india

img

மாணவர்களுக்குத் தவறாக வழிகாட்டிய பிரதமர் மோடி.... ‘பரிக் ஷா பெ சர்ச்சா’ மூலம் எழுந்த புதிய சர்ச்சை....

புதுதில்லி:
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல காட்டிக்கொள்ள சிலர் முயல்வார்கள். அவர்களில் பிரதமர் மோடியை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். துறைசார்ந்த வல்லுநர்கள் எல்லாம் தேவையில்லை. அவர்களுக்கே இவர்தான் வழிகாட்டுவார்.
பணமதிப்பு நீக்கமாகட்டும். ஜிஎஸ்டி அமலாக்கமாகட்டும். செவ்வாய்க்கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புவதாக இருக்கட்டும், பாலகோட் பயங்கரவாத முகாம்களை விமானப்படை மூலம் தாக்கி அழிப்பதாகட்டும். கலை, அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், ராணுவம் அனைத்திலும் மோடிதான், துறை வல்லுநர்களுக்கே வழிகாட்டுவார். 100 நாளில் கறுப்புப் பணத்தை மீட்பேன் என்றார். ஆளுக்கு 15 லட்சம் தருவேன் என்றார். பயங்கரவாதத்திற்கு காரணமே கறுப்புப் பணம்தான் என்றார். டிஜிட்டல் இந்தியா-வை கொண்டுவரப் போவதாக கூறினார். ரிசர்வ் வங்கி ஆளுநரைக் கூட ஆலோசிக்காமல்தான் இவ்வளவையும் செய்தார். பின்னர் அத்தனையும் அலங்கோலமானது.

அதேபோல, “பாலகோட் தாக்குதலுக்கு நமது படையினர் யோசித்தார்கள்.. விமானத் தாக்குதல் நிகழ்த்த இருந்த நாளில் வானிலை நன்றாக இல்லை. வேறொரு நாளில் தாக்குதல் நடத்துவோம் என வல்லுநர்கள் கூறினார்கள். ஆனால், நான்தான்.. வானில் மேகமூட்டம் இருந்தால் மேகங்களே நம்மை ரேடார் பார்வையிலிருந்து காப்பாற்றும் என ஆலோசனை கூறினேன். திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்றேன்” என மோடி கூறியதைக் கேட்டு பலரும் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.

“விமானங்களை ரேடாரின் பார்வையிலிருந்து மேகங்களால் மறைத்துவிட முடியாது” என்பது மோடிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்கள் அந்த அளவிற்குக் கூட அறிவியல் அறிவு இல்லாமல் இல்லை என்று கூறினார்கள்.
கொரோனாவை 48 நாட்களில் விரட்டிக் காட்டுவேன் என்றார். எப்படி முடியும்? என்று கேட்டபோது, அமாவாசை இரவில் மின்சார விளக்கை அணைத்துவிட்டு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்.. கைகளைத் தட்டியோ, அல்லது மணி அடிப்பது போன்று தட்டுக்களைத் தட்டி ஒலி எழுப்புங்கள்... என்று ஏதோதோ மோடி கூறினார். மோடி இவ்வாறு கூறியதன் பின்னால் மிகப்பெரிய நன்மை ஒளிந்திருக்கிறது என்று சங்-பரிவாரங்கள் பொழிப்புரை எழுதினார்கள். “மோடி கூறிய நாளில், ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திரன் இடம் பெயருகிறது. அப்போது, கை தட்டுவது, மணி அடிப்பது போன்றவற்றைச் செய்வதால் எழும் ஒலியானது, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சுற்றுப்புறத்தில் நேர்மறை அதிர்வை உண்டாக்குகிறது. மணியோசையின் அதிர்வுகள் சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழித்துவிடும்” என்றனர்.

ஆனால், கொரோனா ஏற்கெனவே ஒரு ஆட்டத்தை ஆடி முடித்துவிட்டு, இப்போது இரண்டாவது ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கத் தயாராகி விட்டது.இந்நிலையில்தான், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறேன் என்று புறப்பட்ட பிரதமர் மோடி, ‘பரிக்ஷ பெ சர்ச்சா’ (Pariksha Pe Charcha - 2021) என்ற நிகழ்ச்சி மூலம் ஆலோசனைகளை அள்ளி வீசியுள்ளார்.பிரதமர் மோடி எங்கே படித்தார்? அவரது ஆசிரியர்கள் யார்..?அவரின் வகுப்புத் தோழர்கள் யார்...? பட்டம் வாங்கியது கலைத்துறையிலா, அறிவியல் துறையிலா? என ஏகப்பட்ட கேள்விகளை பலரும் எழுப்பி விட்டார்கள். இப்போதுவரை மோடி அதற்கு பதில் கூறியதாக தெரியவில்லை. என்றாலும், மோடியின் ஆலோசனைகளை வேறுவழியே இல்லாமல் சகித்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ‘பரிக்ஷ பெ சர்ச்சா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பேச்சைக் கேட்டு வருகின்றனர்.அந்த வகையில்தான், இம்முறை ‘பரிக்ஷ பெ சர்ச்சா’ நிகழ்ச்சியில் மோடி கூறிய அறிவுரை, மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கே தூக்கிவாரிப் போட்டுள்ளது.

“மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியதும் முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பின்னர் சுலபமான கேள்விகளுக்கு செல்லலாம்” என்பதுதான் மோடி வழங்கிய தூங்கிவாரிப்போட்ட ஆலோசனை.“தேர்வில் மாணவர்கள் முதலில் நன்றாகத் தெரிந்த- சுலபமான கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, பின்னர் கடினமான கேள்விகளுக்கு செல்லுங்கள்; அப்போதுதான் அனைத்துக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். நேரமும் கிடைக்கும். தெரியாத - கடினமான கேள்விக்குள் புகுந்துவிட்டால், அதிலேயே நேரம்போய் விடும். நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுத நேரம் இருக்காது. மதிப்பெண்களை இழந்து விடுவோம். அதற்கு இடம் தந்து விடாதீர்கள்” என்பதுதான் இவ்வளவு காலமும் ஆசிரியர்கள் காட்டிவந்த வழியாகும்.

ஆனால், பிரதமர் மோடி அதனை அப்படியே தலைகீழாக மாற்றி, மாணவர்களுக்கு தவறான வழிகாட்டியதைக் கண்டு பலரும் கொதித்தெழுந்து விட்டனர். விளைவு, தற்போது பிரதமர் மற்றும் செய்தி தகவல் தொடர்புத் துறை ஆகியவற்றின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து சர்ச்சை பதிவு நீக்கப்பட்டுள்ளது.

;