திருவனந்தபுரம்:
ஆர்யா ராஜேந்திரன் (21) என்கிற மாணவியை திருவனந்தபுரம் மேயராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே இளம் வயது மேயர் என்கிற பெருமையை ஆர்யா பெற உள்ளார்.
ஆர்யா, ஆல் சயண்ட்ஸ் கல்லூரியின் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவியாவார். இவர் இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுஉறுப்பினராக உள்ளார். பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேசவதேவ் சாலை கிளையில் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சி முடவன் முகள் வார்டு உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீஷியன். அம்மா ஸ்ரீலதா எல்ஐசி முகவர். இதற்குமுன்பு வி.கே.பிரசாந்த் திருவனந்த புரம் மேயராக பதவியேற்றபோது பெற்ற இளைஞர்களின் ஆதரவு ஆர்யாவுக்கும் கிடைக்கும் என கருதப்படுகிறது.
அமைப்பு ரீதியாக மாணவர் சங்கத்திலும், பாலர் சங்கத்திலும் தான் பெற்றுள்ள அனுபவம் மாநகராட்சியை நிர்வகிப்பதற்கு உதவும் என்று ஆர்யா கூறினார். மேயர் பொறுப்புடன் இரண்டாம் ஆண்டு கல்லூரிப்படிப்பையும் தொடர இருப்பதாகவும், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அது ஊக்கமளிக்கும் எனவும் ஆர்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.