india

img

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கரண் தாப்பர்

தி வயர் இணைய இதழ்

2024 மார்ச் 19

வணக்கம். வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக பொதுநலன் கருதி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அந்த வழக்கில் மூன்றாவது மனுதாரராக இருந்ததை பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை. அந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி நடந்து கொண்டுள்ள விதம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன செய்யப் போகிறது, இரண்டாவதாக - பொதுத்தளத்திற்கு வந்துள்ள உண்மைகள், விவரங்களை அந்தக் கட்சி எவ்வாறு பார்க்கிறது என்ற இரண்டு முக்கியமான கேள்விகள் இங்கே எழுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியிடம் இந்த நேர்காணலில் நான் இன்று எழுப்பும் இரண்டு முக்கியமான அம்சங்களாக அந்தக் கேள்விகளே இருக்கின்றன.   

திரு.யெச்சூரி, தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பதிலளிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி நடந்து கொண்ட விதத்தை - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக - நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? பாரத ஸ்டேட் வங்கியின் நடத்தை எவ்வாறு இருந்ததாகக் காண்கிறீர்கள்?     

பாரத ஸ்டேட் வங்கி முழு விவரங்களையும் வெளியிடாதது துரதிர்ஷ்டவசமானதாகும். அவர்களுக்கு ஏதோ அழுத்தம் இருந்திருக்காலம் என்பது வேறு விஷயம். ஆனால் பொதுத்தளத்தில் இணையதளத்தில் வெளியிடும் வகையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு இணங்காமல் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். அந்தச் செயல்முறை தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுத்திடும் அவர்களுடைய முயற்சி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. முதலில் கூடுதல் அவகாசம் வேண்டுமென்று அவர்கள் கேட்டார்கள். நீதிமன்றம் அந்த அவகாசத்தைத் தர மறுத்த போது எல்லா தரவையும் வைத்திருந்த அவர்கள் ஆல்பா எண்ணெழுத்து எண்களைத் தரவில்லை. உச்ச நீதிமன்றம் அவற்றைத் தருமாறு மீண்டுமொரு முறை உத்தரவு பிறப்பித்தது. இப்போது அவர்களிடமிருந்து முழு தரவுகளும் வெளிவரும் என்று நாம் நம்பலாம். ஆனால் உண்மையில் பாரத ஸ்டேட் வங்கி பொதுத்தளத்தில் அனைத்து தகவல்களும் வெளியிடப்படுவதை மறைப்பதற்கு அல்லது அதனைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது தெரிகிறது. இதுபோன்று நாட்டின் முன்னணி வங்கி நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.        

பாரத ஸ்டேட் வங்கி  இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் குறித்த சில விவரங்களைப் பார்க்கலாம். முதலில் வங்கி நடந்து கொண்ட விதம் சரியானதுதானா என்ற விஷயத்திலிருந்து தொடங்கலாம். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு பத்திரங்களை இரண்டாயிரம் ரூபாய்க்கு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாங்கியதாக பத்திரிகையாளர் பூனம் அகர்வால் கூறியுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி  சமர்ப்பித்த விவரங்களில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு அக்டோபரில் அந்தப் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  பூனம் அகர்வால் சொல்வது சரியென்றால் பாரத ஸ்டேட் வங்கி  முதலில் வெளியிட்ட பத்திர விவரங்களின் துல்லியம் குறித்து கவலை கொள்ளத்தக்க கேள்விகள் நம்மிடையே எழுகின்றன. இரண்டாவதாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் அதன் நடைமுறைகளைப் பற்றி  எழுகின்ற சந்தேகத்தால் ஒரு வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழுகின்றன - இல்லையா?  

பூனம் அகர்வால் சொல்வது சரியென்றால், நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளையும் அது எழுப்பவே செய்கிறது. மிகப் பொருத்தமான கேள்விகளாகவே அவை இருக்கின்றன. ஆனால்  பூனம் அகர்வாலின் வீடியோ அவரது ட்விட்டர் கைப்பிடியில் இருந்து இப்போது நீக்கப்பட்டு விட்டது. அதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. வீடியோ நீக்கப்பட்டிருப்பதால் நாம் அதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏதொவொரு காரணத்திற்காக தேர்தல் முடியும் வரை இந்த தகவல்களை வெளியிடுவதை பாரத ஸ்டேட் வங்கி தாமதப்படுத்த முயன்றிருப்பது உண்மையாகும். அது மிகத் துரதிர்ஷ்டவசமான காரியமாகவே இருக்கிறது. பொதுத்தளத்தில் தகவல்கள் அனைத்தையும் வெளியிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் இப்போது மிகக் கடுமையாக வலியுறுத்தியிருப்பது பற்றி உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தேர்தல் முடியும் வரை பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுத்தளத்தில் வெளியிடத் தாமதிப்பது அதாவது பத்திரங்களை வாங்கியவர் மற்றும் பணத்தைப் பெற்றுக் கொண்டவர் பெயர்களை இணைத்து தகவல்களை வெளியிட ஜுன் முப்பதாம் நாள் வரை மூன்றரை மாத கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்ட முயற்சி குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி குறித்த அம்சத்திற்கு வரலாம். மூன்றரை மாதங்களுக்குள் அதைச் செய்து முடிக்க முடியாது என்று பாரத ஸ்டேட் வங்கி  கூறுகிறது. இங்கே என்னுடைய கேள்வி மிக எளிமையானது. பத்திரங்கள் யாருக்கு விற்கப்பட்டது, அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டது யார் என்ற இரண்டு விவரங்களும் ஒரு வங்கியிடமிருந்து உடனடியாகக் கிடைக்காமல் போவதற்கான சாத்தியம் எதுவும் இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் வணிகத்தின் முடிவில் கணக்குகளை முடிப்பதற்கு அந்த விவரங்கள் அனைத்தும் நிச்சயமாக ஒரு வங்கிக்குத் தேவைப்படும். ஒரு வங்கியால் அதுபோன்ற  விவரங்கள் இல்லாமல் செயல்படவே முடியாது அல்லவா?    

