headlines

img

செல்லக்கிளிகளும், தங்கக்கூண்டுகளும்! - ஜிஜி

நாட்டு நடப்பு

அட்சயாவுக்கு போரடித்தது. டிவியை ஆன் செய்தாள். ‘புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே... தங்கச்சி கண்ணே... சில புத்திமதிகள் சொல்லறன் கேளு முன்னே...’ பழைய பாடல் போய்க்கொண்டிருந்தது. சேனலை மாற்றினாள். ‘நல்ல வண்டி, பாரடி புள்ளே, உக்கி போட்டு ஏறடி புள்ளே... கட்ட வண்டி கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி...’ பாடல் ஓட, அடுத்த சேனலை மாற்றினாள். “நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி, நாட்டில் விவாகரத்து வழக்குகள் பெருகிவிட்டதாகவும். சின்னச் சின்ன தகராறுகளுக்கெல்லாம் விவாகரத்து கேட்டு வருவது அதிகரித்திருப்பதாகவும்.  இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தன் துணையை திருத்தும் மனோபாவம் இல்லை என்பதையே பெருகி வரும் வழக்குகள் காட்டுவதாகவும், சில செல்வப் பெற்றோர்கள் தங்கள் செல்லக் குழந்தைகளின் குடும்ப வாழ்க்கையில் தலையிட்டு அவர்கள் வாழ்க்கை சீரழியக் காரணமாக இருப்பதாகவும். இந்த நிலைமை மாற வேண்டும்” என்று கூறினார். என அறிவிப்பாளர் கூற, அடுத்த சேனலுக்கு தாவினாள். ‘வாழ்க்கை என்றாள் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...’ பி.பி.சீனிவாஸ் குரலில் ஜெமினி கணேசன் பாடிக்கொண்டிருந்தார்.

வாசலில் அப்பா செருப்பை கழற்றும் சத்தம் கேட்க அட்சயா டிவியை நிறுத்திவிட்டு அப்பா வருவதைப் பார்த்தாள்,  “அட்சயாம்மா என்ன பண்ணிக்கிட்டிருக்கே? எங்கே ஷர்மி?’’ என்றவாறு அவளருகில் வந்து கையில் வைத்திருந்த பையை நீட்டினார். ஷர்மி அறையின் மூலையிலிருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளை அழைத்தவாறு    பக்கத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் “வக்கீல் கிட்டே பேசிட்டேன்மா. ரெண்டு நாள்ல நோட்டீஸ் ரெடிபண்ணிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு.’’ என்றார்.
“அப்பா நோட்டீசெல்லாம் இப்ப எதுக்கு?’’ கேட்டாள் அட்சயா.

“நீ சும்மா இரும்மா. அவன் வாயைத் திறந்தாலே பொய். கல்யாணத்துக்கு முன்னாடி, எந்த கெட்டபழக்கமும் இல்லேன்னுதானே சொன்னான். இப்பபாரு குடிச்சுட்டு வந்து அடிக்கறான்கறே. இந்த சொகுசு பங்களாவுல வீட்டோட மாப்பிள்ளையா இருங்கன்னு சொன்னதுக்கு ஊருல தன்னை கேவலமா பேசுவாங்கன்னு சொல்லி சண்டை போட்டுத்தானே உன்னை கூட்டிட்டு போனான். இன்னிக்கு குடிச்சுட்டு வந்து அடிக்கறவன் நாளைக்கு உன்னை கொன்னாலும் கொன்னு போட்டுடுவான். இனிமே நீ அங்கே போகாதே அட்சயா. அங்கே உனக்கு பாதுகாப்பு இல்லை. வேணுமின்னா அவன் இங்க வந்து உன்னோட குடும்பம் நடத்தட்டும்.’’ என்றவர் எழுந்து குளியலறைக்குள் போனார்.

ஷர்மியின் கையிலிருந்த போனில் ரிங்டோன் கேட்டது, ‘வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா? விளையாட ஜோடி தேவை...’ “அம்மா, டாடிகிட்டேயிருந்து போன்.’’  என்று போனை அட்சயாவிடம் நீட்ட அட்சயா ரிங்டோனை கட் செய்துவிட்டு பாத்ரூம் கதவுகளைப் பார்த்தாள்.

இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையறையில் தூக்கமின்றி சாய்ந்து கொண்டிருக்க  ஜன்னலுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தாள் அட்சயா. ஜன்னலுக்கு பக்கத்தில் அவளுடைய வீட்டு காம்பவுண்டு சுவரோரம் இருந்த கல்நார் வீட்டின் வாசலில் ஒரு ஆணும் பெண்ணும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

“ஏன்டி, சுளையா 300 ரூவா வாங்கிக்கிட்டு ரசம் சோறும், அப்பளமுமா வக்கிறே. வேலைக்கு போயிட்டு வர்ற ஆம்பளைக்கு இது ஆங்குமாடி?’’ என்று ஒரு உதைவிட அவள் கொஞ்சம் தள்ளிப்போய் கீழே விழுந்தாள். விழுந்தவள், “யோவ் இன்னாயா நென்சிக்கினு கீறே? ஸ்கூல்ல உன் பையனை டூர் கூட்டிகினு போறேன்னு 300 ரூவா கேக்கறாங்கன்னு ஒரு வாரமா நான் சொல்லிக்கினு கீறேன், அதை நீ தராட்டி நான் என்ன பண்றது? நேத்திக்கு நீ குடுத்த துட்டை அவன்கிட்டே கொடுத்து அனுப்பினேன். ஏதோ இந்த ரசம் சோறாச்சும் கிடைச்சுதேன்னு சந்தோஷப்படு.’’

“ஏய், இன்னாடி பேசறே? தெனிக்கும் 300 ரூவா கொடுக்கறேன். அதுல பத்துரூபா கூட மிச்சம் பிடிச்சி வெக்க மாட்டியா. யாருகிட்டே டூப் உட்றே.’’ என்று இன்னொரு உதை விட அதை அவள் சமாளித்துக் கொண்டாள். “டேய் ஏகாம்பரம் இங்கே வா’’ என்று தன் பையனை அழைத்து, “இந்தா நாட்டார் கடையில போயி பத்து முட்டை வாங்கியா’’ என்று நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான். பையன் காசை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் “ஏய்... இதப்பார்டி எனக்கு ஒரு ஆம்லேட், ஆப் பாயில், ஒரு பல்டி, ஒரு பொடிமாஸ் எல்லாம் இந்த பைஸ்டார் ஓட்டல்ல வக்கிற மாதிரி வக்கிணும். ரசம் சோறா போடறே ரசம்?’’ என்றவாறு பக்கத்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை ஆன் செய்தான்.

‘யாருக்காக இது யாருக்காக...?’ என்ற சிவாஜியின் பாடல் ஓடியது டிவியில்,  அதைப்பார்த்து அவன் பாட ஆரம்பித்தான் “யாருக்காக இந்த ரசம் யாருக்காக? இந்த ரசம் அக்மார்க் விஷம். வாயில் ஊத்தினா சாவு நிஜம்.’’ “எழுதுங்கள் என் கல்லறையில் ரசம் வைத்துக்கொடுத்த இவள் இரக்கமில்லாதவள் என்று. பாடுங்கள் என் கல்லறையில் அதைக்குடித்த நான் பைத்தியக்காரன் என்று ஹஹ்ஹா,,,’’ என்று பாடினான்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அட்சயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது, அவன் புருஷன் என்ன உதை உதைக்கிறான் திட்டறான். அதையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதும் பேசாமல் சமைக்கிறாளே. அட்சயா தன் புருஷனுக்கு போன் போட்டாள், “கூப்பிட்டிருந்தீங்களே என்னவாம்?’’ என்றாள்  “அட்சயா. சத்தியமா சொல்றேன். என் வாழ்க்கையிலயே முதன்முறையா நான் அன்னிக்குத்தான் குடிச்சேன். ஆபீஸ் பார்ட்டில எவனோ எனக்கு கூல்டிரிங்ஸ்ல சரக்கை ஊத்திக் கொடுத்துட்டான். ஆனா நான் உன்னை ஏமாத்திட்டதா சொன்னியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல. அதுனாலதான் உன்னை கன்னத்துல அறைஞ்சுட்டேன். இருந்தாலும் அது தப்புதான் சாரி. உனக்கு நான் சொல்றது உண்மைதான்னு நம்பிக்கை இருந்தா வீட்டுக்கு கிளம்பி வா.’’ என்றான். “உன் மேல எனக்கு நம்பிக்கையில்லை.’’  என்று போனை கட்செய்தாள் அட்சயா.

