செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

அறிவைச் சொட்டும் தேனடை - பழனி.சோ.முத்துமாணிக்கம்

ஆடிப்பாடி பள்ளிசெல்லும்
அழகுச் செல்லமே !—என்
அறிவுச் செல்லமே-கடல்
அலையைப்போல முயற்சிசெய்து
கற்க வேண்டுமே.

தேடித்தேடி நூல்கள்பல
கற்க வேண்டுமே—அமுதம்
பருக வேண்டுமே.

தென்பொதினித்  தென்றல்போல
அலைய வேண்டுமே - ஆர்வம்
வளர வேண்டுமே.

பனையைப்போல உயரநல்ல
பழக்கம் வேண்டுமே. பிறர்க்கும்
உதவ வேண்டுமே.

நினைவினிக்க நொங்கைப்போலக்
குழைய வேண்டுமே - நட்பில்
இழைய வேண்டுமே.

சாதிமதம் பாராமல்
வாழ வேண்டுமே - சமத்துவம்
காண வேண்டுமே.

மோதிவரும் காற்றைப்பாரு
வேற்றுமை உண்டா ?—உன்
மனதில் கொள்ளடா.

நல்லகல்விக் கூடங்களே
நமக்குப் பாசறை—அறிவைச்  
சொட்டும் தேனடை.

வில்லைப்போல வளைந்தபடி
விளையாட வேண்டும். உடலில்
வீரமும் வேண்டும்.

நாட்டுநலம் காட்டுநலம்
பேணும் ஆசையே- நெஞ்சில்
ஏற்றும் மேன்மையே
வீட்டுநலம் ஊரின்நலம்
உங்கள் கையிலே- கண்ணே
உணர்ந்து வாழ்கவே!
 

;