முற்றிலும் உண்மை. அவர்கள் சொல்வது வெறும் சாக்குப்போக்காக மட்டுமே இருக்கிறது. அந்த தகவல் வங்கியிடமிருந்து உடனடியாகக் கிடைக்கக் கூடியதேயாகும். ஆனாலும் அவர்கள் அதை  வெளியிடுவதற்கு விரும்பவில்லை. அதனால்தான் அந்த தகவலை வெளியிட மறுக்கின்ற வகையில் அவர்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் வேலை செய்கிறார்கள் என்கிறேன். அது மிகவும் மோசமானது. இதுவரையிலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து நாடாளுமன்றத்தில் இந்த முன்மொழிவை நிராகரித்து எதிர்த்து வாக்களித்த போது நான் தெரிவித்திருந்த அனைத்து விதமான கவலைகளையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. அந்த நிதி மசோதாவை முன்னெப்போதும் செய்யப்படாத வகையில் திருத்தி மக்களவைக்குத் திருப்பி அனுப்பி வைத்தோம். தங்களுக்கிருந்த பெரும்பான்மையின் காரணமாக அந்த திருத்தங்களை அவர்கள் நிராகரித்தனர். எண்ணெழுத்து எண்கள் இல்லாமல் இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் மட்டுமே அப்போது நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு சந்தேகமும் உண்மையென்பதை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த தகவல்களைக் கொண்டே உங்களால் தேர்தல் பத்திரங்கள் மூலம் என்ன நடந்துள்ளது என்பதை எளிதாகப் புரிந்து  கொள்ள முடியும்.   

திரு.யெச்சூரி இப்போது உங்களிடம் இரண்டு நேரடியான கேள்விகளைக் கேட்கிறேன். ஜூன் முப்பதாம் நாள் வரை இன்னும் மூன்றரை மாதங்கள் அவகாசம் கொடுத்தால்தான் பத்திரங்களை வாங்கியவருடன் அவற்றைப் பெற்றுக் கொண்டவரை இணைத்துப் பொருத்த முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியது. அதே நேரத்தில் அன்றாடம் வணிக  முடிவில் அனைத்து வங்கிகளும் தங்களுடைய கணக்குகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் தெரிகிறது.      

சரி

இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளது அல்லது உச்ச நீதிமன்றத்திடம் பொய் சொல்லியிருக்கிறது - இந்த இரண்டில் எது நடந்திருக்கிறது?

அது அவர்களைப் பொருத்தது. தவறான தகவலை அவர்கள் தந்துள்ளார்கள் என்றே குற்றம் சாட்டலாம். மரியாதைக்குரிய நீதிமன்றமே அதனைத் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்று தெரிந்தே அதைச் செய்தார்களா அல்லது தங்களுக்குத் தரப்பட்ட அழுத்தத்தால் செய்தார்களா என்பதில் அவர்கள் நேர்மையுடன் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நேர்மையுடன் இருக்கவில்லை.

வேறு வார்த்தைகளில் அதைக் கூறுவதென்றால், நீதிமன்றத்திடம் அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

அப்படித்தான் சொல்ல முடியும். அதுபோன்ற முடிவிற்கே ஒருவரால் நிச்சயம் வர முடியும்.  

பொய் சொன்னார்கள் என்று கூறுவது சத்தியப்பிரமாணத்தின் கீழ் வங்கி நீதிமன்றத்திடம் பொய் சொல்லியிருக்கிறது என்றுதானே பொருள்படும்?  

ஆமாம். நீதிமன்றம்தான் அதைப் பரிசீலிக்க வேண்டும்

பாரத ஸ்டேட் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நாட்டின் மிக உயரிய வங்கி பொதுத்தளத்தில் இந்த தகவல்களை வெளியிடுவதைத் தாமதப்படுத்துவதற்கான தந்திரத்தில் ஏன் இறங்கியது என்பதை நீதிமன்றம் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே கருதுகிறேன்.

