india

வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16-17 வேலை நிறுத்தம்: மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆதரவு

புதுதில்லி, டிச. 9- நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரின்போது வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் எண்ணத்துடன் கொண்டுவரப்பட இருக்கும் வங்கிச் சீர்திருத்தங்கள் சட்டமுன்வடிவினை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16-17 தேதிகளில் நடத்திடவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆதரவினையும் ஒருமைப்பாட்டினையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

 இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட இணைந்துள்ள மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU), தாங்கள் ஏன் 2021 வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை எதிர்க்கிறோம் என்பதை விளக்கி விரிவான அளவில் பிரச்சாரம் செய்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், “மக்களின் பணம் மக்களின் பயன்பாட்டிற்காகவே” என்கிற குறிக்கோளுக்கு முற்றிலும் எதிராக, “மக்களின் பணம் தனியார் பயன்பாட்டிற்கு அளிப்பதற்காகவே” கொண்டுவரப்படுகிறது. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பணம் தனியார் கார்ப்பரேட்டுகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கப்படும்.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் கூறியிருப்பதுபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்கள் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாது அவற்றை ஏமாற்றிவரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகளே இத்திருத்தச் சட்டத்தின்மூலமும் பயன்பெறுவார்கள்.

பொதுத்துறை வங்கிகள் திறனற்று இருக்கின்றன என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய். 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்குப் பின்னர்தான் வங்கிச் சேவைகள் நாட்டின் மூலைமுடுக்கிற்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட முடிந்தது. இப்போது, கார்ப்பரேட்டுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியக் கடன்களைத் திருப்பிச்செலுத்தாது, அதன்காரணமாக வங்கிகளின் ‘செயல்படா சொத்துக்கள்’ அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு கார்ப்பரேட்டுகள் பெற்ற கடனைத் திருப்பிச்செலுத்தாது, வங்கிகள் திவாலாகிப் போனால், சாமானிய சேமிப்பாளர்களுக்கு வெறும் 5 லட்ச ரூபாய் மட்டுமே திருப்பித்தரப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.   

அரசாங்கத்தின் “ஜன் தன் யோஜனா” உட்பட பல்வேறு நலத் திட்டங்கள், பொதுத்துறை வங்கிகள் மூலமாகவே பிரதானமாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்திடும் வேலையில் ஒன்றிய அரசாங்கம் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகவே நடவடிக்கைகளை எடுத்து வந்தன. அவற்றை வங்கி ஊழியர்கள் இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இப்போது அரசாங்கம் அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. மக்கள் தங்கள் வியர்வையைச் சிந்தி, சிறிது சிறிதாகச் சேர்த்து பொதுத்துறை வங்கிகளில் சேமித்து வைத்துள்ள தொகைகளை அப்படியே தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்த்திட ஒன்றிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இது என்பதை வங்கி ஊழியர் சங்கங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை நடத்துகிறார்கள். இவ்வாறு வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான இந்நடவடிக்கையானது ஓர் ஊழல் நடவடிக்கை என்று மட்டும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதற்கும் மேலானமுறையில், இதுநாள்வரையிலும் மோசடியான முறையில் வங்கிகளிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாது ஏமாற்றிய தனியார் கார்ப்பரேட்டுகளிடமே மேற்படி வங்கிகளையும் தாரை வார்த்திடும் நடவடிக்கையுமாகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய அரசின் நாசகரக் கொள்கை தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இத்தகைய படுபிற்போக்குத்தனமான சட்டமுன்வடிவினைக் கொண்டுவருவதை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று  மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வலியுறுத்துகிறது.

இவ்வாறாக, நாட்டு மக்களைக் காப்பாற்றவும், நாட்டைக் காப்பாற்றவும் வங்கி ஊழியர்கள் நடத்திடும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மற்றும் சுயேச்சையான சம்மேளனங்கள்/சங்கங்கள் தங்கள் ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் முழுமையாகத் தெரிவித்துக்கொள்கிறது. 

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

;