headlines

img

சர்வம் குழப்பமயம்

நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும்  இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற வேண்டியுள்ளது. இந்த தேர்தல் அளவுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான விமர்ச னங்களை சந்தித்ததில்லை.

தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து வாக்கு சதவீதத்தை அறிவிப்பது வரை சர்வம் குழப்பமயமாக உள்ளது. கடந்த காலங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடனே பூர்வாங்கமாக வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். அன்று இரவே இறுதி செய்யப்பட்ட வாக்குப்பதிவு சத வீதம் எவ்வித குழப்பமுமின்றி அறிவிக்கப்படும்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி இதை உறுதி செய்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்த ஐந்து நிமிடத்திலேயே வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்து விட முடியும் என்கிறார் அவர். ஆனால் இம்முறை வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் ஏராளமான குளறுபடியும், தாமதமும் நிகழ்ந்தது. இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து விவரங்க ளையும் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் நடத்தும் அலுவலர் 17சி படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. இதைத்தான் தேர்தல் ஆணை யம் இணையத்தில் பதிவிடும். ஆனால் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதுமட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பரப்புரை மேற்கொள்வது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் குறைந்தபட்ச எச்சரிக்கை கூட விடவில்லை. இந்தப் பேச்சுக்களை தடுத்துநிறுத்தவும் முனையவில்லை.

தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மையை அழித்து மோடி அரசு தங்களது கைப் பாவைகளை ஆணையர்களாக மாற்றும் வகையில் விதிகளை திருத்தியது. ஆணைய நியமனம் தொடர்பான ஆலோசனையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கி வைத்தது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலை வருக்கு கடைசி நேரத் தகவல் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை யும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மோடி அரசு கொண்டு வந்ததன் விளைவே இப்போது நடைபெறும் குளறுபடிகளுக்கு காரணம். எனவே தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மையை மீட்டெடுப்பதற்காகவும் ஆட்சி மாற்றம் அவசியமாகிறது. 

;