கூடுதல் அவகாசம் கேட்டு விவரங்களை வழங்கத் தவறிய பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது உத்தரவில், நீதிமன்ற உத்தரவிற்கு பாரத ஸ்டேட் வங்கி இணங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. நீதிமன்ற அவமதிப்பு என்பது மிகவும் லேசான குற்றச்சாட்டு, நீதிமன்றத்திடம் பொய் கூறினார்கள் என்பதே  அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு என்று நீங்கள் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். முதன்முதலில் அவர்கள் கால அவகாசம் கேட்டபோது பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு கோரிய மனுக்களில் ஒன்றாக கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நான் தாக்கல் செய்திருந்த மனு இருந்தது. மரியாதைக்குரிய நீதிமன்றம் தானே ஒரு முடிவுக்கு வந்து பாரத ஸ்டேட் வங்கி எந்தவொரு தகவலையும் மறைக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் சில தகவல்கள் மறைக்கப்படுவதாக நீதிமன்றத்திடம் சந்தேகம் இருக்கிறது என்றே சொல்கிறோம். 

ஆக பாரத ஸ்டேட் வங்கி மீதான நடவடிக்கை நீதிமன்றத்திடம் பொய் கூறியதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

ஆம். நீதிமன்றம் இப்போது அதைத்தான் பரிசீலிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது,   

இரண்டாவது நேரடியான கேள்வியை இப்போது உங்கள் முன்வைக்கிறேன். பொய் கூறியது, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சி, நீதிமன்றத்திடம் பொய் கூறுவதற்கான முயற்சி என்று இந்த மூன்றில் எது அரசின் அழுத்தத்தால் நடந்திருக்கும் என்று காண்கிறீர்கள்?     

பாரத ஸ்டேட் வங்கி போன்றதொரு நிறுவனம் இதுபோன்ற தந்திரங்களில் ஈடுபடுவதற்கு வேறு எந்தவொரு காரணமும் இருக்காது என்றே நான் கருதுகிறேன்.

அரசு பாரத ஸ்டேட் வங்கியின் மிகப்பெரிய உரிமையாளராக இருப்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளில் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமானவை அரசிடமே இருக்கின்றன. எனவே தவறான நடவடிக்கை மேற்கொண்டதற்கு பாரத ஸ்டேட் வங்கி பொறுப்பாக வேண்டுமானால் வங்கியின் உரிமையாளர்களான அரசின் மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது?     

இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்கும் வேலையைத்தான் செய்துள்ளது. அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் அதன் பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறினாலும், இந்த தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கும் போது குறைந்தபட்சம் நான்கு விஷயங்கள் தெளிவாகின்றன….   

நான் இங்கே சற்று குறுக்கிட விரும்புகிறேன். அரசியலமைப்பிற்கு முரணாக, குறைபாடுள்ள திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக  அரசிற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அரசுக்குச் சொந்தமான வங்கி, அரசின் வழிகாட்டுதலின் பேரில் வங்கி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது அல்லது நீதிமன்றத்திடம் பொய் சொல்லியிருக்கிறது என்பதால் நீதிமன்றத்திடம் பொய் கூறிய விவகாரத்தில் அரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என்றே நான் கூற வருகிறேன்.

நிச்சயமாக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு.  மரியாதைக்குரிய நீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கியின் உரிமையாளர் அரசு என்ற அம்சத்தைப் பரிசீலனையில் கொள்ள வேண்டும்.    

தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அரைகுறையாக அளித்த தகவல்கள், அதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் பொதுத்தளத்தில் வெளியிட்ட விவரங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் மூலம் கிடைத்திருக்கும் உண்மைகளுக்கு  நாம் இப்போது வருவோம். 2019ஆம் ஆண்டு முதல்  2020 ஆம் ஆண்டு வரை பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம்  பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிய பத்திரங்களில் 37%,  திமுக வங்கியிடமிருந்து பெற்ற பணத்தில் 77% என்ற அளவில் திமுகவிற்கு 509 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான விவரங்களிலிருந்து நாம் தொடங்கலாம். அமலாக்கத்துறை அல்லது சிபிஐ அல்லது இவையிரண்டிடமிருந்து எதிர்கொண்ட  அந்த நிறுவனம் எதிர்கொண்ட விசாரணைகள், அந்த நிறுவனம் திமுகவிற்குப் பணம் கொடுத்துள்ளது பற்றி  ஏதோவொரு சந்தேகம் உள்ளது.

ஆமாம். ஆனால் திமுக மட்டும் இங்கே இல்லை. திமுக ஏற்கனவே அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ள நிலையில் நன்கொடையாளர்கள் யார் என்ற விவரங்களைச் சொல்ல பாஜக ஏன் மறுக்கிறது என்பதை முதலில் சொல்லுங்கள். இங்கே பாருங்கள்… தேர்தல் பத்திர திட்டத்தில் கிடைத்த மொத்த பணத்தில் அறுபது சதவிகிதம் பாஜக என்ற பெரிய திமிங்கிலத்திடம் சென்றுள்ளது.    

