நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்களன்று துவங்கியுள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளி கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்தும் மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை குறித்தும் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தியுள்ளன.
ஆளுங்கட்சி தரப்பில் விவாதத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்ததால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒத்தி வைக் கப்பட்டுள்ளன. அதானி மீது ஹிண்டன்பர்க் நிறு வனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த முறை விவாதம் நடத்தக்கூட மோடி அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு முற்றாக நிராகரித்தது.
அமலாக்கத்துறை விசாரணை கூட நடை பெறவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை விட அதானியின் ஊழல் சாம்ராஜ்யத்தை பாது காப்பதிலேயே மோடி அரசு முனைப்புக் காட்டி யது. அதேபோல கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மணிப்பூர் வன்முறை குறித்தும் நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்த மோடி அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சூரியஒளி மின் திட்டங்க ளுக்காக அதானி செய்த தில்லுமுல்லு குறித்து அமெரிக்க நீதிமன்றத்திலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள் ளது. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள் ளது. இப்போது கூட இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மோடி அரசு தயாராக இல்லை என்பது வெட்கக்கேடானது.
மாறாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற பட்டி யலிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு முனைந்தது. கடும் எதிர்ப்பு எழுந்ததால் நாடாளு மன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் அக்குழுவின் தலைவர் ஜெகதாம்பி கா பால், தன்னுடைய அராஜகப் போக்கால் குழுவின் நோக்கத்தையே சிதைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவசர அவசரமாக நடப்பு கூட்டத் தொடரி லேயே இம்மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு முனைந்துள்ளது கெடு நோக்கமே அன்றி வேறல்ல.
அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை போன்ற வற்றை திசை திருப்பவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை தவிர்க்கவும் இந்த வியூகத்தை மோடி அரசு வகுத்துள்ளது போலும். எதிர்க்கட்சி கள் இதை முறியடிப்பது அவசியம்.