கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 436 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில் இருந்து கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து பிரான்ஸ் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அமெரி்க்கா, வியட்நாம், சிங்கப்பூர், நேபாளம், ஹாங்காங், தைவான் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகின்றது.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 436 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதித்ததில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவக் கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், நேற்று சீனாவில் இருந்து கோவைக்கு திரும்பிய 8 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இவர்களை வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும், மக்கள் கூடும் இடங்களுக்கு, 28 நாட்கள் பொது வெளியில் செல்லாமல் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.