பாஜகவிடம் நான் பிற்பாடு வருகிறேன். ஏனென்றால் தற்போது வெளியாகியிருக்கும் விவரங்களில் பாஜக எதையும் ஏற்கவில்லை அல்லது ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து அதிக அளவில் அவர்கள் பணம் பெற்றிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் எந்தவொரு காரணமும் நம்மிடம் இப்போது இல்லை. அது பற்றி வியாழனன்று ஆல்பா எண்ணெழுத்து எண்கள் வெளியிடப்படும் போதுதான் தெரிய வரும். ஆனால் திமுகவின் ஒப்புதலின் படி பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து அவர்கள் 509 கோடி ரூபாய் பெற்றுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. அது பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் வாங்கிய பத்திரங்களுக்கான தொகையில் 37%, தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ஒட்டுமொத்தமாகப் பெற்றதில் 77% என்ற அளவிலே உள்ளது. லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பியூச்சர் கேமிங் நிறுவனம் அமலாக்கத்துறை. சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் நமக்குத் தெரிந்தவற்றை வைத்து திமுகவுக்கு பியூச்சர் கேமிங் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட பணத்தை ஐயத்திற்குரியதாக அல்லது சந்தேகத்திற்குரியதாகக் கருத வேண்டுமா என்பதையே இப்போது உங்களிடம் திமுகவைப் பற்றி நான் கேட்கிறேன்.       

தங்கள் ஐந்தொகைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ள லாபத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக அளவில் நன்கொடையை அளித்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியவையே. அவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் கூட்டாளி உட்பட

அப்படியில்லை

உங்கள் கூட்டாளி உட்பட

இல்லை. எங்கள் எதிரியையும் சேர்த்து 

மற்றவர்களிடம் பிறகு வருவோம். இப்போது உங்கள் கூட்டாளி பற்றி கேட்கிறேன்.

அவர்களிடம் ஏன் பிறகு வர வேண்டும்?   

ஏனெனில்

பெரிய  திமிங்கிலங்கள் தப்பிச் செல்ல ஏன் அனுமதிக்கிறீர்கள்?

பாருங்கள்

இவையெல்லாவற்றிற்கும் முன்னால் இதை நீங்கள் கேட்க வேண்டும். இந்தப் பணம் - அதாவது அரசியல் ஊழல் மூலம் வருகின்ற இந்தப் பணம் நான்கு வழிகளில் வருகிறது. ஒன்று நேரடியாக மாஃபியா பாணியில் மிரட்டி பறிப்பதன் மூலம். இரண்டாவதாக - ஊழல் நடவடிக்கைகளுக்காக அளிக்கப்படும் கைமாறு மூலம். மூன்றாவதாக - சம்பாதிக்கும் லாபத்தைக் காட்டிலும் பலமடங்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் செய்யும் பணமோசடி மூலம். நான்காவதாக - தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்து விற்கும் மருந்து நிறுவனங்களுக்கு விசாரணையில் இருந்து அளிக்கப்படும் பாதுகாப்பின் மூலம். நன்கொடை அளித்த உடனேயே அவர்கள் மீதான  நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டு விடும்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் அதற்கு வருகிறேன். ஒரு கட்டமைக்கப்பட்ட விதத்தில் நாம் இதைப் பேசுவோம். இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நீங்கள் பார்வையாளர்களிடம் பேசுவது இதுவே முதல் முறையாகும். நான் கூறுவதைப் போலப் பேசினால்தான் உங்களுடைய பார்வை குறித்து நன்கு அறிந்திராத பார்வையாளர்களால் உங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கூட்டாளி குறித்த கேள்வியை முதலில் முடித்துக் கொள்கிறேன். சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட லாபத்திற்கு அப்பால் நன்கொடை அளித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக பியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் குறித்தும் நீங்கள் அவ்வாறு இருப்பீர்கள் எனக் கருதுகிறேன். பதிலாக ஆம் அல்லது இல்லை என்பதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்.    

அப்படியில்லை. தேர்தல் பத்திரங்களை ஏற்க மறுத்த ஒரு கட்சியாக நாங்கள் இருக்கிறோம். தேர்தல் பத்திரத் திட்டமே தவறு என்று நாங்கள் கருதுகிறோம். எங்களைப் பொருத்தவரை, எங்களுடைய நிலைபாட்டில் இந்தப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டவர்களிடம் தவறு இருப்பதாகவே நினைக்கிறோம்.   

அதுசரி. அப்படியென்றால் அது உங்கள் கூட்டாளி திமுகவையும் உள்ளடக்கியதுதான். தேர்தல் பத்திரங்களை ஏற்றுக் கொண்டது தவறு என்றால், பியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தேர்தல் பத்திரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்

நீங்கள் ஏன் இன்னும் அவர்களைப் பாதுகாக்கிறீர்கள்

அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்தான், ஆனாலும் அதுவும் கவனிக்கப்பட வேண்டும்.

அப்படியில்லை. பாஜகவை நீங்கள் ஏன் காப்பாற்றுகிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.

