியின் அருகில்தான் அவரது விரல்களை இயக்கும் பகுதியும் இருந்தது. எனவே அது பாதிக்கப்படாமல் கட்டியை அகற்றியுள்ளார்கள். முதலில் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மண்டையோடு திறக்கப்பட்டது. பின் மயக்கம் தெளிவிக்கப்பட்டு அவரை வயலின் வாசிக்க சொல்லியிருக்கிறார்கள். அதே சமயம் கட்டி அகற்றும் அறுவையும் நடந்துள்ளது. அவரது விரல்களை அசைக்கும் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவே இவ்வாறு நடத்தப்பட்டதாம். இதை செய்த மருத்துவர் கியோமார் அஷ்வாவும் (Keyoumars Ashkan) பியானோ வாசிக்கும் இசைக் கலைஞராம். அறுவை சிகிச்சையை திட்டமிட்டு செய்த மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன  டர்னர் தான் 10 வயதிலிருந்தே வயலின் வாசிப்பதாகவும் அது தனது பேரார்வம் என்கிறார்.
(மயக்கமில்லாமல் உணர்வோடு இருக்கும்போதே அறுவை செய்தால் அவருக்கு வலிக்காதா? இது குறித்து அடுத்த வாரம்  பார்க்கலாம்)

;