பலவித சிந்தனைகளில் உழன்றவள் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.  அடுத்த நாள் காலை ஜன்னலிருந்து வந்த சத்தம் அவளை எழுப்பியது. இப்போது ஜன்னலில் எட்டிப்பார்த்தவளுக்கு நேற்றிரவு கண்ட ஆச்சர்யத்தைவிட அதிகப்படியான ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது.

நேற்றிரவு குடிகாரக் கணவனிடம் அடிவாங்கிய மனைவி கையில் துடைப்பக்கட்டையை வைத்துக்கொண்டு கொஞ்சம் பெருக்குவதும் நிறைய பேசுவதுமாக இருந்தாள். “நீ குடிச்சுட்டு வந்துட்டா என்ன பெரிய ஜமீன்தாருன்னு நெனப்பா. இனிமே நீ குடிச்சுட்டு வந்து கண்டபடி பேசினேன்னு வச்சுக்கோ துடைப்பக்கட்டை பிஞ்சுக்கும்.  அந்த மூத்திரத்தைக் குடிச்சாத்தான் உங்களுக்கெல்லாம் பொண்டாட்டிங்களை கைநீட்டி அடிக்கவும் உதைக்கவும் தைரியம் வருமா? இதோ இப்ப நான் நிக்கறேன். நேத்து ராத்திரி பேசன மாதிரி பேசி உதை பாப்போம். உனக்கு இதுதான் கடைசி மருவாதி. ஒன்னு குடிச்சுட்டு வரக்கூடாது. குடிச்சுட்டு வந்தா கம்முன்னு சாப்பிட்டு படுத்துடணும். உனுக்குதான் கைநீட்ட தெரியுமா? நான் கைநீட்டினா நீ என்ன ஆவே தெரியுமா?   அப்புறம் பொண்டாட்டி கையில அடிபட்டு செத்துட்டேன்னு எனுக்கு பேர் வேணாம்.’’ என்றாள். அவள் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் முட்டிக்கால் போட்டுக்கொண்டு முட்டியின் முனையில் தலை கவிழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தான் அவள் கணவன்.

அந்தநாள் இரவு வர அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கிற ஆர்வம் அட்சயாவுக்கு வந்தது. மீண்டும் குடித்துவிட்டுத்தான் வந்திருந்தான் அவன். மனைவியிடம் சண்டைபோட்டான், சாப்பிட்டான், படுத்துவிட்டான். அடுத்த நாள் காலையில் அவள் திரும்பவும் துடைப்பக்கட்டையை எடுத்துக்கொண்டு அவனை ரவுண்டு கட்டினாள். மதிய வேளையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது அவள் துணி துவைத்துக்கொண்டிருப்பது தெரிய கீழே இறங்கி அவளிடம் போனாள். அட்சயா வருவதை பார்த்து அவள் எழுந்து கொண்டாள். அட்சயா அவள் கணவன் குடித்துவிட்டு வருவதைப் பற்றி கேட்க,
“என்னம்மா பண்றது. சென்ரிங் வேலை பாக்குது. ஓடம்பெல்லாம் வலிக்கும். அதனால அது குடிக்கறதை நான் தடுக்கறதில்லை. அதேசமயம் ஓவராயிடக்கூடாதுன்னுதான் காலையில நாலு திட்டு திட்டி வைப்பேன்.’’ என்றாள் அவள்.

“ஆனா எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமா இருக்கு. இராத்திரியில குடிச்சுட்டு சண்டை போடற அந்த ஆளா காலையில நீ கழுவி ஊத்தறதை துடைக்காம கூட அப்படியே உட்கார்ந்திருக்காரு?’’
“அது குடிச்சா தாம்மா அப்படி செய்யும். இல்லன்னா பூனைமாதிரி இருக்கும். நானும் அப்படி திட்டி அனுப்பறதாலதான் அளவா குடிச்சுட்டு வருது. எப்பவாச்சும் சொல்லும் நானும் குடியை விட்டுடணும்னு பாக்கறேன், ஆனா முடியலேன்னு. ரொம்ப கண்ட்ரோல் பண்ணாலும் சரியா வராது. அட்ஜஸ் பண்ணி போறதுதானேம்மா வாழ்க்கை.’’ என்றாள்.  