நான் பாஜகவைக் காப்பாற்றவில்லை. ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு கட்சியாகப்  பார்க்கவே நினைக்கிறேன்

பாஜகவிலிருந்து தொடங்குங்கள்

ஒரு காரணத்துக்காவே நான் உங்கள் கூட்டாளியிடமிருந்து தொடங்கினேன். தேர்தல் பத்திரம் பெற்ற மற்றவர்களைப் போல திமுகவுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதையும் விசாரித்து சரிபார்க்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்

எங்கள் கூட்டாளிகள் அல்லது எதிரிகள் யாராக இருந்தாலும்… இந்த தேர்தல் பத்திர திட்டம் அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்குகிறது என்று கருதுவதால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முதலிலேயே  சொல்லியிருக்கிறோம்.

சரி

எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த திட்டத்தை ஏற்கக் கூடாது.    

இப்போது உங்களுடைய எதிரியான திரிணாமுல் காங்கிரஸிற்கு வருவோம். உங்களைத் தோற்கடித்து,  வெற்றி பெற்று கடந்த பதினைந்து ஆண்டுகளாக வங்காளத்தை அவர்கள் தங்களிடம் வைத்திருக்கிறார்கள். உங்கள் எதிரியான திரிணாமுல் காங்கிரஸ், உங்கள் முன்னாள் கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் யார் அளித்தது என்று தெரியாமலே தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளன. சில சமயங்களில் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பத்திரங்கள் போடப்பட்டதாகவும், வேறு சில சமயங்களில் யார் அனுப்பி வைத்தார்கள் என்பது தெரியாமலே பத்திரங்கள் சிலர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்தக் கட்சிகள் கூறியுள்ளன. எகானமிக் டைம்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட மொத்தத் தொகை எழுபத்தைந்து கோடி என்றிருக்கிறதுஅவர்கள் இப்போது அவ்வாறு கூறுவது நன்கொடை அளித்தவரின் அடையாளத்தை மறுப்பதற்காக, மறைப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழ்ச்சியா? இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான நீங்கள் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தேர்தல் பத்திரத் திட்டத்தின் சாராம்சமே நன்கொடை அளிப்பவர், பெறுபவர்களின் அடையாளங்களை மறைப்பதாக இருக்கிறது. இந்த அம்சத்திற்கே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். மரியாதைக்குரிய நீதிமன்றம் இப்போது உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்ட இந்த முயற்சி உண்மையில் அனைத்து விவரங்களையும் மறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் அனைவரும் அதையே செய்ய முயல்கின்றனர்.     

பத்திரங்கள் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் கிடைத்ததாக அல்லது தனிநபர்கள் மூலமாக  அநாமதேயமாக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறுகின்ற திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

பாஜகவிற்கு எதிராக எடுக்கப்படும் அதே நடவடிக்கைதான். இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் முக்கிய குற்றவாளி பாஜகதான். அவர்களை நீங்கள் ஏன் காப்பாற்றுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒருவரையொருவயும் பாதுக்காக்கவில்லை. யாரையும் நான் பாதுகாக்கவில்லை

இல்லையில்லை. ஒருவரை மிரட்டி பணம் பறிப்பதை மத்திய அமைப்புகள் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அந்த அமைப்புகள் பாஜகவின் கீழ்தான் உள்ளன.

அது சரிதான்.

சாண்டியாகோ மார்ட்டின் குறித்து நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். அவர் மீது அமலாக்கத் துறை ரெய்டுகளை நடத்துகிறது, சிபிஐ சோதனைகளை மேற்கொள்கிறது. ஆனால் தேர்தல் பத்திரங்களை அவர் வாங்கிய பிறகு இந்த சோதனைகள் அனைத்தும் மர்மமான முறையில் ஏன் நிறுத்தப்பட்டன என்பதை நீங்கள் சொல்லுங்கள்.  

இப்போது அந்தப் பிரச்சனைக்கு வரலாம்

அதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்போது அந்தப் பிரச்சனைக்கு வருவோம். அது முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்

ஆம்

தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்த பிறகு கிடைத்துள்ள தகவல்களில் இருந்து மூன்று முக்கியமான பரந்த போக்குகள் தெளிவாக வெளிப்படுகின்றன. அமலாக்கத்துறை அல்லது சிபிஐ அல்லது அவை இரண்டால் ரெய்டு மேற்கொள்ளப்பட்ட சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு பல நிறுவனங்கள் பத்திரங்களை வாங்கியுள்ளன. இரண்டாவதாக பல நிறுவனங்கள் அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் தங்களுக்கு வழங்கப்படுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்னர் அல்லது அதற்குப் பின்னர் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. மூன்றாவதாக சில வாரங்களுக்கு முன்பு  அல்லது அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் மிகக் குறைவாக சில லட்சங்களுக்குள்ளான மூலதனத்துடன் நிறுவப்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளன. வெளியாகியுள்ள விவரங்களிலிருந்து தெளிவாக வெளிப்பட்டுள்ள இந்த மூன்று வகையான முடிவுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது குறித்து உங்கள் எதிர்வினை என்ன?

