செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

மதம் தலைதூக்கினால் நாடே அழிவுறும்

கவிதை என்பது மனிதனின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள, கலந்துள்ள உணர்வு ஆகும். கவிதை எழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்கள் அல்ல.எவன் ஒருவன் தன் வாழ்க்கைக்காக கவிதை எழுதுகிறானோ அவனே கவிஞன் என்கிறார் பாரதியார். படைப்புலகில் கவிதைஉலகம் என்பது மிகப்பெரியது. இக்கவிதை உலகில் நிலைத்து நிற்பது என்பது மிக அரிதான ஒன்றாகும். இந்த அரிதான சிம்மாசனத்தில் எந்த பயமும் இன்றி “இன்னும் இன்னும் மேலே மேலே” என்று அமர்ந்திருக்கிறார் கவிஞர் மல்லை.மு.இராமநாதன். 

முதல் வணக்கம் எனும் தலைப்பில், 

மதுரைச் சங்கத்தின் மடியில் தவழ்ந்தவளே! /மரபுக் கவிதையெனும் மஞ்சளில் குளித்தவளே! / ஓலைக் கட்டிலிலே உருவம் பொதித்தவளே! / காகிதத் தொட்டிலிலே கண் சிமிட்டிச் சிரிப்பவளே! /கால்டுவெல் போப்பினால் காதலிக்கப்பட்டவளே! / எதுகை மோனையெனும் இலக்கண வீதியில் / இலக்கியத் தேரேறி வலம் வரும் செந்தமிழே! / பதுமை பாவையென புதுமையாய் இருப்பவளே!


பாவலன் என் முதல் வணக்கம் உன்னடிக்கே! இக்கவிதை வரிகளில் தமிழ்மொழியின் தோற்றம் வளர்ச்சியினை மிக அற்புதமாக கவிநயமாக செதுக்கியுள்ளார். வாழ்வினையும் பாடிவிட்டு/ ஊழ்வினை

யும் பாடிவிட்ட பகலவன் போல நின்ற கலையே! என தமிழுக்கான அடையாளத்தை வலிமையாக்கியுள்ளார்.

நாங்கள்

மாசறு புலவர்களின் 

மன வயலில்

கற்பனைக் காற்றையுண்டு

சொற்கள் நீர் கொண்டு

உற்பத்தியாகும் நெற்கள்

கவிப் பசிக்கு உணவாவோம் என்னும் கவிதையில் மன வயல் எனும் சொல்லாடல் கவிஞரின் கற்பனைத்திறனை உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.


புலி தன்னை முறத்தாலே / துரத்தியவள் மரபே! – போரில் / கிலி தன்னைக் கொள்ளாது

கிளர்ச்சியைப் பார் உறவே! எனும் கவிதையில் வீரம் தமிழர்களோடு எப்படி ஒன்றி இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மஞ்சள் வண்ண

மங்கை நிலவு

குவித்துப்போட்டுக்

குளிக்கின்றாளோ?

மெல்லக் குளித்து  

   மேக ஆடையால்


தலைதுவட்டிக்கொண்டு மீண்டும்

தலைகாட்டுகின்றாளோ வானில்?

போன்ற வரிகளின் மூலம் அடுத்த எதிர்பார்ப்புக்கு உள்ளே இழுத்துச் செல்கிறார்.


சமூகச் சிந்தனைக்கு… 

மனிதன்

மதவாதியாகட்டும்

மதியூகியாவதற்கு

ஆனால்…

மதயானையானால்


மாண்டுவீழ்வது காடல்ல, நாடு! என்னும் கவிதையில் மதம் தலைதூக்கினால் நாடே அழிவுறும் என்று குறிப்பிட்டிருப்பது தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்றதாகும். இந்நூலில் உள்ள சில கவிதைகள் பெரும்பாலும் இக்காலத்திற்கு தகுந்தவை என்றால் அது மிகையாகாது. இக்கவிதை நூல் பல வாசகர்களின் கைகளில் தவழும் என்பது திண்ணம். எனது மன எண்ணத்தின் குரலாக ஒலிக்கிறது.


இன்னும் இன்னும் மேலே மேலே

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: மல்லை.மு.இராமநாதன்

வெளியீடு: மல்லை பதிப்பகம், 

 79 - யு1, இடைப்பாடி சாலை, 

சின்னப்பன் நாயக்கன் பாளையம்,

 குமாரபாளையும்; அஞ்சல், 

நாமக்கல் மாவட்டம் - 638183.

பக்:127, விலை:ரூ.90/-

தொடர்புக்கு:9150052927;