வண்ணக்கதிரில் நலம் பகுதியில் 22.09.2019 அன்று வெளியான “B.P மாத்திரைகள் ஓர் எச்சரிக்கை” என்ற கட்டுரைக்கு ஆங்கில மருத்துவர் என்ற முறையில் என எதிர்ப்பைப் பதிவு செய்வது எனது கடமையெனக் கருதுகிறேன். மரு.S.வெங்கடாசலம் தம் கட்டுரையில் ரத்த அழுத்தம் ஒரு மோசமான நோய், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நோய், சாகும்வரை ஒரு மனிதன் B.P மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆங்கில மருத்துவம் கூறுவதாகக் கூறியுள்ளார். திடீரென ஞானிகள் பற்றி வியாக்கியானம் செய்துள்ளார். மாற்றம் குறித்துக் காரல் மார்க்ஸ் விளம்பியதையும் எடுத்துக் காட்டியுள்ளார். B.P பற்றிக் கூறும்போது ஆங்கில மருத்துவம் Scientific Diagnosis பற்றி மட்டும் கூறுவதாகவும் Practical Diagnosis எனும் செயல் வடிவ அணுகுமுறை இல்லையெனவும் கூறியுள்ளார். ரத்த அழுத்த நோய் உலகம் முழுவதுமுள்ள மனித இனத்தைப் பாதிக்கும் ஒரு நோயாகும். ரத்த அழுத்த நோயினால் வரும் பாதிப்புகள்பற்றி கட்டுரையாளர் அதிகமாக அறிய வாய்ப்புக்கள் இல்லை.
பாதிப்புகள்:
மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கம் மற்றும் ரத்தக்குழாய் வெடிப்பினால் ஏற்படும் Cerebro vascular accident என்னும் பக்கவாத நோய்ப் பாதிப்புள்ளோர் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் இருந்ததையும் ஆங்கில மருத்துவ உதவியால் மேற்கண்ட பாதிப்பு குறைந்ததையும் கட்டுரையாளர் அறிவாரா?. கடந்த 2010 முதல் தமிழக அரசின் CVD programme (Cardio Vascular Disease) என்ற திட்டத்தினால் தமிழகத்தில் மேற்சொன்ன நோய்கள் குறைந்து உள்ளதையும் அவர் அறிவாரா?. இதயத்தைப் பாதிப்பதால் Coronary Arterial Disease (CAD) எனும் மாரடைப்பு ஏற்படுவதையும் அதனால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதையும் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க B.P மாத்திரை உட்கொண்டால் குறையும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ரத்த அழுத்தம் அதிகமாவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு Kidney Failure எனும் சிறுநீரகச் செயலிழப்பினால் டயாலிசிஸ் செய்யும் அளவிற்கு நிலைமை இருப்பதையும் அறிவோம். கட்டுரையாளர் B.P மாத்திரைகளால் B.Pயைக் கட்டுப்படுத்த முடியாதெனவும் இருதயத்தை இறுதி யாத்திரைக்கு அழைத்துச் செல்லுமெனவும் உண்மைக்கு மாறான செய்தியைக் கூறுகிறார். ஆங்கில மருத்துவம் அனுபவ முறையிலிருந்து வேறுபட்டு அத்தாட்சி (Evidence based medicine) மருத்துவ முறையென்பதை அவர் அறிவார். ஹோமியோ சிகிச்சை மூலம் நோய்களைக் குணப்படுத்த முடியுமென்றால் அவரவர் தாங்கள் பயிற்சி பெற்ற முறையில் செயல்படட்டும். ஆனால் மற்ற மருத்துவ முறைகள் - குறிப்பாக ஆங்கில மருத்துவம் - தவறு எனக் கருத்துக் கூறுவதை ஏறு;றுக்கொள்ள முடியாது. மக்கள் நல வாழ்வுக்கு எந்த முறை சிகிச்சை ஏற்றது என்பதைத் தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்காக ஒரு மருத்துவ முறையைக் குறை கூறி உண்மை விஷயங்களை மறைக்க முயல்வது நன்றன்று. விஞ்ஞான சோஷலிசம் பேசும் நமது நண்பர்கள் ஆங்கில மருத்துவத்தின் பக்க விளைவுகளைச் சொல்லலாம். அதற்காக ஆங்கில மருத்துவமே சரியன்று எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக் காலத்தில் ஆங்கில மருத்துவம் பணம் ஈட்டும் வணிகமாக மாறியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக ஆங்கில மருத்துவ முறையே தவறானது என்பது ஏற்புடையதா?