headlines

img

மோடி நினைத்தது நடக்கவில்லை!

அமெரிக்காவில் ஹூவுஸ்ட னில் 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் கூடி யிருந்த கூட்டத்தில் நரேந்திரமோடி நடந்தகொண்டவிதம், இந்திய - அமெ ரிக்க உறவுகளில் இந்தியா எந்த அள விற்கு அமெரிக்காவின் அடிவருடி யாக மாறியிருக்கிறது என்பதைத் தெளி வாகக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருந்ததை மீண்டும் ஒரு முறைக் காணமுடிந்தது. அரங்க மேடை யில் மோடியும் டிரம்பும் கூட்டாகக் காட்சியளித்த விதம், அமெரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும்  தேர்த லில் இந்திய அமெரிக்க வாக்காளர்க ளைக் கவர்வதற்கான ஒரு முயற்சியே தவிர வேறெதுவும் கிடையாது. முதலாவதாக, இந்தியப் பிரதமர் மோடி, “இந்தத் தடவை டிரம்ப் சர்க்கார்” (‘Abki baar Trump Sarkar’) என்கிற கோ ஷத்தை திரும்பத் திரும்பக் கூறியதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாக டிரம்ப்தான் வரவேண்டும் என்பதை மோடி ஏற்றுக்கொண்டுவிட்டதைக் காட்டுகிறது. ஆனால் இதே கோஷம் சென்ற தேர்தலின்போது டிரம்ப் பயன் படுத்தியதுதான்.

நரேந்திர மோடியைக் குஷிப் படுத்தும் விதத்தில் டிரம்ப்பும், அவரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார். இதற்கு முக்கியக் காரணம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூவுஸ்டன் பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடமாகும். ஆனால் இப்போது இங்கே ஜனநாயக கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே, எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்குத் தங்கள் கட்சிக்கு வாக்குகளைத்திரட்டிட வேண்டும் என்பதில் டிரம்ப் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். மோடியும் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற அவரது ஆலோச கர்களும் டிரம்ப்பைக் குஷிப்படுத்து வதன் மூலம், காஷ்மீர் பிரச்சனையில் தங்களுக்கு எதிராக எதுவும் கூறாது டிரம்பின் வாயை அடைத்துவிடலாம் என்றும், இம்ரான்கானின் கெஞ்சுதல்க ளுக்கு இரையாகாமல் செய்துவிட லாம் என்றும் நம்பினார்கள். கூடுதலாக டிரம்ப்புடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை யும் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் நம்பினார்கள். 

அமெரிக்காவின் எதிர்பார்ப்பு...

எனினும், டிரம்ப்பின் பக்கம் சாய்வ தும், டிரம்ப்பை முகஸ்துதி செய்வதும் அபாயகரமான ஒன்றாகும்.  டெல்லுரி யான் என்னும் அமெரிக்க இயற்கை வாயு நிறுவனத்துடன், இந்திய நிறு வனமான  பெட்ரோநெட் சுமார் 2.5 பில்லியன் (250 கோடி) டாலர் முத லீட்டுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தாகி இருக்கிறது. எனினும் இது தொடர்பான வர்த்தகப் பேரம் மிகவும் சுமுகமானதாக இருந்திட வேண்டும் என்று இந்தியா விரும்பியபோதிலும், இதுதொடர்பாக எவ்விதமான வர்த்தக ஒப்பந்தமும் நியூயார்க்கில் மோடியும் டிரம்ப்பும் சந்தித்துக்கொண்டு, அதி காரப்பூர்வமாக பேச்சுவார்த்தை களை நடத்தியபோது அறிவிக்கப்பட வில்லை. 

இவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனி ருந்த போதிலும்கூட, பல்வேறு அம்சங் களில் அமெரிக்கா தன் நிலைப்பாடு களைத் தளர்த்திக் கொள்ளவில்லை. இதன்காரணமாக இந்தியா, பல்வேறு வடிவங்களில் அமெரிக்கா கூடுதலாகக் கோரும் வரிகளைக் கட்டியாக வேண்டும். வர்த்தகப் பேரங்களில் அமெரிக்கா அதிகமான அளவிற்கு நம்மிடமிருந்து சலுகைகளை எதிர் பார்க்கிறது, மேலும் மிகப்பெரிய அள வில் இந்தியச் சந்தையைத் தங்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரி யிருக்கிறது. இவை அனைத்துக் கும் எவ்வித ஆட்சேபணையுமின்றி இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கம், ஆசியாவில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவ டிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துப் போகக்கூடிய விதத்தில், தன் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடு களின் அமைப்பு சார்பாக நடைபெற்ற இணைச் செயலாளர்கள் மட்டத்தி லான கூட்டத்தின்போது, இந்நாடுக ளின் மேம்படுத்தப்பட்ட அயல்துறைச் செயலாளர்கள் அளவிலான கூட்டத் தில் பங்கேற்கவும் இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.   இப்படியெல்லாம் அமெரிக்காவுக்கு அடிபணிந்து  செல்வதன்மூலமாக அமெரிக்கா, பாகிஸ்தானுடன் வைத்திருக்கும் உறவுகளிலிருந்து அதனை வெட்டி விடலாம் என்ற இந்தியாவின் நினைப்பு, பொய்த்துப் போய்விட்டது. ஏனெனில், ஜனாதிபதி டிரம்ப்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து, மீண்டும் ஒருமுறை காஷ்மீர் பிரச்ச னையில் இரு நாட்டின் தலைவர்களும் விரும்பினால் சமரசம் செய்து வைக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.  ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற டிரம்ப்பின் குறிக் கோள் நிறைவேறும்வரை, பாகிஸ் தான் அமெரிக்காவிற்கு ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இருப்பது தொடரும்.

நரேந்திர மோடி, ஹூவுஸ்டனில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப்பிற்கு மிகவும் ஆடம்பரமான முறையில் ஆதர வினைத் தெரிவித்ததற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. இஸ்ரேலைச் சேர்ந்த பெஞ்சமின் நேதன்யாகு போன்று, நரேந்திர மோடியும் டொனால்டு டிரம்ப்பின் ஒரு சித்தாந்த ரீதியான ஆத்மார்த்த நண்பர்தான். இவர்கள் அனைவருமே  வலதுசாரி, தேசிய இனவெறிப் பண்பினைப் பெற்றி ருப்பவர்கள்தான். ஓர் அடிமை, தன் ஆண்டைக்குக் காட்டும் விசுவாசத்தைப் போல மோடி, டிரம்பிற்குக் காட்டியி ருப்பதிலிருந்து, நரேந்திர மோடி தன்னுடைய சொந்த படுபிற்போக்குத் தனமான உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

செப்டம்பர் 25, 2019 
தமிழில்: ச.வீரமணி

 

;