மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்தியஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. அதையடுத்து எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வருகிற எட்டாம் தேதி நடைபெறும் என்றும் அப்போது தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன் என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர்நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
ஆனால் விவசாயிகளின் பிரதிநிதிகள் வேளாண்விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச விலைக்கான ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடர்பாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாகவும் விவசாயிகள் எழுப்பிவரும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்துஅகங்காரத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினர். அது மட்டுமின்றி தேவையெனில் உச்சநீதிமன்றத்தை நாடுமாறும் அமைச்சர் தோமர் தெரிவித்ததாகவும் கூறினர். மத்திய அரசாங்கம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாதுஎன்ற முடிவில் இருந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினால் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்தாலும் தீர்வு ஏற்படப் போவதில்லை.ஆனால் நரேந்திர சிங் தோமர் இரு தரப்பினரும் போதிய பங்களிப்பை நல்க வேண்டியது அவசியமாகும் என்று கூறுகிறார். இந்த இரு தரப்பினரும் என்பதில் அரசு உட்பட்டது இல்லையா? விவசாயிகள் மட்டும்தான் விட்டுக் கொடுக்க வேண்டும்என்ற எண்ணத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு எவ்வாறு ஏற்படும்? விவசாயிகள் ஆரம்பம் முதலே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதேஎங்களின் பிரதான கோரிக்கை என்றே கூறிவருகின்றனர்.
ஆனால் அதுபற்றி பரிசீலிக்க முன்வராத மத்திய அரசு விவசாயிகளின் இதர கோரிக்கைகளை ஒப்புக் கொண்டதாக வெளியில் கூறி வருகிறது.முக்கியமான கோரிக்கையை மறுதலித்து விட்டுமற்றவற்றை ஏற்பதால் எப்படி தீர்வு ஏற்படும்?இந்நிலையில் தேவையெனில் உச்சநீதிமன்றத்தை நாடுமாறு அமைச்சர் கூறினால் அதன் சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்க நீதிமன்றத்துக்கு செல்லச் சொல்வது ஏன்? அர்த்தம் என்ன? ஆனால் மறுபக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ தகவல் தொடர்பு நிறுவனம் பஞ்சாப்மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் சென்றுள்ளது.
தற்போது நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சட்டங்களால் ரிலையன்ஸ் நிறுவனம் எவ்வித ஆதாயமும் அடையப் போவதில்லை என்றும் கூறியுள்ளது. இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. விவசாயத்தை ஒப்பந்த முறையில் நடத்துவதைபிரதானமாக கொண்டுள்ளதால்தான் அந்தச் சட்டத்தைவிவசாயிகள் எதிர்க்கின்றனர். அதனால்தான் பனியிலும், மழையிலும் கடும் குளிரிலும் 40நாட்களை தாண்டியும் அமைதியான முறையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அதை திசை திருப்பவும்சீர்குலைக்கவுமே அரசும் ரிலையன்சும் முயற்சிக்கின்றன. எனவே விவசாயத்தை பாதுகாக்க வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை மத்திய அரசு பரிசீலனை செய்திட வேண்டும்.இல்லையேல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.