இம்பால்:
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜக தலைவர் விடுதலை செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தமக்கு அரசாங்கம் வழங்கியிருந்த வீரதீர விருதை திருப்பியளித்த சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்துள்ளது.
பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூர் மாநிலத்தில், போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையில் உதவிக் கண்காணிப்பாள ராக இருந்தவர் தனோஜம் பிருந்தா. பெண் ஐபிஎஸ் அதிகாரியான இவர், ரூ. 27 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய வழக்கில், பாஜக தலைவர் லுகோசி ஜாவ் உள்ளிட்ட 6 பேரை, கைது செய்தார். அவரின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டுக்கு உள்ளானது. இதற்காகவே, மணிப்பூர் மாநிலஅரசும் தனோஜம் பிருந்தாவுக்கு 2016-ஆம் ஆண்டில் துணிச்சலுக்கான வீரதீர விருதை வழங்கி கௌரவித்தது.ஆனால், பாஜக முன்னாள் தலைவர் லுகோசி ஜாவ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை நீதிமன்றம் தற்போது விடுதலை செய்திருப்பது, தனோஜம் பிருந்தாவை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதையடுத்து முதல்வர் பிரேன் சிங்குக்கு தனோஜம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நான் கடமையை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன்; எனவே எனக்கு வழங்கப்பட்ட வீரதீரச் செயல்புரிந்தோருக்கான பதக்கத்தை திருப்பி தருகிறேன் என்று தனோஜம் தெரிவித்துள்ளார்.