வீட்டு போர்ட்டிகோவில் அப்பா காரில் வந்து இறங்குமுன் கேட்கும் ஹாரன் சத்தம் கேட்டது. “அட்சயா. இந்தாம்மா, அட்வகேட் நோட்டீஸ் ரெடி பண்ணி கொடுத்திருக்காரு. பாத்துட்டு சொல்லு’’ என்று கையில் வைத்திருந்த காகிதக் கவரை அவளிடம் கொடுக்க, அட்சயா அதைப் பிரித்துப் படித்தாள்.

“அப்பா என்னப்பா இது ரவி தினமும் குடிச்சுட்டு வந்து என்னை அடிக்கறதாவும், வரதட்சணை வாங்கிட்டு வரச்சொல்லி டார்ச்சர் பண்றதாகவும், வீட்டுல அடைச்சு வச்சு வெளியே விடாம கொடுமை படுத்தினதாகவும் போட்டிருக்கு. இதெல்லாம் எதையுமே அவர் செய்யலியேப்பா.’’

“அதெல்லாம் அப்படித்தாம்மா. அப்படி சொன்னாத்தான் விருப்ப விவாகரத்துக்கு ஒத்துவருவான்னு நம்ம லாயர் சொல்றாரு.’’

“அப்பா ரவி ஒரு தடவைதான் தப்பு செஞ்சாரு. அதுக்கும் மன்னிப்பு கேட்டுட்டாரு. இந்த நோட்டீஸைப் படிச்சா என்னைப்பத்தி என்ன நினைப்பாரு. எனக்கு விவாகரத்து வேணுமின்னா நானே நேரா போய் ரவி கிட்டே பேசி வாங்கிடுவேனே இதெல்லாம் எதுக்கு?’’

“வேணாம் வேணாம். நீ அங்கே போக வேணாம் அட்சயா. அவன் எதுனா உன்னை பண்ணிடுவான். மகாராணி போல இந்த வீட்டுலலே உன் விருப்பப்படி இரு. குழந்தையை நான் படிக்க வைக்கிறேன். அட்வகேட் எழுதியிருக்கறது சீக்கிரமா அவனை நம்ம வழிக்கு கொண்டு வர்றதுக்குக்காகதான்.’’ என்றார். சிறகு வளர்ந்துவிட்ட பறவைக்கு தங்கக்கூண்டு வேண்டுமா? அல்லது இணையோடு இரைதேடும் வானம் வேண்டுமா? இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது அட்சயாவுக்கு.

“நோட்டீஸூல வேற எதுனா சேக்கணும்னா சொல்லு. இல்லாட்டி நாளைக்கு காலையில அனுப்பிடச் சொல்றேன்.’’ என்ற தெய்வசிகாமணி படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார்.  
மிகுந்த யோசனைக்குப்பின் அட்சயா தன் கணவனுக்கு போன் போட்டாள், “ஏய் ரவி உன்னை இந்த ஒருமுறை மட்டும் மன்னிக்கலாம்னு இருக்கேன். இனிமே ஒழுங்கா இருப்பியா சொல்லு.’’
“சத்தியமா இருப்பேன் அட்சயா.’’

“இன்னொரு தடவை தப்புத்தண்டாவுக்கு போனே... செருப்பு பிஞ்சிடும், படவா ராஸ்கல்.’’ என்றவள் தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு ஷர்மியை அழைத்துக்கொண்டு “டிரைவர் காரை எடுங்க. சோழிங்கநல்லூர் போகணும்’’ என்றாள்.  

“அப்பாகிட்டே சொல்லியாச்சாம்மா?’’ என்று கேட்ட டிரைவரிடம் “அவர் தூங்கறார் நான் சொல்லிக்கிறேன்.’’ என்றாள்.

கார் மெல்ல நகர்ந்து மெயின் ரோட்டுக்கு வந்த பின் எப்எம் ரேடியோவை ஆன் செய்தார் டிரைவர், அதில் “அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்... இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கற வாழ்வே இனிக்கும்...’’ பாடல் ஒலிக்க பக்கத்துவீட்டுப் பெண் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது அட்சயாவுக்கு, ‘அட்ஜஸ்ட் பண்ணி போறதுதானேம்மா வாழ்க்கை.’

;