இன்னொன்றையும் - ஏற்கனவே இன்னொரு விஷயத்தையும் நான் கூடுதலாக உங்களிடம் கூறியிருக்கிறேன். மத்திய ஏஜென்சிகளின் விசாரணையை எதிர்கொள்ளும் நிறுவனங்கள்  குறிப்பாக போலி மருந்து நிறுவனங்கள். தொற்றுநோய் காலத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ரெம்டெசிவீர் தயாரித்த நிறுவனங்கள் - இந்த மருந்து நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக நூறு கோடி ரூபாயை கொடுத்த பிறகு எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் நான்கை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இவையனைத்தும் நான் கூறிய உண்மையையே சுட்டிக்காட்டுகின்றன. ஒன்றிய அரசின் அதாவது பாஜக அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகின்ற மத்திய அமைப்புகள் மூலமாகவே நேரடியாக மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசால் தரப்பட்ட ஒப்பந்தங்களுக்கான கைமாறாகப் பணம் பெறப்பட்டுள்ளது. அதைத்தான்  உச்ச நீதிமன்றம் சந்தேகப்பட்டது. மூன்றாவதாக நாடாளுமன்றத்தில் நான் ஏற்கனவே எச்சரித்த ஷெல் நிறுவனங்கள். ஷெல் நிறுவனங்களுக்காக அவர்கள் கார்ப்பரேட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். பத்திரங்கள் கொண்டு வரபப்டுவதற்கு முன்பாக - ஒரு நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டினால் அதன் லாபத்தில் ஏழரை சதவிகிதத்திற்கு அதிகமாக நன்கொடை அளிக்க முடியாது என்பதாகவே சட்டம் இருந்து வந்தது. அந்த தடையை இவர்கள் நீக்கினார்கள். ஷெல் கம்பெனிகள் வர அனுமதித்தார்கள். மூன்றாவதாக மருந்து நிறுவனங்களுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு பற்றி நான் ஏற்கனவே கூறினேன்.  

ஆக இன்று நீங்கள் பாஜக மீது திட்டவட்டமான குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். மோடி அரசு மிரட்டி பணம் பறித்ததாக கருதுகிறீர்களா? .   

உண்மைகள் உங்களுக்குக் காட்டுகின்றன .குற்றம் சாட்ட வேண்டிய அவசியமே இல்லை என்பதைத்தான் உண்மைகள் உங்களுக்குக் காட்டுகின்றன. ரெய்டு நடத்தப்படுகிறது - அதற்குப் பிறகு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படுகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ரெய்டு நடத்தப்படுவதற்கு சற்று முன்பு அல்லது அதற்குப் பிறகு பாஜகவிற்கு பத்திரங்கள் வாங்கப்பட்டிருப்பது மிரட்டி பணம் பறிப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெறும் சில நாட்களுக்கு முன்பாக அல்லது பெற்ற சில நாட்களுக்குள்ளாக பத்திரங்கள் குறிப்பாக பாஜகவிற்காக வாங்கப்பட்டிருப்பது மிரட்டி பணம் பறிப்பது ஆகாது - அது நிச்சயம் சலுகையாகவே இருக்கும்.

அது சலுகைகளுக்கான கைமாறு

தெரிந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகை

ஆம், அது ஒரு வகையில் சலுகைதான், உண்மையில் அவர்கள் தங்களுக்குள் ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக தங்கள் கஜானாவை நிரப்புவதற்காக மிரட்டி பணம் பறித்ததாக, சலுகை அளித்து கைமாறு பெற்றுக் கொண்டதாக பாஜக மீது குற்றம் சாட்டுகிறீர்கள்.

இதுவரையிலும் வெளிவந்துள்ள உண்மைகள் சந்தேகத்திற்கு இடமின்றி அதையே காட்டுவதாக நான் உறுதியாகச் சொல்வேன்

தேர்தல் இப்போது மிக நெருக்கத்தில் இருப்பதால் என்ன மாதிரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் அரசு அல்லது ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் எழுப்புகின்ற குற்றச்சாட்டுகளை அரசே விசாரிக்க முடியாது. எனவே எந்த வகையான விசாரணை நடத்தப்பட வேண்டும்?

தேர்தல் இப்போது நடைமுறையில் இருப்பதால் அதனைப் பரிந்துரைப்பது நீதிமன்றத்தின் கைகளிலேயே உள்ளது. இப்போது தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என்று வேண்டுமென்றே சொல்கிறார்கள். அப்படியானால் என்ன செய்ய வேண்டும் என்பதை மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றமே பரிந்துரைக்க வேண்டும். அது தன்னுடைய பங்கையாற்ற வேண்டும்.  

இந்த விஷயத்தை நீங்கள் நீதிமன்றத்திடம் எழுப்புவீர்களா? நடத்தப்பட வேண்டிய விசாரணையின் தன்மை பற்றி நீதிமன்றம் இப்போது எதுவும் சொல்லப் போவதில்லை. தகவல்களைக் கிடைக்குமாறு அது செய்துள்ளது. தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே சென்று தேவையான விசாரணையின் தன்மையைப் பரிந்துரைக்க வேண்டும் என்று நீங்கள் நீதிமன்றத்திடம் சொல்லுங்கள்.   

