செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

நீக்க வந்தவர்கள்...? - ஆரூர் புதியவன்

‘நீக்கம்’ என்பதுதான்
அவர்களின் நெஞ்சில்
நீக்கமற நிறைந்திருக்கும்
நோக்கம்...!

நீக்கம் செய்து
தொலைக்காவிட்டால்
தொலையக் கூடும்
அவர்கள்
தூக்கம்...!

நீக்குதலுக்காக
அவர்கள் எத்தகைய
நீக்குப் போக்குகளுக்கும்
தயாராகி விட்டார்கள்...!

ஓயாதத் தாக்குதல்
உண்மையைப் போக்குதல்
பொய்மையை ஆக்குதல்
அனைத்துக்கும் காரணம்
அந்த ‘நீக்குதல்’

இந்நாட்டில்
ஆயிரமாயிரம் நீக்குதல்களைச்
செய்ய
அவதரித்துள்ள(?) அவர்கள்
370ஐ நீக்குவதும்
35ஏவை நீக்குவதும்
ஆச்சரியமில்லை...!

பணமதிப்பு நீக்கம்
செய்த போது
கதறிய தேசம் கண்டு
அவர்கள்
பதறவில்லை...!

சிக்கலைத் தீர்ப்பதாகச்
சொல்லி
மக்களைத் தீர்த்தார்கள்...!
சிறிதும் அதிராமல்
சிந்தை பதறாமல்...!

பசு மாட்டின் பெயரால்
அவர்கள்
பல மனித உயிர்களை
உடல்விட்டு நீக்கியபோது
அமைதியாய் இருந்து
அமைதியின்மையை 
ஆசீர்வதித்தார்கள்..!

ரஃபேல் விமானங்கள்
அணியணியாய்
ராணுவத்திற்கு வாங்கப்பட்ட போது
வெளிவந்த உண்மைகள் குறித்து
வெட்கப்படாத அவர்கள்,
நேர்மையைத் தங்களிடமிருந்து
எப்போதோ
நீக்கியிருந்தார்கள்...!

மக்களின் வாழ்விலிருந்து
நிம்மதியை நீக்கினார்கள்...!
சமூகங்களுக்கிடையே
சமாதானத்தை நீக்கினார்கள்...!
சண்டைகள் ஓயாதிருக்க
சமத்துவத்தை நீக்கினார்கள்...!
சதியாளர்களை வாழ்விக்க
சமூக நீதியை நீக்கினார்கள்...!
முன்னேற்றப் பாதையிலிருந்து
ஏழை எளியோரை
மொத்தமாய் நீக்கினார்கள்...!

மரண ஓலங்களும்
கண்டன முழக்கங்களும்
இங்கிதமற்ற இவர்களுக்கு
சங்கீதமாய் ருசித்தன...

அடைமழைப் படையெடுத்தபோது
தற்காலிகமாக வீட்டுக்குள்
தஞ்சம் புகுந்தவர்களை
இனி நீங்கள் இந்த
வீட்டை விட்டு
வெளியேறவே கூடாது
என மிரட்டுவதும் இவர்களே...!

வீட்டுக்குரியவர்களை
அந்நியர்கள் என்று
விரட்டுபவர்களும் இவர்களே...!

வரலாற்றில் இருந்து
உண்மைகளை நீக்கியவர்கள்,
கல்வியிலிருந்து
ஏழைகளை நீக்கியவர்கள்,
தேசியத்தின் பொருளைத்
தெரிந்தே நீக்கியவர்கள்,
அரசியல் சாசனத்தின்
பிரிவுகளை
அறமுரணாய் நீக்குவதில்
ஆச்சர்யம் என்ன...?

இந்தியாவிலிருந்து
ஜனநாயகத்தை
முற்றாக நீக்கும்
நாளுக்காக அவர்கள்
முழுமூச்சாய் உழைக்கின்றனர்..!

உறக்கத்தையும்
உள் முரண்பாடுகளையும்
நாம்
உடனே நீக்காவிட்டால்,

அவர்கள்
நம்மிலிருந்தே
நம்மை
நீக்கி விடுவார்கள்...
அவர்கள் விரும்பும்
அந்த ராஷ்ட்ரத்தை
ஆக்கி விடுவார்கள்...

;