headlines

img

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்

இன்னும் எத்தனை  காலம்தான் ஏமாற்றுவார் ?

இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந் தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும் என்று ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திங்களன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

பாஜகவும் அதன் பரிவார அமைப்புகளும் சிறுபான்மையினர்க்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருப்பது நாடறிந்தது, ஏடறிந்தது. ஆனால் எதுவுமே நடக்காதது போல அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுவது பாஜகவினர்க்கே கைவந்த கலை.

சிறுபான்மையினர் விவகாரங்களின் அமைச்சராக இருக்கும் அமைச்சர் ரிஜிஜூ, அந்த துறை தொடர்பாகவாவது பொறுப்பாகப் பேசியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஏற்கனவே சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் திட்டத்தை நிறுத்திவிட்டது பாஜக ஆட்சி. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியை குறைகூறியிருக்கிறார் அமைச்சர். 

காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இஸ்லாமியர் அமைச்சகம் போல் மாற்றப்பட்டது; அதை நாங்கள் மாற்ற முயற்சித்து வருகிறோம் என்று  தங்களது செயலை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று ராகுல்காந்தி பொய்ப்பிரச்சாரம் செய்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டு நடப்பை பார்ப்ப வர்கள், கேட்பவர்கள் எவரும் அதனை பொய் எனக் கூறமாட்டார்கள். பாஜக ஆட்சியாளர்கள் மிகவும் விரும்பும் நாடான அமெரிக்காவே இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று அறிக்கை வெளியிடுவதும் அதற்கு ஒன்றிய அரசு உள்நாட்டு விசயங்களில் தேவையின்றி  தலையிட வேண்டாம் என்று எரிச்சல் படுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் ரிஜிஜூ அதை பொய் எனச் சாதிக்கிறார்.

இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும் என்று ரிஜிஜூ கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும். முதலில் பாஜக எத்தனை  முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது என்று சொல்ல வேண்டுமே. கடந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவில் மட்டும் ஒருவரை நிறுத்தியது. வேறு எங்கும் நிறுத்தவில்லை. ஆனால் கூசாமல் பொய் பேசுகிறார் அமைச்சர்.

தற்போதைய மக்களவையில் பாஜக சார்பில் மட்டுமல்ல, அதன் கூட்டணியில் கூட ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இல்லை. இந்த நிலையில் இவர், அமைச்சராக்கியிருப்போம் என்று  கூறுவது யாரை ஏமாற்ற? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.