ஒட்டுமொத்தத் தகவலும் ஆல்பா எண்ணெழுத்து எண்களுடன் பொதுத்தளத்தில் கிடைக்கப் பெற்றதும், தகவல்களை இணைக்கும் வேலை முடிந்ததும் மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தோன்றுகிறது. இதுபோன்று சொல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொருளாகும்.

மீண்டும் நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வீர்களா?

முதலில் வெளியிடப்படும் விவரங்களை படிக்க வேண்டும். பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்வோம்.  அதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக விவரங்களைச் சரியாகப் படிக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

மிகவும் ஆவலுடனும் ஆர்வத்துடனும் காத்திருக்கும் விஷயத்தைப் பற்றி இப்போது பேசலாம். இருபத்தியொன்றாம் தேதி வியாழன் மாலை ஐந்து மணிக்குள் அதாவது நாற்பத்தியெட்டு  மணி நேரத்திற்குள் ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள ஆல்பா எண்ணெழுத்து எண்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாங்கப்பட்ட பத்திரங்களில், அதே போல் பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட  ஒவ்வொரு பத்திரத்திலும் மறைந்திருக்கும் எண்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும் போது என்ன விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கிறீர்கள்?  

என்ன செய்ய வேண்டும் என்று பற்றி இப்போது நாங்கள் விவாதித்து வருகிறோம். மிரட்டி பணம் பறித்தது, சலுகைகளுக்காக வழங்கப்பட்ட கைமாறுகள், ஷெல் நிறுவனங்கள் போன்ற அறிகுறிகளையே கிடைத்திருக்கும் விவரங்கள் காட்டுகின்றன. இவையனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும், அது உறுதி செய்யப்பட்டவுடன் யாரெல்லாம் பத்திரங்களை கைமாறாக வாங்கிக் கொடுத்தார்கள், விசாரணையைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் வகையில் யாரிடமிருந்தெல்லாம் பத்திரங்கள் பெறப்பட்டன என்பது போன்ற விவரங்கள் அனைத்தும் தெரிய வரும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் இதனைத் தொடர வேண்டும்.

ஆக மிரட்டி பணம் பறிப்பது, சலுகைகளுக்கான கைமாறு போன்றவற்றிற்கான சான்றுகளாக அந்த ஆல்பா எண்ணெழுத்து எண்கள் இருக்கும்.

ஆம், அவை நிச்சயம் அதைத் தெளிவாக்கிக் காட்டும்.

இது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பகுப்பாய்வை  தெளிவாக, விரிவாக, ஆழமாகக் கொண்டு செல்வதற்கு மற்றுமொரு கேள்விக்கான பதில் தேவைப்படுகிறது. பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளனவா அல்லது அவர்களுடைய கருத்தியல் அர்ப்பணிப்பு பத்திரங்களில்  வெளியிடப்பட்ட பிறகுதான் தொடங்கியதா என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியுள்ளது. பத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்வது, அரசியல் கட்சி மீதான அர்ப்பணிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்ட பிறகுதான் தொடங்கியது என்றால், அது பத்திரங்கள் வருவதற்கு முன்பாக சட்டப்பூர்வமாகத் தங்கள் பங்கையளித்து வந்த அதே நபர்கள் பிற வழிகளைக் கண்டறிவதற்கான வித்தியாசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதையே குறிக்கும்.   

ஆம். சலுகையாகப் பெறப்பட்ட ஒப்பந்தங்களுக்கான கைமாறு அல்லது பணமோசடி செய்யும் நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்களை உருவாக்குதல் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வழியில் செல்வதற்குத் தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகளை தேர்தல் பத்திரங்கள் விவகாரம் திறந்து வைத்தது. என்னைப் பொருத்தவரை அவை சட்டவிரோதமான செயல்களாகும்.

அதனால்

அதனால்தான் இந்த விவகாரம் அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்குகிறது என்று நான் கூறினேன்.

திரு.யெச்சூரி இப்போது நாம் என்ன சொல்கிறோம் என்றால் - ஒரு நிறுவனம் குறிப்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிறுவனமாக அல்லது அது மிகக் குறைவான மூலதனத்துடன் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்து பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசியல் கட்சிக்கு முதன்முதலாக நன்கொடை அளிக்கத் தொடங்கியிருந்தால், பத்திரங்கள் வெளியாவதற்கு முந்தைய ஆண்டுகளில் நன்கொடை அளிப்பதற்கான காரணம் எதுவும் இல்லாத நிலையில் அவை இருந்திருந்தால் அந்த நிறுவனங்கள் மீது  சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.

