games

img

விளையாட்டு...

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியா  தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்று  தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை

பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்க வேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.  இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற  முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாற்றுத்திறனாளி களுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை  நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த  வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றார். 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2020 டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், பாரீஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.

குண்டு எறிதலில் வெள்ளி வென்ற சச்சின் கிலாரி

பாரா ஒலிம்பிக் தொடரில் குண்டு எறிதல் போட்டி யில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி  ஆகஸ்ட் 28-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.  இந்நிலையில் ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) பிரிவின் இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் 16.38 மீட்டர் தூரம் வீசி தங்கமும், குரோசிய வீரர் 16.27 மீட்டர் தூரம் வீசி வெண்கலமும் வென்றனர்.

பாரா ஒலிம்பிக் வரலாற்றில் 21 பதக்கங்களை வென்ற இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  பாரா ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக  3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வென்ற 19 பதக்கங்களே அதிகபட்சமாக இருந்தது.