செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

உள்ளாட்சித் தேர்தலும், உப்புப்பெறாத காரணமும்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் என்று இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் போலிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு கண்டுபிடித்துச் சொல்லும் காரணங்கள் படுகேவலமானவை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அதிமுக அரசு தாக்கல் செய்த மனுவில் வாக்காளர் பட்டியல் தயார் ஆகாததால் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது அவ்வளவு கடினமான ஒன்றாகத் தெரியவில்லை. ஆனால் அதிமுக அரசு மட்டும் வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று கூறியே கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை தொங்கலில் விட்டுவருகிறது. இப்படியே போனால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர்கள் தயாராகவில்லைஎன்றோ அல்லது வாக்காளர்களே இல்லையென்றோ கூட அதிமுக அரசு மனுத்தாக்கல் செய்யும்.நீதிமன்றம் பலமுறை தலையிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கெடு விதித்த போதும், அதிமுக அரசு தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதிலேயே குறியாக உள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பதுசட்டம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்களுக்கு வாய்ப்பில்லை என்றால் சட்டம் ஒரு பொருட்டே அல்ல. உள்ளாட்சி அமைப்புகளை கொள்ளை யடிக்கவும், ஊழல் செய்வதற்காகவுமே உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து அதிமுக வினர் தள்ளி வைக்கின்றனர் என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் உடையது. தேர்தலை நடத்தாமல் சொத்துவரி, குப்பைவரி, குடிநீர்வரி என அனைத்து வரிகளையும் தாறுமாறாக ஏற்றி, மக்களை அதிமுக அரசுகொடுமைப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு குற்றம்சாட்டியுள்ளது ஆழ்ந்த பொருளுடையது.மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள்உள்ளாட்சி அமைப்புகளில் இல்லாததால் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடந்து கொண்டி ருக்கிறது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல வரியை உயர்த்தி மக்களை வஞ்சிக்கின்றனர். மறுபுறத்தில் குடிநீர், சாக்கடை போன்ற மக்களின்அடிப்படை வசதிகள் குறித்து கேட்க நாதியில்லை. தமிழகத்தில் கோடை வாட்டுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஆனால் எதுகுறித்தும் கவலைப்படாத ஒரு அரசுதான் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசை தூக்கி எறிவதுதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குரிய ஒரே வழியாகும். சட்டமன்ற இடைத்தேர்தல் அதற்கு வழிவகுக்கும் என்பது உறுதியாகும். மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசையும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி அரசையும் தூக்கியெறியவேண்டிய காலம் இது.


;