india

img

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.எம்.யூ மாணவர்கள் மீது வழக்கு பதிவு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 ஐ, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களும், இந்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற இயலாது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது. இதற்கு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 25,000 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மசோதாவை திரும்ப பெறும் வரையில், கல்லூரியை மூடவும், பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 20 பேரின் பெயர் குறிப்பிட்டும், 500 மாணவர்களின் பெயர் குறிப்பிடாமலும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

;