india

img

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்..... எதிர்க்கட்சிகளின் இடைவிடாத விமர்சனங்கள்.... போராட்டங்களுக்கு பணிந்தார் பிரதமர் மோடி....

புதுதில்லி:
சுமார் 2 மாத காலமாக தடுப்பூசி விவகாரத்தில் மவுனம் காத்து, பொறுப்புகளையும் சுமைகளையும் மாநில அரசுகளின்தலையில் சுமத்தி, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோக காரணமாக இருந்துவிட்டு, மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும், ஒரு கட்டத்தில் சொந்தக் கட்சியினரும் எழுப்பிய கூக்குரலுக்கு வேறு வழியின்றி பணிந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

திங்களன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு, வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும்’’ என்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில், “மோடி அரசு இப்போதாவது அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உண்மையாக அமல்படுத்த வேண்டும்; இதில் எந்தவிதமான குறைபாட்டுக்கும் இடமளிக்கக் கூடாது. இன்னும் ஏராளமாக செய்ய வேண்டியிருக்கிறது. பல்லாயிரக்கணக் கான உயிர்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக மிக துயரகரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் - மே மாதங்களில் உச்சமடைந்த கொரோனா தொற்று பரவல் வடமாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத பெரும்  அழிவை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தனர். ஆக்சிஜன் இல்லை; படுக்கை வசதிகள்இல்லை; உரிய மருத்துவக் கட்டமைப்புகள்இல்லை; ரெம்டெசிவிர் மருந்து இல்லை எனத் துவங்கி, தடுப்பூசிதான் தீர்வு என்பது மிகத் தெளிவாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்யாது; மாநிலங்களே தேவையான தடுப்பூசிகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியது மட்டுமல்ல; பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் எந்தவிதத்திலும் செயல்பட அனுமதிக்கப்படாமல், சீரம் நிறுவனம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் ஆகிய இரண்டுதனியார் தடுப்பூசி உற்பத்தி நிறுவனம்மட்டும் உள்நாட்டுத் தேவையையும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆர்டர்களையும் பூர்த்தி செய்யும் என்று எந்தவிதமான திட்டமிடலும் தயாரிப்பும் இல்லாமல் மோடி அரசு அறிவித்தது. அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிக்கு மூன்றுவிதமான விலைகள் நிர்ணயித்து, அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் வழி செய்தது. இதன் விளைவாக தடுப்பூசி தட்டுப்பாடு தீவிரமடைந்தது.

எதிர்க்கட்சிகளின் தலையீடு
இந்தப் பின்னணியில் நாடு முழுவதும்உள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை கடுமையாக விமர்சித்தன. மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தின. காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜம்மு-காஷ்மீர் மக்கள் முன்னணி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசே பெற்றுத்தர வேண்டும் என்றும் பிரதமர் மோடியை வலியுறுத்தி னர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான பினராயிவிஜயன், மு.க.ஸ்டாலின், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே போன்றவர்கள் இப்பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் தலையீடு
தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை மிகவும் மோசமானது என்றும் இதுவரையிலும் அனைவருக்கும்இலவச தடுப்பூசி என்று உறுதிசெய்யப் பட்டிருந்த இந்தியாவின் நீண்டகால தடுப்பூசிக் கொள்கையை மோடி அரசுதலைகீழாக மாற்றி, கார்ப்பரேட் மருந்துக்கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்தை வழங்க வழிசெய்யும் விதத்தில் தடுப்பூசிகளுக்கு மூன்றுவிதமான விலைகளை நிர்ணயித்தது மட்டுமல்ல; மத்திய அரசு தனது பொறுப்பை கைகழுவி மாநில அரசுகளிடம் தள்ளிவிட்டது இந்திய சுகாதாரத்துறையின் பெரும் சீரழிவு என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகவிமர்சித்தது. ஒரு நாள் கூட இடைவிடாமல் சமூக ஊடகங்களில் இப்பிரச்சனையை எழுப்பி மத்திய அரசை விளாசித்தள்ளினார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. இத்தகைய பின்னணியில் இரண்டு முக்கிய செயல்பாடுகள் நிகழ்ந்தன. ஒன்று,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் 11 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசியை கொள்முதல் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக முன்னிறுத்தி முதலமைச்சர்கள் மத்திய அரசை நோக்கி குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மற்றொரு நிகழ்வு, தமிழகத்தில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக மத்திய அரசு இயக்கிட வேண்டும்; அல்லது தமிழக அரசுக்கு அதை குத்தகைக்கு தர வேண்டும்என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 

பிரதமர் அறிவிப்பு
தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக நாடு முழுவதும் இருந்து மோடி அரசை நோக்கி எழுந்த இத்தகைய தொடர் விமர்சனங்கள், கடும் கண்டனங்கள் இவற்றின் பின்னணியில் வேறு வழியின்றி திங்களன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனதுபொறுப்பில் வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என்று கூறியுள்ளார். அவர் தனது உரையின் போது மேலும் கூறியதாவது:

உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் மற்றும் விமானம் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம்கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது. 

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி
கொரோனாவுக்கு குறிப்பிட்ட நாடுகள்மற்றும் நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 2 மருந்துகள் உருவாக்கப்பட்டன. தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன.தற்போது 23 கோடிக்கும் மேலானவர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் 7 நிறுவனங்களில் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. குழந்தைகளுக்கான 2 தடுப்பூசிகள் மீது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள்வலியுறுத்தின. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின.

எனவே, இனி அனைத்து தடுப்பூசிகளும் மத்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் மேற்கொள்ளும் 25 சதவீத தடுப்பூசி பணிகள் மத்திய அரசால்கையாளப்படும். இது இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். தடுப்பூசி குறித்து சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இதனை அவர்கள் கைவிட வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஜூன் 21 ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி வழங்கப்படும். இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் தீபாவளி வரை தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.