நிச்சயமாக அது தான். இன்னுமொரு விஷயத்தையும் சொல்கிறேன். நன்கொடையாளர்களின் பெயர்களும் மறைக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கை என்னை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதுவரையிலும் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கணக்குகள் மூலமாகவே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு  வந்துள்ளது.  யார் யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும்.  எனவே இப்போது அடையாளத்தை மறைப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது? இதுபோன்று அடையாளத்தை மறைக்க வேண்டிய தேவை இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இப்போது திடீரென்று அடையாளத்தை மறைக்கும் வேலை மிகவும் அவசியமான தேவையாகி இருக்கிறது.

நீங்கள் கூறுவதை  நன்கொடை அளித்தவர்களுக்கு எதிராக யாராவது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து விடக் கூடாது என்பதாலேயே அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்று கூறுவது வெறுமனே சாக்குப்போக்கு என்பதாக வேறு வார்த்தைகளில் எடுத்துக் கொள்ளலாமா?  

முன்பெல்லாம் நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும். அதுகுறித்து யாருக்கும் எந்தவொரு பிரச்சனையும் இருந்ததில்லை என்றே சொல்கிறேன்.

நேர்காணல் முடிவதற்கு முன்பாக உங்களிடம் மற்றுமொரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். சமீபத்தில் ஐந்து அல்லது எட்டு நிமிடங்களுக்குள் உள்ள ஒரு நேர்காணல் வைரலானது. அதில் தமிழ்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.தியாகராஜன் நாம் விவாதித்தவாறு வெறுமனே சலுகைகளுக்காக வழங்கப்பட்ட கைமாறு, மிரட்டி பணம் பறிப்பது மட்டும் இல்லை என்பதாக மட்டுமே  தேர்தல் பத்திரங்கள் இருக்கவில்லை என்று கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்களால் உருவாகியுள்ள பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை என்று அவர் கூறியிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் பொருளாதாரரீதியாக வெற்றி பெற்றிருப்பவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் அரசை வைத்துக் கொள்வதற்கு உதவுவதால், ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தையே அவை மோசமாகப் பாதித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதை எனது வார்த்தைகளில் கூறுவதானால் ஜனநாயகத்தை அவர்கள் பணநாயகமாக மாற்றியிருக்கிறார்கள் எனலாம். இது அவரது வார்த்தை கிடையாது. நீங்கள் அவருடன் எந்த அளவிற்கு உடன்படுகிறீர்கள்?    

ஆமாம். நம்மிடையே பொதுவில் அறியப்பட்டதாக அது இருந்தது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். தேர்தல் பத்திர திட்டம் அனைவரும் சமமாக ஒரே தளத்தில் போட்டியிடுவதை மறுக்கிறது என்று நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். அது சமதளத்திலான போட்டிக்கு இடையூறாக இருப்பதால் தேர்தல் களம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். அவ்வாறு தடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகமும் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. பணநாயகமாக மட்டும் இல்லாமல் அது ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல வைப்பதாகவும் இருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான கட்டுப்பாடு, பணபலத்தின் மூலம் தேர்தல் செயல்முறையைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளால் தேர்தல் பத்திரங்களே ஜனநாயகத்தின் தன்மையை தீர்மானிக்கப் போகின்றன. பிடிஆருடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். தேர்தல் பத்திர திட்டம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழிப்பதற்கான தீவிர நடவடிக்கையாகவே இருக்கிறது.  

இந்த நேர்காணலின் முடிவிற்கு நாம் வந்து விட்டோம். பொய்ச் சாட்சியத்தின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக நீங்கள் கூறியுள்ள - நான் முக்கியம் என்று கருதுகின்ற - தகவலை பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தி இந்த நேர்காணலை முடிக்கப் போகிறேன். அனைத்து தகவல்களும் பொதுத்தளத்தில் வெளியான பிறகு பொய்த் தகவலை அளித்ததன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நீங்கள் அணுகப் போகிறீர்கள். நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது மட்டுமின்றி, வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்திடம் பொய் கூறியதால் பாரத ஸ்டேட் வங்கி மீது நடவடிக்கை அவசியம் என்று நம்புகிறீர்கள். நான் சொல்வது சரிதானா என்று கூறுங்கள். அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்ன வங்கியின் உரிமையாளராக இந்த அரசு இருக்கின்ற காரணத்தால் அரசின் உத்தரவின் பேரிலேயே வங்கி அவ்வாறு செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை உச்ச நீதிமன்றம் பரீசீலிக்க வேண்டும் என்றும் கேட்கப் போகிறீர்கள். உச்ச நீதிமன்றம் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கப் போகிறீர்கள்.      

நிச்சயம் அவற்றை நாங்கள் பரிசீலிப்போம். அனைத்து தகவல்களும் நம்மிடம் இருக்கும் போது இந்த நடவடிக்கைகளை நிராகரிக்க மாட்டேன். கிடைக்கப் போகும் தகவல்களின் அடிப்படையில் அடுத்து செய்ய வேண்டியவற்றை நிச்சயமாகப் பரிசீலனை செய்வேன்.    

திரு.யெச்சூரி எனக்காக நேரம் ஒதுக்கியமைக்காக மிக்க நன்றி.

நன்றி கரண்.

https://thewire.in/law/watch-electoral-bonds-cpim-sitaram-yechury

;