புதுதில்லி:
மக்களைக் காட்டிலும் மாடுகள் மீது அக்கறை காட்டும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. இதற்காக, ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து, மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ‘ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’ என்ற தேசியபசு ஆணையத்தையும் செயல்படுத்தி வருகிறது.
அறிவியல் ரீதியாக பசுக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடு என்ற பெயரில், கடந்த 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ‘காமதேனு ஆயோக்’ அமைப்பானது, பால்பொருட்கள் மட்டுமன்றி, பசுவின் மாட்டுச் சாணம், சிறுநீர் ஆகியவற்றை வைத்து செல்போன் சிப் (Chip), வேதிக் பெயிண்ட் (VedicPaint), கோமியம் பினாயில் (Cow urine-phenyle) என பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்க வேண்டும் என்று றி வருகிறது. இந்த தொழிலுக்கு 60 சதவிகிதம் வரை மானியநிதியுதவியும் அளித்து வருகிறது.
அதனொரு பகுதியாக, ‘‘நாட்டு பசுக்களின் மீதான முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய அளவிலான ‘பசு அறிவியல்’ தேர்வை (Kamdhenu Gau-Vigyan Exam), பிப்ரவரி 25 அன்று நடத்தப் போவதாக, காமதேனு ஆயோக் அறிவித்தது.‘காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார் எக்ஸாம்’ என்ற பெயரில் தேசிய அளவில் நடைபெறும் இந்த இணையதளத் தேர்வில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நான்கு தரப்பினரும் கலந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
இதனிடையே, பிப். 25 தேர்வுநாள் நெருங்கிவரும் நிலையில், ‘பசு அறிவியல்’ தேர்வில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறும், ஊக்கப்படுத்துமாறும் கல்லூரி நிர்வாகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.