ஊடகங்களின் யுத்த வெறியில் பலியாகும் உண்மைகள்
தீவிரவாதத்திற்கு எதிராக நாடு ஒன்றுபட்டு நிற்கும் வேளையில், ஊடகங்களின் ஒரு பகுதி, அரசாங்கத்திடமிருந்தோ அல்லது ஆயுதப்படை களிடமிருந்தோ உறுதிப் படுத்தப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை செய்தி என்ற பெயரில் ஒளிபரப்பி வருகின்றன. இத்தகைய செய்திகள் பொறுப்பான ஊடகங்களின் மதிப்பை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ,தேசிய ஒற்றுமைக்கு நேரடியாக அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன. ஒரு தேசிய துயரத்தை வகுப்பு வாதமாக மாற்றி வருகின்றன. மேலும் போர் வெறியை ஊக்குவிக்கின்றன.
தனியார் தொலைக்காட்சிகள் மட்டுமல்ல அர சுத்துறை தொலைக் காட்சியான தூர்தர்ஷன் (டிடி நியூஸ்) ஆங்கில செய்தி அலைவரிசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஒரு ‘துரோகி’ என்று சித்தரித்துள்ளது. துல்லியமான மற்றும் கண்ணியமான செய்திகளை வழங்கும் கடமையில் இருந்து டிடி நியூஸ் தவறிவிட்டதையே இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குத லுக்கு பிறகு பல தனியார் செய்தி அலைவரிசைகள் வெளியிடும் தகவல்களை கண்டு பாதுகாப்பு துறையினரே அதிர்ச்சியடைந்துள்ளனர். கராச்சி துறைமுகத்தின் மீது அரபிக்கடலில் இருந்து ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் துறை முகம் சின்னாபின்னமாகிவிட்டதாகவும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல வங்காள தொலைக்காட்சியான ஏபிபி ஆனந்தா ஒரு வீடியோவை ஒளிபரப்பியது. இதை இந்திய கடற்படை வெளியிடவில்லை. கடைசியில் அந்த காணொலி போலியானது என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியபோது எடுக்கப் பட்ட வீடியோ தான் அது. இதற்காக அந்த தொலைக்காட்சி சிறிய வருத்தம்கூட தெரிவிக்க வில்லை.
இப்படி ஒரு பக்கம் போலியான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்பும் ஊடங்களின் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு போருக்கு எதிராக பேசியதற்காக தி வயர் ஆங்கில இணைய இதழை முடக்கியுள்ளது. பொறுப்பான பத்திரிகை கள் மீது மோடி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வகுப்புவாத வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை ஊக்குவிக்கும் ஊடக நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பத்திரிகை நேர்மையை நிலைநிறுத்தும் தி வயர் போன்ற ஊடகங்கள் மீதான தடையை உடனே விலக்கிக்கொள்ளவேண்டும்.
போரின் முதல் பலி உண்மைதான். அதனால் தான் போர் தொடங்குவதற்கு முன்பே இந்தியா வில் பல தனியார் தொலைக்காட்சிகள் போர் போர் என கூப்பாடு போட்டன. போர் தொடங்கி யவுடன் அவை உண்மைகளை புதைத்து வரு கின்றன. இக்கட்டான நேரத்தில் தேசத்திற்கு அமைதியும் தெளிவும்தான் தேவை. பொய்யான தகவல்கள் அல்ல.