headlines

img

கயமை இருள் அழிந்திட கதிரொளி சுடர் விடுக!

“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை“  

- என உழவுத்தொழிலை தலைமேல் வைத்து கொண்டாடினார் வள்ளுவ பெருந்தகை. 
‘வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம் 
போல் வேறு வேறு பொலிவு தோன்ற 
குற்றானா உலக்கையால் கலிச்சுமை                     வியாலங்கன்’ 

என்கிறது புறநானூறு. செந்நெல்லினை அறுத்து கரும்பினை கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட கூரை வீடுகளும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும், தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போல பொலிவுடன் காட்சி தருகின்றன என்று சங்க காலத்தில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என விவரிக்கிறார் குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர்.

உலகம் முழுவதும் பல்வேறு விழாக்கள் மதம் சார்ந்து கொண்டாடப்பட்டாலும், மண் சார்ந்தும், மனித உழைப்பு சார்ந்தும், இயற்கையோடு இணைந்த பெருவாழ்வை கொண்டாடும் வகை யிலும் அமைந்துள்ள திருநாளாக பொங்கல் திருநாள் விளங்குகிறது.

இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையி லான இயங்கியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள இடை வெளி விரிந்துகொண்டே போகிறது. இதுவரை பிரபஞ்சப் பெருவெளியில் உயிரினங்கள் வாழத் தகுதியுள்ளதாக பூமிக்கிரகம் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. அயல் கிரகங்களில் வாழும் வாய்ப்புகள் குறித்து அறிவியல் ஒரு பக்கம் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்க, இந்த பூமிப்பந்து உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டி ருக்கிறது என எச்சரிக்கவும் செய்கிறது விஞ்ஞானம்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்தின் வளர்ச்சிக்கு துணை செய்யும் கைக்கருவியாக இருக்க வேண்டுமேயன்றி அழிக்கும் ஆயுதமாக மாறிவிடக்கூடாது. சுற்றுச்சூழல்குறித்து உலகளா விய விவாதங்கள் நடைபெற்றாலும், முதலாளித்து வத்தின் கோரப்பசி மனித வாழ்வை கேள்விக் குறியாக்கிக் கொண்டே இருக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளும், பெருந்தொற்று நோய்க ளுக்கு பெரும் காரணமாகவும், அடுத்தடுத்து ஏற்படும் இயற்கைப் பேரிடர்களுக்கு இட்டுச் செல்வ தாகவும் இருக்கிறது என எச்சரிக்கின்றனர் ஆய்வா ளர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வை உறுதி செய்வதாக இந்த தைத் திருநாள் அமைந்திட வேண்டும். 

இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க  முயன்ற ஒன்றிய அரசின் திருத்தச் சட்டங்களை போராட்ட அடுப்பில் விறகு போல எரித்து வெற்றிப் பொங்கல் வைத்துள்ளனர் இந்திய விவசாயிகள். உழவர் திருநாளில் உவகையூட்டும் செய்தியாக இது உள்ளது. வாசலில் போடும் வண்ணக்கோல மாய்த் திகழும் தேசத்தின் பன்மைத்துவத்தை பாது காக்க வேண்டும் என்றும் சொல்கிறது பொங்கல் திருநாள். மதம் கடந்து உழவை, உழைப்பை, இயற்கையைக் கொண்டாடும் நாள் இது. இந்த மாண்புகள் நின்று நிலைக்கட்டும்.

;