வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

விமானத்தில் பயணம் செய்த திரிபுரா முதல்வரின் நாய்.... அரசு கஜானாவிலிருந்து ரூ. 60 ஆயிரம் செலவு ...

அகர்தலா:
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ், தனது வளர்ப்பு நாயை, அரசுப் பணத்தில், விமானப் பயணம் செய்ய வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வைச் சேர்ந்தவரும், திரிபுரா மாநில முதல்வருமான பிப்லப் குமார் தேவ், பெரும் பணக்காரர். கடந்த முறை திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிகமான சொத்து இவருக்குத்தான். எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின்னர் முதல்வராகவும் ஆக்கப்பட்டார்.

20 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் சொந்த வீடு கூட இல்லாத- கடைசிவரை எளிமையாக ரிக்ஷாவில் பயணித்து வந்த- மாணிக் சர்க்காரை தோற்கடித்து, அந்த இடத்தில் பிப்லப் குமார் அமர்ந்தார்.ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் முதல்வருக்கான தகுதிகளோடு ஒருநாளும் பிப்லப் குமார் நடந்து கொண்டதில்லை. அழகிப்போட்டி பற்றிய ஆராய்ச்சி, மகாபாரத காலத்திலேயே இண்டெர்நெட் இருந்ததாக கதையளப்பு, சிவில் என்ஜீனியரிங் படித்தவர்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று உளறிக்கொட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமன்றி, இலங்கை, நேபாளத்திலும் பாஜக-வை ஆரம்பிக்கப் போகிறார் என்று அண்மையில் இவர் கொளுத்திப் போட்ட திரி, சர்வதேச அளவில் பிரச்சனையானது.இந்நிலையில்தான், அரசுப் பணத்தை செலவிட்டு, இவர் தனது வளர்ப்பு நாயை தில்லிக்கு விமானத்தில் அனுப்பியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிப்லப் குமார் தேவ், கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தனது மகனின் மோட்டார் சைக்கிளையும், நாயையும் அரசுப் பணத்தில் அகர்தலாவிலிருந்து தில்லிக்கு விமானத்தில் அனுப்பியுள்ளார். இதற்காக, நாயின் விமான பயண செலவுக்காக 54 ஆயிரத்து 918 ரூபாயையும், மோட்டார் சைக்கிளை அனுப்புவதற்கு 4 ஆயிரத்து 644 ரூபாயையும் திரிபுரா அரசு கஜானாவிலிருந்து பிப்லப் எடுத்துள்ளார்.இதன்மூலம் புதிய சர்ச்சையை அவர் ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் பிப்லப் குமார் தேவின் செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

;