politics

img

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் : சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விகளுக்கு பதிலில்லை... கொள்ளையடிப்பதில் மதுரை அமைச்சர்கள் உடந்தை.... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு....

மதுரை:
மதுரையில் புதனன்று நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்றநிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

நிகழ்வில் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மனுக்களும்,  அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

திருமங்கலத்தைச் சேர்ந்த வாசு, “ திருமங்கலத்தில் அமைந்துள்ள டோல்கேட்டை நீக்கவேண்டும். அவசரத்திற்கு அவசர ஊர்தி கூட செல்ல முடியவில்லை” என்றார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “ இந்தத் தொகுதியில்இது ஒரு முக்கியமான பிரச்சனை. திமுகஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கும் என்றார்”.உசிலம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாண்டியராணி, “எனது வீட்டில் மூன்று பெண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். உதவி செய்ய யாரும் இல்லை. நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.”  ஸ்டாலின்பதிலளிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு திட்டத்தின் கீழ் உங்களுக்கு உறுதியாக வீடு ஒதுக்கித் தரப்படும்” என்றார்.சோழவந்தானைச் சேர்ந்த சுபாஷ்சந்திபோஸ், “ஐந்து வருடங்களாக ரயில்வே மேம்பாலப் பணி முடிவடையாமல் இருக்கிறது. வாடிப்பட்டி- மதுரை செல்லும் வழியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வோர் தவிக்கின்றனர்” என்றார்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “ திமுக ஆட்சி அமைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகள் தீர்க்கப்படும் என்றார்.”தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்திலும்கொள்ளை நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வந்த பணத்தை கபளீகரம் செய்துள்ளனர். கமிஷன் ஒன்றையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஸ்மார்ட் சிட்டி குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர்  உட்பட அதிகாரிகள் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை. ஸ்மார்ட் சிட்டியில் கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளரும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், பொன்முத்துராமலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

-நமது நிருபர்